கொஞ்சும் கவிதை - கொஞ்சம் கவிதை

 

கொஞ்சம் கவிதை  - கொஞ்சும் கவிதை

ஆகாயமெங்கும் அலைந்து

ஆழங்களில் அமிழ்ந்து 

முத்துக்குளிக்கும் மனதை

மூச்சிமுட்ட வெளியேற்றி

சொட்ட சொட்ட நிற்கவைத்து

சாதாரணமாய் கேட்கிறாய் 

என்ன சிந்தனையென!


ஒன்றும் இல்லை என்றபடியே

ஒவ்வொன்றுக்குள்ளாய்

குதித்து குளிர்ந்தெழும் 

என் குதுகலத்துக்கு

குறைவேதும் இல்லை

தள்ளி நகரும் 

சக்கர நாற்காலியிலிருந்து 

துள்ளி ஓடிட முடியா 

தவிப்பைத் தவிர.

                              

மீட்சியின் மீளாமை


கரையெங்கும் கண்டெடுக்கப்படும் 

கண்கவர் சிப்பிகள்

கடற்காற்றை உள்ளடக்கிய 

சலசலப்பில் சங்குகள்

முங்கி எழுந்த உற்சவத்தில் 

காணாமற்போன காதணிகள்

ஓசையற்ற உளைச்சலில் 

ஒதுங்கி கிடக்கும் 

ஒற்றை கொலுசுகள்

ஈர பாதங்களை 

பற்றியே நடக்கும் 

மணற்துகள்கள் என

எடுத்து செல்வோற்கு 

ஏராளமும் தாராளமும் 

இருக்கின்றன

கொடுத்துவிட்டு செல்வதற்கோ 

கொடுப்பினையின்றி

முந்தியடித்து வரும் 

அலையின் துள்ளலில்

முன்னும் பின்னுமாய் தள்ளப்பட்டு

விரிந்த விரல்களோடு 

விடப்பட்டு நிற்கிறேன்..

அலைந்தோடி வரும் இசைக்காற்று

அடிநெஞ்சில் ததும்பியெழும்  

நினைவு வடுக்களை 

ஆறத்தழுவி ஆறுதல் பேசி

இணக்கமாய் இறுக்குமாயின்

இலகி உருகி 

விலகாமல் இருக்குமோ 

அந்த இறுமாப்பான 

இறுக்கம்!

     ************   *********   *************                                    

கடற்காற்றின் கால்களையும்

கடலலையின் கைகளையும்

கடன் வாங்கி கொண்டு 

கடுகடுக்க தேடிக்கொண்டிருக்கும்

அவனுக்கு 

கிடைக்கப்போவதில்லை அவள்

தான் தொலைத்து விட்டது 

நிச்சயம் என தெரிந்தும்

ஏதோ ஒன்றின் உந்துதலில்

ஏதோ ஒன்றினை ஊன்றியபடி

தேய்ந்த நிலவின் சாயலாய்

தேம்பி நிற்கிறான் அவன்

யாரும் தேற்றி பார்க்க வேண்டாம் 

தோற்று போவீர்கள்

அதற்குத்தானே இருக்கிறான் கடலில்

அதற்குத்தானே இருக்கிறது கடலும்..

                          

கவிஞர். ~ஷினோலா

Shinola.R

M.Phil (English)

Kumbakonam, Tanjore.

**************   **************    *************








Post a Comment

0 Comments