காலத்தை வென்ற கலாம் !
உலக மாணவர் தினம்
15 • 10 • 2021
தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று "
( குறள் - 236 )
இந்திய மக்களிடமும் , குழந்தைகளிடமும் கலாமின் கருத்துகள் கதிர்களாய்ப் பரவி காலம்தோறும் உயர்விக்கும் கற்பகத் தருவாகக் கைவரப் பெற்றது தமிழ்நாடு. அத்தகு திருநாளை ஆண்டு முழுதும் கொண்டாடி மகிழ்ந்து சிறப்புறுவோம்.
சோழ மண்டலக் கடற்கரையோரம்
மெல் அலைகள் தாலாட்ட
இளவெயில் பட்டு பொன்மணல் மின்ன
நாரைகளும் சீகல் பறவைகளும்
ஆனந்த நர்த்தனமாடும்
நெய்தல் நிலத்தில்
இந்திய விண்வெளியின் விடிவெள்ளி
மின்னத் தொடங்கியது -- ஆம் !
1931 -- அக்டோபர் 15 - அன்று
அற்புதமே வடிவமாய்!
அன்பே உதயமாய் !
ஆர்வமே இதயமாய் ! -- புதியன
படைப்பதற்காகவே இறைவன்
மற்றொரு இறைவனைப் படைத்தான்.. ஆம்
கலாமெனும் பெயர்கொண்டு
காவிய நாயகர் தோன்றினார் .
" எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்."
( குறள்- 666 )
என்ற வள்ளுவர் வரிகளுக்கு வடிவம் கொடுத்து , சாதனை படைத்த சரித்திர நாயகன் , இளைஞர் மனம்தனில் சோதனைப் பல கண்டாலும் சாதனையைக் காணத் தூண்டுகிறார். மாணவ --மாணவிகளைச் சந்தித்து தம் எண்ணத்தை ஈடேற்றி, வைரவார்த்தை தனை மாணவ உள்ளங்களில் புகுத்தி வைராக்கிய வழியைக்காண வடிவமைத்தார் . அதுமட்டுமல்லாமல் நாட்டின் எதிர்காலம் சிறக்க ஆர்வம் காட்டி , ஆசிரியர்களையும் நற்பணிகள் ஆற்றிட ஊக்குவித்தார். இவ்வாறு நாட்டின் உயரிய பதவியான குடியரசுத் தலைவராக, விஞ்ஞானியாக, சாதனை நாயகனாக, இந்திய ஏவுகணையின் தந்தையாக விளங்கியவரை , நாட்டின் எதிர்கால வளர்ச்சியையும், பாதுகாப்பையும் பற்றிய தொலைரோக்குப் பார்வையைக் கொண்ட , கலாம் அவர்களின் பிறந்த தினத்தில் இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடுவதில் பெரும் மகிழ்ச்சியாக போற்றுவோம்.!
தம்வாழ்நாளில் பெரும் பகுதியை மாணவர்களுக்காக செயலாற்றியும் , மாணவர்களின் முன்மாதிரியாகவும் விளங்கிய ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாள் 2010 -- ஆம் ஆண்டு ஐக்கிய நாட்டுச் சபையால் " உலக மாணவர் தினமாக" அறிவிக்கப்பட்டு , கொண்டாடப்பட்டு வருகிறது.எனவே உலக மாணவர் தினம் மகத்துவம் கொண்டாடும் தினமாக ஆராதிக்கப் படும் ஆனந்தத் திருநாளாகும்.
இயற்கைக்குள் ஒளிந்திருக்கும் அரிய பொக்கிஷமாகியச் செய்திகளைக் உணர்ந்து அவற்றின் பயன் அறிய உலகிற்கு தருவதே விஞ்ஞானம். இவை மக்களின் வாழ்க்கைக்குப் பெரிதும் உதவியாக இருக்கின்றன. தொன்மைக் காலம் தொட்டே அறிஞர்கள் பலர் தங்களின் அயராத கண்டுப்பிடிப்புகளை உலகிற்கு வழங்கி , மாணவர்களையும், இளஞர்களையும் ஊக்கப்படுத்தி நல்வழியை நல்குகின்றனர்.
சாதாரண படகோட்டியின் மகனாகப் பிறந்து , பல ஏவுகணைகளை இந்தியாவில் கண்டுபிடிக்க முதல் காரணமாகத் திகழ்ந்தவர் அப்துல் கலாம் அவர்கள். எனவே இவரது பிறந்த நாளைக் கொண்டாடும் விதமாக அரிய கண்டுபிடிப்புச் செய்திகளை அறிந்துக்கொள்வது அனைவரின் கடமையாகிறது.
பேராசிரியர்கள் போற்றிய பெருமைமிகு மாணவராக :
எம் . ஐ . டி யில் மூன்று மற்றும் நான்காம் ஆண்டு பொறியியல் படிப்பைத் தொடர்ந்த நேரம் , ஒரு போர்விமானத்தை வடிவமைக்கும் திட்டப்பணி அப்துல்கலாம் மற்றும் நான்கு மாணவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. டைனமிக் டிசைன் வரையும் பொறுப்பை கலாம் எடுத்துக் கொண்டார். அப்போது எம்.ஐ.டியின் இயக்குனர், பேராசிரியர் ஸ்ரீனிவாசன் கலாம் குழுவினரின் செயல்பாடுகளை ஆய்வு மேற்கொண்டதில் அதிருப்தியடைந்தார். இருப்பினும் மூன்றுநாட்கள் கெடுவில் திட்டவரைபடம் தயாரிக்கும் பணியைக் கொடுத்தார். இதன்காரணமாக கலாம் இரவு , பகல் காணாது செம்மையாக அப்பணியினைச் செய்து முடித்து பாராட்டப்பட்டார். பேராசிரியர் ஸ்ரீநிவாசன், கலாம் அவர்களைத் தட்டிக்கொடுத்து அணைத்துக் கொண்டார். மூன்று நாட்களில் யாராலும் செய்து முடிக்க இயலாது என்பதே உண்மை ஆனால் நீங்கள் அந்தச் சோதனையையும் சவாலாக ஏற்று வென்றுவிட்டீர்கள் என்று பாராட்டி மகிழ்ந்தார்.
பேராசிரியர் ஸ்பான்டர் :
எம்.ஐ.டி. தமிழ்ச்சங்கம் நடத்திய " நமது சொந்த விமானத்தை நாமே உருவாக்குவோம் " என்னும் கட்டுரைப் போட்டியில் கலாம் அவர்கள் கலந்து கொண்டு முதல் பரிசை வென்று பாராட்டைப் பெற்றார். பட்டப்படிப்பை முடித்த மாணவர்கள், பிரிவுபசார விழாவில் பேராசிரியர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுப்பதற்கான சமயம்.கலாம் மூன்றாம் வரிசையில் நின்று கொண்டிருந்தார். அப்போது பேராசிரியர் ஸ்பான்டர் எழுந்து அப்துல் கலாமைத் தேடி முன்வரிசையில் அமருமாறு அறிவுறுத்தினார். ஆனாலும் கலாம் முன் வரிசை பேராசிரியர் களுக்கானது என்பதால் தயங்கினார். அவற்றை அறிந்த பேராசிரியர் ஸ்பான்சர் ,
" என்னுடைய தலைசிறந்த மாணவன் நீங்கள் . எதிர்காலத்தில் உங்களுடைய ஆசிரியர்களுக்குப் புகழ் சேர்ப்பதற்கு கடும் உழைப்பு உங்களுக்குத் துணை நிற்கும்" என்று வாழ்த்தினார்.அப்படியொரு வாழ்த்தையும், வரவேற்பையும் எதிர்பார்க்காத கலாம் மகிழ்ச்சியுடன் முன்வரிசையில் பேராசிரியர் ஸ்பான்டருக்கு அருகில் அமர்ந்து கொண்டார்.
மீண்டும் பேராசிரியர் ஸ்பான்டர் வாழ்த்து :
" கடவுள் உங்களுடைய நம்பிக்கையாகவும் , ஜீவனாகவும், வழிகாட்டியாகவும் , இருந்து உங்களுடைய எதிர்காலத்தை நோக்கிய பயணத்தின் ஒவ்வொரு அடியிலும் ஒளி வழங்கட்டும் " என மீண்டும் வாழ்த்தி மகிழ்ந்தார்.
அமெரிக்கரின் அன்பால் நெகிழ்ந்த கலாம்
1942 - ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் நடைபெற்ற முதல் ஏவுகணை தோல்வி அடைந்தது. 1942 - ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16 -- ஆம் நாள் நடைபெற்ற சோதனை வெற்றிகரமாக முடிந்தது. வெகு வேகமாக விண்ணில் சீறிப் பாய்ந்த அந்த ஏவுகணை ஒலியின் வேகத்தை மிஞ்சிய முதல் ஏவுகணை என்ற பெருமையையும் பெற்றது. அதனைத் தொடர்ந்து வன் பிரானின் தலைமையில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஏவுகணைகள் தயாரிக்கப் பட்டன.
இரண்டாம் உலகப் போரின்போது லண்டனை சிதைத்த V2 ஏவுகணைகளைத் தயாரித்தவர் வன் பிரான். அத்தகைய மிகப்பெரிய விஞ்ஞானியை அப்துல் கலாம் சந்திக்கப் போகிறார். பரவசத்தில் எல்லையற்ற மகிழ்ச்சியடைந்தார் கலாம் . ஏனெனில் இந்திய விஞ்ஞானிகளைக் காண வரும் வன் பிரானை , சென்னை சென்று அழைத்து வரும் பொறுப்பைப் பெற்றார் கலாம். வன் பிரானை அழைத்துக் கொண்டு தும்பாவை அடைந்தார் அப்துல் கலாம் . பின் குழுவினரின் பணிகள் பற்றி விசாரித்து அறிந்து கொண்டார் வன் பிரான் . ராக்கெட் தொழில் நுட்பத்தைக் கற்றுக்கொள்ளும் மாணவன் போல தன்னைக் காட்டிக்கொணடார்.
நவீன ராக்கெட் தொழில்நுட்பத்தின் தந்தை வன் பிரான்
" பணிதலே பண்பு என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறார். அந்தப் பண்பு அப்துல் கலாமை வெகுவாகக் கவர்ந்தது.
கலாமிடம் வன் பிரான் உதிர்த்த வார்த்தைகள் :
" பெரும் வாய்ப்புகள் குவிந்துள்ள ஒரு தேசம் அமெரிக்கா. ஆனால் அமெரிக்கர்கள் அல்லாத யார் எதைச் செய்தாலும் அதை சந்தேகமாகவும், இகழ்ச்சியாகவும் பார்க்கின்றனர் . இங்கே கண்டுபிடிக்கப்படாத விஷயம் என்ற ஆழமாக வேரோடிவிட்ட மனோபாவம் அவர்களைப் பீடித்துள்ளது. அன்னிய தொழில்நுட்பங்கள் எல்லாம் அவர்களுக்கு இரண்டாம்பட்சம்தான். ராக்கெட் தொழில்நுட்பத்தில் ஏதாவது நீங்கள் சாதிக்க விரும்பினால்நீங்களாகவே சொந்தமாகச் செயல்படுங்கள்" என்று கூறி முடித்தார். தொடர்ந்து பல ஆலோசனைகளையும் கூறினார்.
ஏவுகணை நாயகன் :
எஸ்.எல்.வி.3 -- தோல்வியடைந்ததை அடுத்து 1980 -- ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அடுத்த ஆய்வு தொடங்கியது.70 -- க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் பங்கு பெற்றனர். முதலாவதாக எஸ்.எல் வி.3 - தோல்விக்கான காரணம் பற்றிஆராய்ந்தனர். தோல்விக்கான முழுப் பொறுப்பையும் அப்துல் கலாமே ஏற்றுக்கொண்டார். அதன் பின்னர் எல்லோரும் புதிய உத்வேகத்துடன் தங்கள் பணியில் ஈடுபட்டனர். கலாமுக்கு பெரிதும் உதவியாக இருந்தவர்கள் சுதாகர் , சிவராம கிருஷ்ணன், சிவகாமி நாதன் போன்றோர் .
டிராஸ்ஸ்பாண்டர்:
எஸ்.எல்.வி மூன்றில் பொருத்துவதற்காக சி --- பான்ட் டிரான்ஸ்பாண்டரை ஸ்ரீஹரி கோட்டாவிற்கு கொண்டு சேர்க்கும் பொறுப்பு சிவகாமி நாதனிடம் ஒப்படைக்கப் பட்டது. ராக்கெட் தளத்திலிருந்து கிளம்பியது முதல் திட்டமிட்ட உயரத்தைச் சென்றடையும் வரையில் ரேடார் சிக்னல்களைத் தொடர்ந்து அனுப்பிக் கொண்டே இருக்க இச்சாதனம் பயன்படுகிறது.
1980-- ஜூலை மாதம் 18 -- ஆம் நாள் காலை 8.30 -- மணிக்கு இந்தியாவின் முதல் செயற்கைக் கோள் விண்ணிற்குக் கிளம்பியது . அப்துல் கலாம் 600-- நொடிகளுக்குப் பின்னரே கணினித் திரையைப் பார்க்கிறார். அதில் ரோஹினி செயற்கைக் கோளை அதன் திட்டப் பாதையில் செலுத்த ராக்கெட்டின் நான்காவது கட்டம் தயாராகிக் கொண்டிருந்த தகவல்களைப் பார்த்தார். அடுத்த இரண்டு நிமிடங்களில் ரோஹினி அதன் பாதையில் சுற்றத் தொடங்கியது. தான் வென்று விட்டதை உணர்ந்தார் அப்துல் கலாம். பின்பு மிக முக்கியமான வார்த்தைகளை கண்களில் கண்ணீர் தளும்ப பேசத்தொடங்கினார். திட்டமிட்ட படி எல்லாக் கட்டங்களும் செயல்பட்டுள்ளன. ரோஹினி அதன் திட்டப் பாதையில் தேவையான திசை வேகத்துடன் நான்காவது கட்ட மோட்டார் செலுத்தியுள்ளது " என்று அறிவித்தார் .
மகிழ்ச்சியில் திளைத்தநேரம் :
அப்துல் கலாம் அறையை விட்டு வெளியே வந்தார். மகிழ்ச்சியில் , ஆர்ப்பரிப்பில் விஞ்ஞானிகள் அனைவரும் ஓடிவந்து அவரைத் தங்கள் தோள்களில் தூக்கிக் கொண்டு ஊர்வலமாகச் சுற்றி வந்தனர். அன்றைய செய்தித்தாள்கள் பரபரப்புச் செய்தியாக வெளியிட்டன. வானொலி , தொலைக்காட்சி போன்றவற்றில் சிறப்பு நிகழ்ச்சிகள் ஒலி ஒளிபரப்பப்பட்டன.
இந்திய மக்களின் ஆரவாரம் :
செயற்கைக் கோள் ஏவும் திறன் கொண்ட குறிப்பிட்ட சில நாடுகளின் அணியில் இந்தியாவும் இடம் பிடித்தது என்பதே அன்று உலகம் முழுவதும் பிரதானச் செய்தியாக இருந்தது. இஸ்ரோ தலைவராக வீற்றிருந்த சதீஷ் தவான் இப்படி அறிவித்தார். " விண்வெளியை ஆய்வு செய்யும் ஆற்றல் இப்போது நமக்கு வசப்பட்டு விட்டது" என்றார்.நாடாளுமன்றக் கூட்டத்தில் உறுப்பினர்கள் மேசைகளைத் தட்டி தங்கள் மகிழ்ச்சியை ஆரவாரமாக தெரிவித்தனர் . விஞ்ஞானிகள் அனைவருக்கும் பிரதமர் இந்திரா காந்தியிடம் இருந்து வாழ்த்துச் செய்திகள் வந்து சேர்ந்தன.
பாரதப் பிரதமரின் பெருமிதம் :
பிரதமர் தலைமையிலான அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான பாராளுமன்றக் கூட்டத்தில் பிரதமர் இந்திரா காந்தி இஸ்ரோ விஞ்ஞானிகளின் சாதனையைப் பாராட்டிப் பேசினார். பின்னர் அப்துல் கலாமைப் பார்த்தார் .
" கலாம் நீங்கள் பேசுவதைக் கேட்க நாங்கள் விரும்புகிறோம் " என்றார் . கலாம் பேசியது.
" தேசத்தை நிர்ணயிப்பவர்களின் இந்த மகத்தான கூட்டத்தில் நான் கலந்து கொண்டதை பெரும் கெளரவமாகக் கருதுகிறேன். நமது நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஒரு செயற்கைக் கோளைச் சுமந்துக் கொண்டு மணிக்கு 25,000 கி.மீ வேகத்தில் பாய்ந்து செல்லும் ஆற்றல் கொண்ட ஒரு ராக்கெட்டை நமது நாட்டிலேயே எப்படித் தயாரிப்பது என்பதை மட்டுமே அறிந்தவன் நான் . இந்த வாய்ப்பினை வழங்கி , எங்கள் குழுவின் அறிவியல் வல்லமையை நிரூபிக்க வைத்ததற்கு நன்றி" என்று அவர் கூறிமுடிக்க கரவொலியால் அரங்கம் அதிர்ந்தது.
இந்த வெற்றியின் நாயகனாக அப்துல் கலாம் முன்னிலைப்படுத்தப் பட்டதால், மூத்த விஞ்ஞானிகள் சிலரின் வெறுப்புக்கு கலாம் ஆளாக நேர்ந்தது.
" பாராட்டுகளில் மயங்கி , முடங்கிப் போய் விடவும் கூடாது . ஏச்சுகளுக்குப் பயந்து , தளர்ந்து விடவும் கூடாது ' என்று அப்துல் கலாம் உறுதி பூண்டார்.
இந்தியா வல்லரசு ஆகும் என்று உரக்கச் சொல்லி மாணவர்களையும், இளைஞர்களையும் உற்சாகப் படுத்தியவரை உலகம் உள்ளவரை வணங்குவோம்.!
ஏவுகணை நாயகன் அப்துல் கலாம் " -- என்ற நூலிலிருந்து தொகுக்கப் பட்டது.
0 Comments