எட்டாம் வகுப்பு - தமிழ் - புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் - 7 . அலுவலகக்கடிதம் எழுதுதல் / 8th TAMIL - ACTIVITY - 7 , QUESTION & ANSWER

 

எட்டாம் வகுப்பு - தமிழ் 

புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்

செயல்பாடு - 7

7. அலுவலகக் கடிதம் எழுதுதல்

திறன்/ கற்றல் விளைவு

7.20 பல்வேறு பாடப்பொருள்களைப் பல்வேறு நோக்கங்களுக்காக எழுதும்பொழுது பொருத்தமான சொற்கள், தொடர்கள், சொற்றொடர், மரபுத்தொடர், நிறுத்தக்குறிகள் மற்றும் பிற இலக்கணக் கூறுகளைப் (காலம், பெயரடை, இணைச்சொற்கள்) பொருத்தமாகப் பயன்படுத்துதல்.

கற்பித்தல் செயல்பாடு

அறிமுகம்

               நம் அருகில் இருக்கும் ஒருவரிடம் செய்தியைத் தெரிவிப்பதுபோல் தொலைவில் உள்ளவர்களுக்கும் தெரிவிக்கலாம். செய்தியை எழுத்து வடிவில் தெரிவிக்கலாம்.அவ்வாறு எழுத்து வடிவிலான செய்திப் பரிமாற்றத்தில் ஒன்றுதான் கடிதம் எழுதுதல்.

          கடிதம் அல்லது மடல் எனப்படுவது இருவருக்கு இடையே இடம்பெறும் எழுத்துத் தகவல் பரிமாற்றத்தைக் குறிக்கிறது.

கடித வகைகள்

நாம் இரண்டு வகையில் கடிதம் எழுதுகின்றோம்.

1. உறவுமுறைக் கடிதம்

உறவினர்கள், நண்பர்களுக்கு எழுதுவது உறவுமுறைக் கடிதம்.

2. அலுவலகக் கடிதம்

பல்வேறு அலுவல் சார்ந்து தனிநபர் (அ) ஒரு குழு, உரிய அலுவலர்களுக்கு   விண்ணப்பித்தல்,

இப்போது நாம் அலுவலகக் கடிதம் எழுதுகின்ற முறையைப் பற்றி அறிவோமா?

அலுவலகக் கடிதம் எழுதும் முறை

           அலுவலகக் கடிதத்தில் அனுப்புநர் முகவரி, பெறுநர் முகவரி, விளித்தல், பொருள், உடற்பகுதி, கையொப்பம், இடம், நாள், உறைமேல் முகவரி ஆகியவை இடம்பெறுதல் வேண்டும்,

எடுத்துக்காட்டாக ஒரு கடிதத்தைப் பார்க்கலாமா?

புத்தகங்கள் வேண்டிப் பதிப்பகத்தாருக்கு விண்ணப்பம்


அனுப்புநர்


ப. தேன்மொழி,
ஏழாம் வகுப்பு,
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,
டி. ஆர். பஜார். உதகமண்டலம்,
நீலகிரி மாவட்டம் - 643 001.


பெறுநர்


மேலாளர்,
பாரதி பதிப்பகம்,
108, உஸ்மான் சாலை,
தியாகராய நகர்,
சென்னை - 600017.


மதிப்பிற்குரிய ஐயா,


பொருள் : 

புத்தகங்கள் அனுப்பிவைக்கக் கோருதல் தொடர்பாக.

                     கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் என்னுடைய நேரத்தைப் பயன் உள்ளதாக மாற்றவும் பொது அறிவினை வளர்க்கவும் ஆவலாக உள்ளேன். எனவே, கீழ்க்காணும் நூல்களை அஞ்சல் வழியில் அனுப்பி வைக்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறேன்.
நூல்களுக்கான தொகை ரூபாய் ஆயிரம் ( ரூ.1000) வங்கி வரைவோலையாக இத்துடன் இணைத்து அனுப்பி உள்ளேன் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

நூல்கள் -
1. தெனாலி இராமன் கதைகள் 1 படி (₹ 250)
2. அறிவியல் அறிஞர் வாழ்க்கை வரலாறு 1 படி (₹ 500)
3. மூலிகை ஆய்வுக் கட்டுரைகள் 1 படி (₹ 250)


                                   நன்றி.

                                     தங்கள் உண்மையுள்ள,
                                             ப. தேன்மொழி

நாள் :02.05.2021

இடம் : உதகமண்டலம்.

         அலுவலகக் கடிதம் எழுதுவதற்கான
முறையான அமைப்பை அறிந்து
கொண்டீர்கள் அல்லவா?

பின்வரும் கடிதச் செயல்பாட்டை நீங்களே செய்து முடிக்க இயலுமே.

*****************    ************   ************

மதிப்பீட்டுச் செயல்பாடு

மரக்கன்றுகள் வேண்டி வன அலுவலருக்கு எழுதும் விண்ணப்பத்தினை நிறைவு செய்க.

மரக்கன்றுகள் வேண்டி விண்ணப்பம்

அனுப்புநர்

தமிழ்ச்செல்வன் , 
ஏழாம் வகுப்பு,
அ.மே.நி.பள்ளி , இளமனூர் , 
மதுரை.

பெறுநர்

மதிப்பிற்குரிய வன அலுவலர்,
வன அலுவகம்,
மதுரை.

மதிப்பிற்குரிய ஐயா , 

பொருள் : மரக்கன்றுகள் வேண்டி விண்ணப்பித்தல் சார்பாக

தற்போது புவியானது மிகவும் விரைவாக வெப்பமயமாக மாறிக்கொண்டு
வருகின்றது. புவியின் வெப்பத்தைக் குறைக்கவும் இயற்கையைப் பாதுகாக்கவும் மரம் நடுவது ஒன்றே தற்போதைய தீர்வாகும் என எங்கள் பள்ளியின் பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் ஐயா அவர்கள் கூறினார். அதற்கு  என் போன்ற மாணவர்கள் மரம் நடுதலில் முழுமூச்சுடன்  செயல்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். எனவே எங்கள் பள்ளியில் பசுமைப்படையின் சார்பில் மரக்கன்றுகள் நட உள்ளோம். எனவே இக்கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிற மரக்கன்றுகள் தந்து உதவுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறகேன்.

வேம்பு   - 10
புங்கன் - 10
அரசு       - 10
ஆல்         - 10

                      நன்றி 

                             தங்கள் உண்மையுள்ள , 
                                  தமிழ்ச்செல்வன் .

இடம்  :  இளமனூர் , 
நாள்   : 31 - 10 - 2021.

****************    ********   **************

விடைத்தயாரிப்பு :

' பைந்தமிழ் ' மு.மகேந்திர பாபு , 

தமிழாசிரியர் , மதுரை - 97861 41410

***************   ***************   **********

Post a Comment

0 Comments