எட்டாம் வகுப்பு - தமிழ் - புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் - 4 , செய்யுளின் நயங்களை அறிதல் - வினா & விடை / 8th TAMIL - ACTIVITY 4 , QUESTION & ANSWER

 

எட்டாம் வகுப்பு - தமிழ் 

புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்

செயல்பாடு - 4

செய்யுளின் நயங்களை அறிதல்

வினாக்களும் விடைகளும்

**************   *************   ***************

திறன்/ கற்றல் விளைவு

6.11 ஒலியியைபு. சந்தம் முதலான யாப்பமைதிக் கூறுகள், மரபுத் தொடர்கள் போன்ற மொழியின் மரபு, நடை, நுட்பங்கள் போன்றவற்றைக் கருத்தில் கொண்டு கதைகள், கட்டுரைகளின் நயம் பாராட்டல்

கற்பித்தல் செயல்பாடு

அறிமுகம்

           செய்யுளில் இடம்பெறும் எதுகை, மோனை, இயைபு போன்ற தொடை நயங்களை அறிதல்.

மோனை

செய்யுளில் முதல் எழுத்து ஒன்றி வருமாறு அமைவது மோனை எனப்படும்.

(எ.கா.) சொல்லுக சொல்லிற் பயனுடய சொல்லற்க

சொல்லிற் பயனிலாச் சொல். (குறள் -200)

எதுகை

       இரண்டாம் எழுத்து ஒன்றி வருமாறு அமைவது எதுகை எனப்படும்.

(எ.கா.) இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண

நன்னயம் செய்து விடல். (குறள் - 314)

இயைபு

செய்யுளின் இறுதி எழுத்தோ அசையோ ஒன்றி வருவது இயைபு எனப்படும்.

(எ.கா.) புதுமைகள் செய்த தேசமிது

பூமியின் கிழக்கு வாசலிது

                                    - கவிஞர் தாராபாரதி

எடுத்துக்காட்டு

சாந்தம் உடையோர் பேறு பெற்றோர் எனத்

தத்துவமும் சொன்னார்- இந்தத்

தாரணி முழுவதும் அவர்களுக்கு உரியது

தலைவர்கள் அவர் என்றார்!

மாந்தரின் வாழ்வில் தேவைப் படுவது

சாந்தம் தான் என்றார்- அது

மண்ணையும் ஆளும் விண்ணையும் ஆளும்

மகத்துவம் பார் என்றார்.

                                     கவிஞர் கண்ணதாசன்

வினாக்கள்

1. மேற்குறிப்பிட்ட பாடலில் உள்ள எதுகைச் சொற்களை எடுத்து எழுதுக.

மாந்தர், சாந்தம், மண்ணையும் விண்ணையும்

2. மேற்கண்ட பாடலில் இடம்பெறும் மோனைச் சொற்களை எடுத்து எழுதுக.

தத்துவம், தாரணி, மண்ணையும், மகத்துவம்

3. மேற்கண்ட பாடலில் உள்ள இயைபுச் சொற்களை எடுத்து எழுதுக

பெற்றோர், சொன்னார். என்றார்,

************   ***************   **************

மதிப்பீட்டுச் செயல்பாடு

நடிப்புச் சுதேசிகள்

நெஞ்சி லுரமுமின்றி

நேர்மைத் திறமுமின்றி

வஞ்சனைசொல்வாரடீ -கிளியே

வாய்ச்சொல்லில் வீரரடீ

கூட்டத்தில் கூடிநின்று

கூவிப் பிதற்ற லின்றி

நாட்டத்தில் கொள்ளாரம - கிளியே

நாளில் மறப்பாரடீ.

                                     - கவிஞர் பாரதியார்

1 . மேற்கண்ட பாடலில் இடம்பெறும் மோனைச்சொற்களை எடுத்து எழுதுக,

நெஞ்சில் , நேர்மை

வஞ்சனை , வாய்ச்சொல்

கூட்டத்தில் , கூவிப்

நாட்டத்தில் , நாளில் 

2 . மேற்கண்ட பாடலில் இடம்பெறும் எதுகைச் சொற்களை எடுத்து எழுதுக.

நெஞ்சில் , வஞ்சனை 

கூட்டம் , நாட்டம் 

3 . மேற்கண்ட பாடலில் உள்ள இயைபுச் சொற்களை எடுத்து எழுதுக.

சொல்வாரடீ , வீரரடி , கொள்ளாரடீ , மறப்பாரடீ 

4 . மேற்கண்ட பாடலின் தலைப்பு மற்றும் ஆசிரியரின் பெயரை எழுதுக.

பாடலின் தலைப்பு - நடிப்புச் சுதேசிகள்

ஆசிரியர் - கவிஞர்.பாரதியார்

*****************  **************   ***********

விடைத்தயாரிப்பு :

' பைந்தமிழ் ' மு.மகேந்திர பாபு , 

தமிழாசிரியர் , மதுரை. 97861 41410

***************   ***************   **********

Post a Comment

0 Comments