ஏழாம் வகுப்பு - தமிழ் - புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் - செயல்பாடு 10 , கதையினைக் கேட்டு விளக்கம் அளித்தல் / 7th TAMIL - ACTIVITY 10 - QUESTION & ANSWER

 


ஏழாம் வகுப்பு - தமிழ்

புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்

10 . கதையினைக் கேட்டு விளக்கம் அளித்தல்

கற்றல் விளைவு;

              தாங்கள் படித்த/ கேட்ட (சமூகம் / நகைச்சுவை / வீரசாகசம்) கருத்துகள் பற்றி விவாதிக்கவும், வினாக்கள் எழுப்பவும், விளக்கம் அளிக்கவும் இயலுதல்.

கற்பித்தல் செயல்பாடு:

      பேசப்பேசத்தான் பேச்சு திருத்தமாக அமையும். செந்தமிழும் நாப்பழக்கம் என்பதை அறிவீர்கள்தானே!

மன்னர் அக்பர், பீர்பால் காலத்தில் நடந்த நிகழ்வு ஒன்றைச் சொல்கிறேன்.   கவனமாகக் கேளுங்கள்.

     காட்டிற்கு வேட்டையாடச் சென்ற அக்பர் ஒரு குடிமகனின் முகத்தில் காலை   எழுந்ததும் விழித்ததால் தனக்கு விபத்து ஏற்பட்டதாக எண்ணி அவருக்குத் தண்டனை அளிக்கிறார். இதனைக் கண்ட பீர்பால் மன்னருக்குப் புத்தி புகட்டும் விதமாக "மன்னா! தாங்கள், அவர் முகத்தில் விழித்ததால் தங்களுக்குச் சிறுகாயம் மட்டுமே ஏற்பட்டது. ஆனால், அவருக்கோ உயிர்ச்சேதம் ஏற்படும் நிலை உள்ளதே. நீங்களே! புரிந்துகொள்ளுங்கள். இராசியில்லாதவன் யார் என்று? எனக்கூறினார். மன்னர் வெட்கித் தலைகுனிந்து அந்த அப்பாவியை விடுதலை செய்யுமாறு கட்டளையிட்டார்.

              மாணவர்களே!பீர்பாலின் மதிநுட்பத்தால் ஓர் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது என்பதை
இக்கதை வாயிலாக அறியமுடிகிறது. இது போன்றுகதை குறித்த உங்கள் கருத்துகளைக் கூறுங்கள்.

*************   *************   *************

மதிப்பீட்டுச் செயல்பாடு :

1. வகுப்பில் நடந்த பின்வரும் நிகழ்வினை வரிசைப்படுத்தி எழுதுக. இந்நிகழ்வினைக் கதையாகக் கூறுக.

எ.கா.

1. வளவனும் பாலனும் பேசிக் கொண்டிருந்தனர்.

2. வளவன் எல்லாருக்கும் முன்பாக முதலில் பள்ளிக்கு வந்துவிட்டான்.

3. வளவன், காலையில் உணவு உண்ணாமல் பள்ளிக்கு வந்தான்.

4. திடீரென்று வளவன் மயங்கி விழுந்தான்.

5. என்ன சத்தம்? எனக் கேட்டார்.

6. விழுந்த சத்தம்கேட்டு ஆசிரியர் உள்ளே வந்தார்.

2. கதையைப் படித்து வினாக்களுக்கு விடை எழுதுக.

எறும்பும் புறாவும்

           எறும்பு ஒன்று ஆற்றுநீரில் அடித்துச் செல்லும்போது மரத்திலுள்ள புறா ஒன்று
அதைப் பார்த்தது. உடனே மரத்தில் உள்ள இலையைப் பறித்து தண்ணீரில் போட்டது. அதைப் பார்த்த எறும்பு அந்த இலையின் மேல் ஏறி தப்பித்துக் கொண்டது. ஒருநாள் வேடன்
ஒருவன் மரத்திலுள்ள புறாவைக் கொல்வதற்காக வில்லில் இருந்து அம்பை எய்தினான். அப்பொழுது அதைப்பார்த்த எறும்பு, அவனது காலைக்கடித்து விடுகிறது. அம்புதிசைமாறிச் சென்று விடுகிறது. புறா அதை அறிந்து தப்பித்து விடுகிறது. உரிய காலத்தில் ஒருவர்
செய்யும் உதவியானது, அவருக்கு பல்வேறு நன்மைகளைப் பெற்றுத்தரும் என்ற நீதியை இக்கதை உணர்த்துகிறது.

வினாக்கள்:

1. இப்பத்தியில் இடம்பெறும் உயிரினங்களின் பெயர்களைக் குறிப்பிடுக.

2. புறா மரத்தில் உள்ள இலையைப் பறித்துத் தண்ணீரில் போட்டதற்கான காரணம் என்ன?

3. இக்கதையின்வழி உணரப்படும் பண்பு யாது? இப்பண்பு வெளிப்பட்ட நிகழ்வு
ஒன்றனைக் குறித்துப் பேசுக.

4. இக்கதையிலிருந்து இரண்டு வினாக்களை உருவாக்குகள்








Post a Comment

0 Comments