கவியரசு கண்ணதாசன் அவரைப் பற்றிப் பாடிய பாடல்கள்.
கவிஞர் கண்ணதாசனின் வாழ்வில் வறுமையும் உண்டு. திறமையும் உண்டு. கடவுள் இல்லையெனக் கூறிய துணிவும் உண்டு. கடவுளை நெஞ்சாரத் தொழுது நின்ற பணிவும் உண்டு.
'ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு
ஒரு கோல மயில் என் துணையிருப்பு
இசை பாடலிலே என் உயிர்த்துடிப்பு நான்
காண்பதெல்லாம் அழகின் சிரிப்பு"
என்று பாடிய புதுமையும் உண்டு. நாளும் ஒவ்வொரு கட்சியெனத் தாவிய கவிஞர்
'கல்லாய் மரமாய்க் காடுமேடாக
மாறா திருக்க வனவிலங் கல்லன்
மாற்றம் எனது மானிட தத்துவம்
மாறும் உலகின் மகத்துவம் அறிவேன்
எவ்வெவை தீமை எவ்வெவை நன்மை
என்ப தறிந்தே ஏகுமென் சாலை"
- என்று புதுவிளக்கந் தருவார். திறனாயாவாளர் அவரை ஆராயும்முன்னே தன்னைத் தானே ஆய்வு செய்து பாடுதல் காண்போம்.
'கடவுள் ஒருநாள் கல்லென்றவனும்
கல்லை ஒருநாள் கடவுளென்றவனும்
உண்டென் றதனை இல்லையென்றவனும்
இல்லையன்றவனை உண்டென்றவனும்
உயர்பெரும் தரணியில் ஒருவன் ஒருவனே
நானே என்பதை நன்றாய் அறிவேன் "
என்று பாடிய கவிஞர் தனது செயற்பாடுகள் குறித்துத் தொடர்ந்து பாடும்போது,
"ஆற்றிலும் குளித்தேன் சேற்றிலும் குளித்தேன்
காற்றில் பறந்தேன் கல்லிலும் நடந்தேன்
ஊற்றுப்புனலில் ஒளியினைக் கண்டேன்
மாற்றுப் பொன்னிலும் மாசினைப் பார்த்தேன்
பார்த்தது கோடி பட்டது கோடி
சேர்த்தது என்ன ? சிறந்த அனுபவம் "
* இருபதாம் நூற்றாண்டுக் கவிஞரான கவியரசு கண்ணதாசன்பழைய இராமநாதபுர மாவட்டத்தில் இன்றைய சிவகங்கை மாவட்டம் சிறுகூடற்பட்டியில் 24.6.1927 ல் பிறந்தார்.
* நகரத்தார் இனத்தவர் . 54 ஆண்டுகளே வாழ்ந்தார். 1981 ல் மறைந்தார்.
* முத்தையா என்பது இயற்பெயர். எட்டாவது பிள்ளையாக பிறந்தார். எட்டாம் வகுப்பு வரை படித்தார்.
* வறுமையின் காரணமாகப் படிப்பைத் தொடர முடியாத நிலையில் ஊரைவிட்டு வெளியேறினார்.
* சிறு வயது முதலே கவிதை இயற்றும் ஈடுபாடு கொண்டவராக திகழ்ந்தார்.
* 'திருச்சி, சென்னை போன்ற இடங்களில் பணிபுரிந்தார்.
* திருமகள் பத்திரிகையில் பணிபுரிந்த போது 1944 ம் ஆண்டு இவரது முதல் கவிதை வெளிவந்தது.
* தென்றல், மேதாவி, பொன்னி, திரைஒலி ஆகிய பல இதழ்களில் பத்திரிகை பணி புரிந்தார்.
* 1949 ஆம் ஆண்டு திரைப்படத் துறைக்குள் நுழைந்தார். நகைச்சுவை உரையாடல்கள், திரைப்படப் பாடல்கள் பல எழுதினார்.
* பகுத்தறிவுப்பாசறை உறுப்பினரானார். திராவிட இயக்கத்தில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார். கலைஞர் கருணாநிதியோடு
தொடர்பு ஏற்பட்டது. கருத்துக்கள் மாறும் போதெல்லாம் கட்சி பலவற்றில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார்.
* அவரது பாடல்கள் பல திரையிசைப் பாடல்களாகத் தொகுக்கப்பட்டுள்ளன. அப்பாடல்களில் சொல், பொருள்,
சந்த நயங்கள் காணப்படுகின்றன. அவரது வாழ்க்கைச் சரித்திரங்கள் அவற்றுள் ஒளிவிடுகின்றன.
* தைப்பாவை, மாங்கனி போன்ற குறுங் காப்பியங்களையும் இயற்றினார்.
0 Comments