ஒன்பதாம் வகுப்பு - தமிழ்
இயல் - 1 , அமுதென்று பேர்
மதிப்பீடு
சிறுவினா - வினாக்களும் விடைகளும்
1 ) சங்க இலக்கியத்தில் காணப்படும் கடற்கலனுக்குரிய சொல், கிரேக்க மொழியில் எவ்வாறு மாற்றம் பெற்றுள்ளது?
சங்க இலக்கியத்தில் நாவாய், வங்கம், தோணி, கலம் எனக் கடற்கலன்கள் குறிக்கப்பட்டுள்ளன. இவற்றுள் 'கலன்' என்பது 'கலயு கோய்' எனவும், ‘நாவாய்' என்பது ‘நாயு' எனவும், ‘தோணி' என்பது "தோணீஸ்' எனவும், ‘எறிதிரை' என்பது 'எறுதிரான்' எனவும் கிரேக்க மொழியில் மாற்றம் பெற்றுள்ளது.
'எறிதிரை' என்னும் தமிழ்ச்சொல்தான் கிரேக்கத்தில் ‘எறிதிரேசியன் ஆப் த பெரிபுலஸ்' என்ற கடல்நூலாக விளங்குகிறது.
2 ) திராவிட மொழிகளின் பிரிவுகள் யாவை? அவற்றுள் உங்களுக்குத் தெரிந்த மொழிகளின் சிறப்பியல்புகளை விளக்குக.
* தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளு, குடகு, குவி, கோண்டா போன்ற மொழிகள், திராவிட மொழிகளின் பிரிவுகள் ஆகும்.
* தமிழ், தொன்மையும் இலக்கிய இலக்கண வளமும் உடைய மொழி. பிற திராவிட மொழிகளைவிடவும் தனித்து இயங்கும் மொழி; பிறமொழிக் கலப்புக் குறைந்த மொழி; பிற திராவிட மொழிகளின் தாய்மொழியாகவும் கருதப்படுகிறது.
* தேன்போன்ற இனிமையுடைய மொழி தெலுங்கு. இதன் எழுத்துமுறை, தேவநாகரியை ஒட்டி அமைந்தது; பாரதத்தை நன்னயப்பட்டர் தெலுங்கில் மொழிபெயர்த்தார்.
* கன்னடம், கர்நாடகம் திரிந்து கன்னடம் ஆயிற்று; கரு + நாடு + அகம் கருநாடகம் எனத்திரிந்தது என்பர்; இதன் எழுத்து, தெலுங்கை ஒட்டி அமைந்தது.
* மலையாளம், சேரநாட்டின் மொழி; தமிழோடு ஒத்த இனமொழி என்பர்; சேரநாட்டில் தமிழே பேச்சுமொழியாகவும், இலக்கிய மொழியாகவும் இருந்தது; மலையாள இலக்கியமாகிய இராமசரிதம், தமிழ் இலக்கியம் போலவே உள்ளது.
3 ) மூன்று என்னும் எண்ணுப்பெயர், பிற திராவிட மொழிகளில் எவ்வாறு இடம்பெற்றுள்ளது?
'மூன்று' என்னும் எண்ணுப்பெயர், தமிழில் 'மூன்று' எனவும், மலையாளத்தில் ‘மூணு' எனவும், தெலுங்கில் 'மூடு' எனவும், கன்னடத்தில் ‘மூரு' எனவும், துளுவில் ‘மூஜி' எனவும் இடம்பெற்றுள்ளது.
4 ) காலந்தோறும் தமிழ்மொழி தன்னை எவ்வாறு புதுப்பித்துக் கொள்கிறது?
* தமிழ்மொழி தனக்கெனத் தனித்த இலக்கண வளம் பெற்றுள்ளது; “பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையி னானே” என்கிறது நன்னூல்.
* தலைமுறைக்குத் தலைமுறை சிற்சில மாற்றங்களைப் பெற்று வளர்ந்து வரும் மொழியாக உள்ளது. சொற்கோவையை ஆயும்போது, பழஞ்சொற்கள் வீழ்ச்சியும், புதுச்சொற்கள் எழுச்சியும் பெற்றுப் பெருகி வருவதையும் காணலாம்.
* பழமைப் பண்புகள் மாறாமல் புதுப்பண்புகளோடும் தன்னைப் புதுப்பித்துக் கொள்கிறது.
0 Comments