ஏழாம் வகுப்பு - தமிழ் - புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் - 1 .மூவிடப் பெயர்களை அறிந்து கொள்ளுதல் / 7th TAMIL - ACTIVITY 1 - QUESTION & ANSWER

 

ஏழாம் வகுப்பு - தமிழ்

புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்

செயல்பாடுகள் - வினா & விடை



1மூவிடப்பெயர்களை அறிந்து   கொள்ளுதல்

கற்றல் விளைவு:

     மொழியின் இலக்கணக் கூறுகளைப் புரிந்துகொண்டு அவற்றைத் தம் எழுத்துகளில் கவனமாகப் பயன்படுத்துதல்.

கற்பித்தல் செயல்பாடு:

    ஒரு கருத்து குறித்து இருவர் பேசுவது உரையாடல் எனப்படும். இங்கே ஆசிரியரும் ராமுவும் பேசும் உரையாடலைப் படிக்கலாம்.

ஆசிரியர் : ராமு, நீ நலமா? விடுமுறையில் எங்குச் சென்றாய்?

ராமு : நான் நலம் ஐயா, நாங்கள் விடுமுறையில் குடும்பத்துடன் எங்கள் பாட்டியின் வீட்டிற்குச் சென்றோம்.

ஆசிரியர் : நீங்கள் அங்கு என்னவெல்லாம் செய்தீர்கள்?

ராமு : பாட்டி வீட்டில் உள்ள தோட்டத்திற்குச் சென்றோம். அங்கு ஆடு, மாடு, கோழி, நாய் போன்றவற்றைப் பார்த்தோம். அவை அனைத்துடனும் நான் மகிழ்ச்சியோடு விளையாடினேன். ஐயா!

இவ்வுரையாடலில் நீ, நான், நாங்கள், நீங்கள், அவை, நான் என்னும் பெயர்கள் வந்துள்ளன அல்லவா? இப்பெயர்கள் மூவிடங்களில் வரும் முறை பற்றித் தெரிந்து கொள்ளலாம். மூவிடங்கள், தன்மை, முன்னிலை, படர்க்கை ஆகும்.

* தன்மை - தன்னைக் குறிப்பது.

* முன்னிலை - முன்னால் இருப்பவரைக் குறிப்பது.

* படர்க்கை - இவ்விருவரையும் தவிர மற்றவற்றை / மற்றவர்களைக் குறிப்பது.

1. தன்மைப் பெயர்கள்: நான், யான், யாம், நாம், நாங்கள்.

2. முன்னிலைப் பெயர்கள்: நீ, நீர், நீவிர், நீங்கள்.

3. படர்க்கைப் பெயர்கள்: அவன், அவள், அவர், அது, அவை.

மூவிடப்பெயர்களில் ஒருமை, பன்மை

1. தன்மை ஒருமை: யான், நான்.
எ.கா. நான் பேசினேன்.

2. தன்மைப் பன்மை: நாம், யாம், நாங்கள்.
எ.கா. நாங்கள் கடற்கரைக்குச் சென்றோம்.

3. முன்னிலை ஒருமை: நீ

எ.கா. நீ என்ன செய்தாய்?

4. முன்னிலை பன்மை; நீர், நீங்கள், நீவிர், நீயிர்.

எ.கா. நீங்கள் பார்த்தீர்களா?

5. படர்க்கை ஒருமை: அவன், அவள், அது

எ.கா. அவள் நடனம் ஆடினாள்.

6. படர்க்கை பன்மை: அவை.

எ.கா. அவை நீந்தின.

*************   **************   ************

மதிப்பீட்டுச் செயல்பாடு

                        மேலே கற்றவற்றை அடிப்படையாகக்கொண்டு பின்வரும் செயல்பாடுகளைச் செய்வோமா?

1. பொருத்தமான சொல்லைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

நான் கடைக்குச் சென்றேன்.

நாங்கள் கடைக்குச் சென்றோம். (நாங்கள் / யான்)

2. இடப்பெயர்களின் வகைகளை வட்டமிடுக.

பெயரெச்சம், தன்மை, படர்க்கை, ஓடினான் , வினையெச்சம், முன்னிலை

3. அடிக்கோடிட்டச் சொல்லின் இடப்பெயரை எழுதுக.

நீங்கள் நேற்று கோயிலுக்குச் சென்றீர்களா?

நீங்கள் - முன்னிலை

4, கோடிட்ட இடத்தை நிரப்புக.

ராணி பள்ளிக்கு வந்தாள். அவள் தோழிகளுடன் விளையாடினாள்.

இத்தொடரில் அவள் என்பது படர்க்கை 
இடத்தைக் குறிக்கிறது.

5. ஒருமைக்கேற்ற பன்மையுடன் பொருத்துக.

அ.  நான்   - நாங்கள்

ஆ )  நீ          -  நீங்கள்

இ ) அது      -  அவை

    
6 . பின்வரும் தொடர்களில் அடிக்கோடிட்ட சொற்களைப் பொருத்தமான கட்டத்தில்
எழுதுக.

1. தாய் தந்தையரை நாம் மதித்து வாழவேண்டும்.

2. யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.

3. தாயே நீ அருள் புரிவாய்.

4. அவர்கள் சமாதானத்தின் முன்னோடிகள்.

5. அவர் சிறந்த பாடகர்.

6. அவள் நற்குணம் உடையவள்.

7. நீங்கள் பாட்டுப்பாடி ஆடுங்கள்.

8. நான் ஒரு சமாதானப் பிரியன்.

9. நீவிர் கடமையைச் சரியாக செய்வீர்கள்.

10. நீர் வீட்டிற்குச் சென்று மாலையில் என்ன செய்வீர்?

தன்மை  - நான் , நாம்  , யாம் 

முன்னிலை  - நீ , நீர் , நீவிர் , நீங்கள்

படர்க்கை  - அவள் , அவர் , அவர்கள்

****************    *************   **********


Post a Comment

0 Comments