எட்டாம் வகுப்பு - தமிழ் - புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் - 8 , புதிர் , விடுகதைகள் / 8th TAMIL ACTIVITY - 8 , QUESTION & ANSWER

 

எட்டாம் வகுப்பு - தமிழ் 

புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்

செயல்பாடு - 8

புதிர், விடுகதைகளுக்கு

விடையளித்தல்

வினாக்களும் விடைகளும்

*************   *************   ***************

திறன்/ கற்றல் விளைவு

7.20 பல்வேறு பாடப்பொருள்களைப் பல்வேறு நோக்கங்களுக்காக எழுதும்பொழுது பொருத்தமான சொற்கள், தொடர்கள், சொற்றொடர், மரபுத்தொடர், நிறுத்தக்குறிகள் மற்றும் பிற இலக்கணக் கூறுகளைப் (காலம், பெயரடை, இணைச்சொற்கள்) பொருத்தமாகப் பயன்படுத்துதல்

கற்பித்தல் செயல்பாடு

அறிமுகம் (விடுகதை)

விடுகதை என்பது என்ன? அதற்கான விடையை அறிவோமா?

ஒரு பொருளை மறைபொருளாக விவரித்துக்கொடுக்கப்படும் ஒரு புதிரே விடுகதை எனப்படும். இது ஓரிரு வரிகளில் இடம்பெறும். இதனை நொடி, பிசி என்றும் கூறுவர்.

     குழந்தைகளின் சிந்தனை ஆற்றலை வளர்க்கும் வகையில் விடுகதைகளை எழுப்புவார்கள். இளஞ்சிறார்களும் அவற்றுக்குரிய விடைகளைக் கண்டுபிடிப்பதில்   ஆர்வமாக இருப்பார்கள். அதனால்தான், விடுகதை கேட்பதும் விடை கூறுவதும் ஒரு விளையாட்டாகவே இடம்பெறுகின்றது.

வாருங்கள், சில புதிர்களைக் காண்போம்.

(எ.கா.)

முதல் இரண்டு எழுத்துகளைக் கூட்டினால் செல்வத்தின் வேறுபெயர் கிடைக்கும்

(திரு).

அடுத்த இரண்டு எழுத்துகளைக் கூட்டினால் தானியங்களில் ஒன்று கிடைக்கும்

(நெல்).

இறுதியாக உள்ள இரண்டு எழுத்துகளைக் கூட்டினால் பாதுகாப்புப் பொருள் தரும் சொல் கிடைக்கும் (வேலி).

இம்மூன்றும் சேரக் கிடைக்கும் ஊரின் பெயர் திருநெல்வேலி.

2. முதல் இரண்டு எழுத்துகள் பெயரைக் குறிக்கும் பெயரடையாகும் (திரு).

இறுதி மூன்றெழுத்துகள் இரண்டடி ஏழு சீர் கொண்ட நூலைக் குறிக்கும் (குறள்).

அந்த நூலின் பெயர் என்ன?

திருக்குறள்

3. முதல் மூன்று எழுத்துகளைக் கூட்டினால் தொன்மையான மொழியின் பெயர் கிடைக்கும் (தமிழ்)

* அடுத்த நான்கு எழுத்துகளைக் கூட்டினால் தந்தையின் தந்தையை இவ்வாறும் அழைப்பர் (தாத்தா)

* அது என்ன சொல்? தமிழ்த்தாத்தா, ஆமாம்தானே!

அடுத்து விடுகதைகளுக்கு விடைகாண்போமா?

(குருவிக்கூடு, கண் இமை, உப்பு, மூக்கு)

1. இரண்டு வீட்டிற்கு ஒரு விட்டம் அது என்ன?

மூக்குதானே!

2. கிணத்தைச் சுற்றி முள்ளு வேலி அது என்ன?

அது நம்மிடமே உள்ளது. ஆம் கண்இமை என்பதுதான் விடை.

3. கல்லும் மணலும் இல்லாத வீடு; காற்றில் ஆடும் வீடு அது என்ன?

அந்த வீடு, கண்டிப்பாகக் குருவிக்கூடுதான்

4. கடல்நீரில் வளர்வான்; மழைநீரில் மடிவான் அவன் யார்?

நம் உணவில் பயன்படுத்தும் உப்புதானே அது! அருமையாகச் சொன்னீர்கள்

***************  **************   *************

மதிப்பீட்டுச் செயல்பாடு 1

புதிருக்கான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

(பட்டுக்கோட்டை, நூலகம், மூங்கில்காடு, பாரதியார், பாய்மரக்கப்பல்)

* முதலெழுத்து பாடலின் வேறு பெயரைக் குறிக்கும். - முதல் எழுத்துடன் அடுத்த
இரண்டும் சேர்ந்தால் பெயரைக் குறிக்கும். - இறுதி இரண்டு எழுத்துகள் வினாச் சொற்களைக்குறிக்கும். இம்மூன்றுபுதிர்களும்சேரக்கிடைப்பது.தமிழ்க்கவிஞர்களில்
ஒருவரின் பெயர். யார் அவர்? ---------

விடை : பாரதியார்

* முதல் மூன்று எழுத்துகள் காஞ்சிபுரத்தில் உற்பத்தி செய்யப்படுவதைக் குறிப்பது. -
இறுதி மூன்றெழுத்துகள், அரசனின் பாதுகாப்பு அரணை இவ்வாறும் அழைப்பர். இவ்விரண்டும் சேர்த்தால் கிடைப்பது ஓர் ஊரின் பெயர்.

அது எந்த ஊர்? ------

விடை :  பட்டுக்கோட்டை

* முதல் நான்கு எழுத்துகள், புல்லாங்குழல் செய்யப் பயன்படுவதைக் குறிக்கும்.  இறுதி இரண்டு எழுத்துகளைக் கூட்டினால் மரம், செடி கொடிகள் நிறைந்த பகுதியைக் குறிக்கும்.

அது என்ன? ---------

விடை : மூங்கில்காடு


* முதல் இரண்டு எழுத்துகள் உறங்குவதற்கு உதவுவது. இடையில் உள்ள மூன்றெழுத்துகள் உயிர்வாழ்வதற்கான காற்றைத் தருவது. இறுதி நான்கு எழுத்துகள் கடலில் பயணிக்க உதவுவது.

அது என்ன? -------

விடை : பாய்மரக்கப்பல்


* முதல் இரண்டு எழுத்துகள் மாணவர் கைகளில் தவழ்வது.

* இறுதி மூன்று புறம் என்ற சொல்லின் எதிர்ச்சொல்.

அது என்ன?  ------

விடை : நூலகம்

மதிப்பீட்டுச் செயல்பாடு - 2

விடுகதைகளுக்கேற்ற விடைகளைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

(ஆந்தை, மயில், கொக்கு, அணில், பாம்பு)

1. நான் ஓர் அழகு தேவதை; ஆடும் தேவதை. நான் யார்?

விடை : மயில்

2.வளைவேன், நெளிவேன், வயிறு கலங்க வைப்பேன். நான் யார்?

விடை : பாம்பு 

3. மரத்திற்கு மரம் தாவுவேன். முதுகில் மூன்று கோடுகள் கொண்டிருப்பேன். நான் யார்?

விடை : அணில்

4. நான் ஒற்றைக்காலில் நிற்கிறேன். ஓடையிலே மீன் பிடிக்கிறேன். நான் யார்?

விடை : கொக்கு 

5. பகலில் துயில்வேன். இரவில் அலறுவேன். நான் யார்?

விடை : ஆந்தை 

மதிப்பீட்டுச் செயல்பாடு - 3

விடுகதைகளுக்கேற்ற விடைகளைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

(காளான், எலுமிச்சம்பழம், தர்பூசணி, வெண்டைக்காய், மாதுளம்பழம்)

1 . பச்சைப் பெட்டிக்குள் வெள்ளை முத்துக்கள் அது என்ன?

விடை : வெண்டைக்காய்

2. வெளியே பார்த்தால் பச்சை; வெட்டிப் பார்த்தால் சிவப்பு; சுவைத்துப் பார்த்தால்
இனிப்பு அது என்ன?

விடை : தர்பூசணி

3. எங்கள் வீட்டுத் தோட்டத்தில் மஞ்சள் குருவி ஊசலாடுது?

விடை : எலுமிச்சம்பழம்

4. சொம்பு நிறையக் கம்பு அது என்ன?

விடை : மாதுளம்பழம்

5. மழைக்காலத்தில் குடை பிடிப்பான் அவன் யார்?

விடை : காளான்

விடைத்தயாரிப்பு :

' பைந்தமிழ் ' மு.மகேந்திர பாபு , 

தமிழாசிரியர் , மதுரை - 97861 41410

***************   ***************   **********

Post a Comment

0 Comments