நலம் தரும் நவராத்திரித் திருவிழா
இந்தியாவில் கொண்டாடப்படும் சிறந்த விழாக்களில் ஒன்று . இந்த நவராத்திரியென்பது மக்களுக்கு தாங்கவொண்ணாத் தீமைகளைத் தந்து கொண்டிருந்த மகிஷாசுரனை அன்னை ஆதிபராசக்தி வதம் செய்த வரலாறே நவராத்திரி. இது என்பது ஒன்பது இரவுகள் எனப் பொருள்படும். நவ என்பது ஒன்பது என்றும் , ரத்ரி என்பது இரவு என்றும் 2021 - ஆம் ஆண்டு நவராத்திரி அக்டோபர் 7 - ம் நாள் தொடங்கி 15 - ம் நாள் முடிவடைகின்றது.
நவராத்திரி என்பது ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் பத்து நாட்கள் நாடு முழுவதும் வெகு விமரிசையாக இவ்விழா கொண்டாடப்படும். வட இந்தியாவில் இது தீமைக்கு எதிராக நன்மை வெற்றி பெற்றதாகக் கொண்டாடப் படுகிறது. விழாவில் துர்க்கைஅம்மனின் ஒன்பது அவதாரங்கள் வழிபடப்படுகின்றன.
நவராத்திரியின் வேறுபெயர்கள் :
நவராத்திரிக்கு வெவ்வேறு மாநிலங்களில் வெவ்வேறு பெயர்களுடன் கொண்டப்படுகின்றன. அவை தசரா , தசைன், தசஹரா, தசேரா ஆகிய பல வகையான பெயர்களுடன் கொண்டாடப் படுகிறது.
தசரா தோன்றிய வரலாறு :
மகிஷாசூரன் என்னும் அசுரத் தலைவன் மூன்று உலகங்களையும் ( பூமி , சொர்க்கம், நரகம் ) தன் கட்டுப் பாட்டில் வைத்துக் கொடுமைகள் பல புரிந்து வந்தான். அவனை வதம் செய்ய ஒரு மாபெரும் சக்தி தேவைப்பட்டது இந்தச் சோதனையிலிருந்து விடுபட பிரம்மா ஒரு பெண்ணால் மட்டுமே மகிஷாசூரனை வீழ்த்த முடியும் என்ற வரம் அளித்தார்.
எனவே பிரம்மா, விஷ்ணு , சிவன் எனும் மும்மூர்த்திகள் தங்கள் சக்திகளை ஒன்றுதிரட்டி மகிஷாசூரனை வதம் செய்ய துர்க்காதேவியை உருவாக்கினர் எனப் புராணம் வழியாக அறியப்படுகிறது. அசுரனுக்கும் இறைவிக்கும் இடையிலான இப்போர் 15 -- நாட்கள் நீடித்தது இறுதியில் பராசக்தி அசுரனை மஹாளய அமாவாசை அன்று சூலாயுதத்தால் வதம் செய்தாள் . அதன் பின் வரும் 9 - நாட்களிலும் பராசக்தியை ஒன்பது வேறுபட்ட அவதாரங்களை மக்கள் வணங்கி வழிபடுகின்றனர். ஒன்பது நாட்களும் நவராத்திரி விழாவாகக் கொண்டாடப்படுகிறது. பத்தாம் நாள் விஜயதசமி எனக் கொண்டாடப் படுகிறது. இத்திருவிழா பக்திப் பாடல்களாலும் , பல வகைக் கொண்டாட்டங்களாலும், தசரா ஊர்வலங்களாலும் சிறப்பிக்கப் படுகிறது.
நவராத்திரி பற்றிய சில செய்திகள் :
முதன் முதலில் நவராத்திரி கொண்டாடும் உரிமையை இராமநாதபுரம் சேதுபதி மன்னருக்கு , திருமலைநாயக்கர் வழங்கினார். சோழர் காலத்தில் இவ்விழா அரசு விழாவாக கொண்டாடப்பட்டது . நாயக்கர் காலத்திலிருந்து தமிழக மக்கள்கொண்டாடும் ஒன்பது நாள் திருவிழாவாக " நவராத்திரி"விழா மாறியது.
ராம்லீலா :
இராம வரலாறு கூறும் நூல் இராமாயணம். இதில் இராவணன் சீதையைக் கடத்தினான். இராமன் சீதையை விடுவிக்குமாறு இராவணனிடம் கோரினான், ஆனாலும் இராவணன் மறுத்தான் . விளைவு போருக்கு வழிவகுத்தது. இப்போரில் இராமன் இராவணனை விஜயதசமி அன்று வெற்றி கொண்டான். இப்போரைக் கொண்டாடும் விதமாக வட இந்திய ப் பகுதிகளில் இந்நாளை ராம்லீலா, இராமனது லீலைகள் எனப் பொருள் கொண்டு கொண்டாடுகின்றனர். இவ்விழாவில் மக்கள் பெருந்திரளாக மைதானத்தில் ஒன்று கூடி இராவணன் மற்றும் அவனது சுற்றங்களைச் சேர்ந்த உருவ பொம்மைகளை உருவாக்கி , இராம வேடமேற்ற ஒருவரால் அம்பெய்தி எரியூட்டப்படுகிறது. இவ்வாறாக விழா நிறைவடையும்.
மகாபாரதம் :
பாரதக் கதையில் தன்னுடைய நாடு , ஆட்சி , அதிகாரமென அனைத்தையும் இழந்த பாண்டவர்கள் 12 - ஆண்டுகள் வனவாசமும் , ஓராண்டு மறைந்து வாழும் நிலையை முடித்து , மீண்டும் அனைத்து ஆயுதங்களையும், பலத்தையும் திறம்படத் திரும்ப விஜயதசமி அன்று பெற்றதாகச் செய்தியாக்கி இவ்விழா கொண்டாடடப் படுகிறது.
தென்னிந்திய தசராக் கொண்டாட்டங்கள் :
மைசூர் கண்ட மகத்துவத் திருநாள் :
மன்னராட்சியில் மகத்துவம் பெற்ற மைசூர் பண்பாட்டுச் சிறப்புப் பெற்றது. இவ்விழா கொண்ட எழில் கோலம், இந்தி ரலோகமென காண்பவர் வியந்து, மதி மயங்கி சொர்க்கமா கத் திகைக்க வைக்கும் பேரழகைக் கொண்டு இன்றளவும் விளங்குகிறது. பல வண்ண விளக்கொளியில் ஜொலிக்கும் அரண்மனை, அலங்கரிக்கப்பட்ட யானைகள் , அதன் மீது கொலுவென வீற்றிருக்கும் மன்னவன் , அம்மன்னனைச் சுமந்து மைசூர் வீதிகளில் ஒயிலாக நடக்கும் யானைகள் எனும் ஐராவதத் தேர்கள் அசைந்து வரும் காட்சி "தசரா ஊர்வலம்" எனப் பெயர் கொண்டு சிறப்பிக்கப் படுகிறது. இதனையொட்டியே கலைநிகழ்ச்சிகளும் , கண்கவர் மின்னொளி மிகு நகரமும், சிறப்பு மிகுந்த பண்பாட்டைப் பறைசாற்றும் சுவடுகளாக காட்சிப்படுத்துகிறது. இக்கலை விழா மன்னராட்சியில் தொடங்கி, மக்களாட்சி யிலும் மங்காப் புகழ்க்கொண்டு மாட்சியுடன் இன்றும் மிளிர்கிறது.
தமிழகத்தில் தசரா :
தமிழகத்திலும் இவ்விழா சிறப்பாகக் கடைப்பிடிக்கப் படுகிறது. படிப்பிற்காக முதன் முதலில் மழலைக் கல்விக்கு பள்ளியில் அடித்தளம் அமைக்க இந்தநாளே சிறந்ததாகக் கருதிப் பின்பற்றப்படுகிறது. மேலும் பாட்டு, இசைக்கருவி வாசித்தல், நடனம் , பிறமொழி கற்கவும் , புதிதாக தொழில் தொடங்கவும் எனப் பலவற்றை இந்நாளில் தொடங்கினால் கலைமகளின் அருள் அனைத்தும் கைவரப் பெறலாம், என்பது காலம் கடந்தும் நிற்கின்ற நம்பிக்கை. விஜயதசமியின் முந்தைய நாளான நவமியில் கல்வி மற்றும் கலைக் கருவிகளுக்கு வழிபாடு செய்வது வழக்கம் . தசமியில் ஆயுதபூஜையாகப் பயன்படுத்திய வாகனங்களுக்கும் , தொழிற்கருவிகளுக்கும் வழிபாடு செய்து இறை அருளைப் பெறுவர். எந்தக் காரியத்தையும் விஜயதசமி நாளில் தொடங்கினால் அச்செயல் செவ்வனே நடந்தேறும் என்பது இந்து மதநம்பிக்கை.
குலசேகர பட்டினம் :
தூத்துக்குடி மாவட்டம் , திருச்செந்தூர் வட்டத்தில் அமைந்துள்ளது குலசேகரன் பட்டினம். இங்குள்ளது அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோவில். இக்கோவில் 300 - ஆண்டுகள் தொன்மை மிக்கது. பெரும் சக்தி கொண்ட இத்தலத்தில் ஆண்டுதோறும் " நவராத்திரி " விழா 12 - நாட்கள் சிறப்புறக் கொண்டாடப்படுகிறது. அது தசரா என்றும் அழைக்கப் பெறுகிறது. மகிசாசூரனை அன்னை ஆதிபராசக்தி வதம் செய்து , மக்களையும் , தேவர்களையும் காப்பாற்றிய நாளே தசரா என்று அழைக்கப்படுகிறது. நவராத்திரி தின விழாவில் விரதமிருந்து, அம்மனுக்கு மாலை சூட்டி வேடமணிந்து பரவசமாக ஆடியும் , பாடியும் மக்களிடம் காணிக்கையைப் பெறுகின்றனர். பத்தாம் நாள் சூரசம்ஹாரம் வெகு விமரிசையாக நடைபெறுகின்றது. இந்நிகழ்ச்சியின் இறுதியாக பக்தர்கள் தங்களுடைய மாலையினைக் அவிழ்த்து விரதத்தினை முடிப்பர். இவ்விழா மனிதன் தன்னுள் உள்ள நல்ல குணங்கள் அனைத்தையும் ஒன்று திரட்டி , தன்னுள் இருக்கும் தீயகுணங்கள் அனைத்தையும் அழிப்பதற்காக தன்னை பக்குவமாக்கும் ஒரு திருநாளாக இவ்விரத நாட்கள் கொண்டாடப்படுகிறது.
விரதமுறை :
நவராத்திரி ஆரம்பமாகும் முதல் நாள் தொடங்கி 9 -- நாட்களிலும் , காலை 9 -- மணிக்குள் குளித்து, அம்மன் சிலை , படங்களுக்கு மலர்களைச் சமர்ப்பித்து , கற்கண்டு , பழம் போன்றவற்றைப் படைத்து அத்தெய்வங்களுக்குரிய மந்திரங்களைக் கூறி வணங்குதல் வேண்டும். எந்த விதமான நோய்பாதிப்பும் இல்லாத வர்கள் இந்த விரத நாட்களில் திட உணவைத் தவிர்த்து பாதாம் , முந்திரி, பிஸ்தா ஆகியவற்றுடன் பழச்சாற்றை அருந்தி விரதம் இருத்தல் வேண்டும். விரத முறையில் மாற்றம் தேவைப்படின் , ஒரு முறையாவது திட உணவைத் தவிர்த்து நீராகாரம் மற்றும் பருப்பு வகைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஒன்பது நாட்கள் விரதம் முடியும் வரை பிறர் இல்லம் தங்குதல் கூடாது. நகங்கள் வெட்டக்கூடாது. வீட்டை தூய்மையாக வைத்தல் நலம். புகை , புலால் போன்றவற் றைத் தவிர்த்தல் வேண்டும். மனதின் கவலைகள், வருத்தம் ஆகியவற்றைத் தவிர்த்து அன்னை பராசக்தியை மட்டும் நினைவில் நிறுத்தி தியானிக்க வேண்டும். மேலும் ஏழைப் பெண்களுக்கு உதவிகள் செய்வதால் பலன் பல கிட்டும் என்பது நம்பிக்கை. இறுதி நாளான 9 -- ம் நாள் மூன்று இளம்பெண்களுக்கு அன்னதானத்துடன் மஞ்சள் , குங்குமம் , பழம் , ரவிக்கைத் துண்டு, கண்ணாடி மற்றும் சீப்பு போன்றவற்றை சீராக அளிக்க வேண்டும். இவ்வாறு செய்வது குடும்ப நலனுக்கு உகந்தது. எனவே இவ்விரதத்தைக் குழந்தைகள் , முதியோர், நோயாளிகள் தவிர்த்து , ஏனைய அனைவரும் மேற்கொண்டு அன்னையின் கருணையும், அருளையும் பெற வழிகாண்கிறது.
கொலுவைத்தல் :
கொலுவைத்தல் நவராத்திரி சிறப்புகளில் முதன்மையானது. இவற்றை படிப்படியாக அமைத்து அவற்றிற்கென உருவாக்கப்பட்ட சிறப்புப் பீடங்களில் பல விதமான பொம்மைகளை வைத்து கொலுமண்டபத்தை அலங்கரிக்கப்பர். 5 , 7 ,9 என்ற ஒற்றைப்படையில் படிகளின் எண்ணிக்கையில் வைத்து கொலுஅமைப்பர். இவற்றின் அருகே கும்பமும், தெய்வங்களின் படங்களையும் வைத்து , திருவிளக்குகளை ஏற்றி வைத்து ஒன்பது நாட்களும் விதவிதமான பட்சணங்களை வைத்து வழிப்படுவர். இவ்விரத நாட்களில் வழிபாட்டில் கலந்து கொள்ளும் சுமங்கலிப் பெண்களை பராசக்தியாகப் பாவித்து கொலு வின் அருகே அமரச் செய்து , வணங்கி மஞ்சள், குங்குமம், பட்டு , தாம்பூலம் போன்றவற்றை வழங்கி மகிழ்கின்ற மகிழ்கி .இவ்வாறு வழிபடுவது மகாலட்சுமியே வந்து வாழ்த்துவதாக நம்பப்படுகிறது.அனைத்திலும் அன்னையே நீக்கமற நிறைந்திருக்கிறாள் என்பதை உணர்த்தவே நவராத்திரி நாட்களில் கொலுவைத்துக் கொண்பாடப்படுகிறது. இந்த இனிய நாளில் அனைவரும் வழிபட்டுஅன்னையின் அருளைப் பெறுவோமாக.!
0 Comments