அருட்பிரகாச வள்ளலார் சுவாமிகள் பிறந்த தினம் - 05 - 10 - 2021 / VALLALAAR BIRTH DAY

 

          அருட்பிரகாச  வள்ளலார்

இராமலிங்க  சுவாமிகள்  பிறந்த  தினம்

                      5  •10 • 2021
      தமிழன்னையைத்  தம்  தமிழ்ப்  பா வால்  அலங்கரித்த  தனயன்களில்  நீடு புகழ்   வீசிக் கொண்டிருக்கும்   இராமலிங்க வள்ளலார்  அவர்களின்  மாட்சி  மகிழ்ச்சி நிறைந்ததாகும். இவரது  மனிதநேய,  பக்தி  மணம்  பரப்பும் பைந்தமிழ்  வரிகளால்   வளம்  கொண்ட   பசுமை  மிகுபாடல்கள் பல .  வள்ளலார்  திருமகனாரின்   திருவாக்கால்  கருவாகி   உலகம்   ஒளிப்பெற  உருவாக்கிய  எழில் ஒளி ,அருட்கொடையென  அகிலத்தை  அணிசெய்ய , ஆதரிக்க, அன்பு பெருக,  அகம்  மகிழ  கருணையே   வடிவான    தர்மபெட்டகமாக,  காருண்யத்தைத் தரும் ஒற்றுமைச் சுரங்கமாக  விளங்கிய  வள்ளலார்  பெருமான் அவர்களின்  சிந்தனைப்  பேழையிலிருந்து  சிந்திய  சித்தாந்தச்   சிதறல்களே   திருஅருட்பா  எனப்பட்டது.

      தமிழகம்    கண்ட நல்மணி,   நானிலம்  போற்றும் ஆன்மீகச்   சிந்தனையை   அள்ளித் தரும்  மெய்ஞான   திருவான  தில்லையம்பல வாணன்   திருநாட்டியம்   புரியும் தில்லையை  அடுத்த   மருதூரில்  காரூணிய  மரபில்   இராமையா பிள்ளைக்கும் சின்னமையாருக்கும்    மகனாக   5 • 10 • 1823-- ஆம்  ஆண்டு தோன்றினார்.

     இவருடன்  பிறந்தோர்   சபாபதிப் பிள்ளை , பரசுராம  பிள்ளை  என்போராவர். அருள் நிறைந்த   அவதார  தொகுப்பு  மரபுவழி  வந்த  இராமலிங்கர்   தமிழ்க் கடவுளான  முருகப்பெருமானின்   திருவுருவக் காட்சிதனை   இளமையிலேயே    கிடைக்கப் பெற்றார் .  மறைமுதல்வனின்   மகனான   முருகப் பெருமானையே   தம்   குருவாக  ஏற்றதன்   விளைவு  செந்தழின்   செழிப்பும் , வட மொழியின்  வளமும்  கைவரப் பெற்று   இருபெரும் மொழிதனில்   ஓதி உலகம் தழைக்க  பெருஞானம்  படைத்தார். எனினும்  உலகியல்  வழிக்கல்வி  பெற  காஞ்சிபுரம்   மகாவித்வான்  சபாபதி  முதலியாரையும் ,  சகோதரர்  சபாபதிப்  பிள்ளை ஆகியோரிடம்  அருந்தமிழ்  அருந்தினார். சகோதரர்  சபாபதிப்  பிள்ளையின்  அன்புக் களிப்பிலும்,  அவரது  மனைவியாரின்  ஆதரவிலும்   வளர்ந்தார்.

 தளிரிலேயே  தமிழன்னையின் தாலாட்டைப்  பெற்றதால்  ,  இளமையிலேயகவிபடைக்கும்  களஞ்சியமாகத்  திகழ்ந்தார்.  இதன்  வழி  பல்வேறு  ஆற்றலின்  அணிகலனாக  அள்ளித்தரும்  உறைவிடமாக   விளங்கினார் .இராமலிங்கரை  அணிசெய்த  அற்புதங்கள்  புலவராக,  கவிஞராக,  நூலாசிரியராக,  உரைநடை  எழுத்தாளராக,  உரையாசிரியராக, ஞானாசிரியராக, மருத்துவராக  மற்றும்  துறவியாக , ஞானியாக,  சித்தராக  பல் பரிணாம்  கொண்டு  பரிமளித்தார். 

உலகை  இயக்கி  வரும்  முழுமுதற்  இறைவன்   சோதி  வடிவில் உயிர்களை  உய்வித்துக்  கொண்டிருந்தான். அத்தகைய   எல்லையில்லாத அருட்பெரும்சோதியின்  தனிப்பெரும் கருணையால் உலகம்  உயிர்த்துக் கொண்டிருக்கிறது எனக் கண்டார்.அறிந்துக் கொண்டார். இப்பெரும்  உண்மையை  தன் மனக்கண்ணில்   கண்டு   சாதி , மத  வேறுபாடின்றி   உயிர்கள்    அனைத்திடமும்    அன்பும் , இறக்கமும்  கொண்டவராக  வாழும்   ஆன்மநேய   ஒருமைப் பாட்டினை   தரும் , சீவகாருண்ய  ஒழுக்கமே  உயர்ந்தது  என்பதை  உள்ளத்தால்  உணர்ந்து  தெளிந்தார். இவ்வுண்மையின்  மூலமே  " சமரச  சன்மார்க்க  நெறியைக்  கையாண்டார்.

" சங்கடம்  விளைவிக்கும்  சாதியையும்  மதத்தையும் தவிர்த்தேன்  "என்றார் -- இவையெல்லாம்  சிறுபிள்ளை  விளையாட்டு  என  இகழ்ந்தார்.

சமரச சுத்த சன்மார்க்க சங்கம் ;

" ஒத்தலும்,  உயர்தலும்   தால்தலும்  எவரும்

உலகியல்  நடத்தல்  வேண்டும் " -- என  வற்புறுத்துகின்றார். 

தம்  நெறித்தழைக்கும்   வழியைக்கண   இறைவனின்  கருனையைப்   பெற்றார். பயிர்கள் வாடியதையே   பொறுக்காமல்  மனம்  வாடிய  இராமலிங்கர்  மக்களின்   பசித்துயர்  துடைக்க  எண்ணியதன்   விளைவே  வடலூரில்    " சன்மார்க்க  சங்கம் -- சத்திய   தருமசாலை  -- சத்திய  ஞான  சபை "  என்னும்  மூன்று  அருள்  நெறி  காக்கும்   அமைப்புகளை  நிறுவினார். இவற்றின்  வாயிலாக   இராமலிங்கர்  தனிக்  கொள்கை  ,தனிக்கொடி , தனிச் சபை ,  தனி மார்கம்,  தனி மந்திரம்    மற்றும்   தனி   வழிபாட்டைப் படைத்தார். 

திருவும் , குருவும்

இளமையில்  முருகப்பெருமானை   கடவுளாகவும் ,

திருஞான சம்பந்தரை   குருவாகவும், 

திருவாசகத்தை  வழிபடும்  நூலாகவும்  மேற்கொண்டார் .பின்  தில்லையம்பல  நாதரின்    பக்தராகவும்  விளங்கினார். அது முதல்  அருட்பெருஞ்   சோதியாகத்  திகழ்ந்தார்

திருவருட்பா :

இப்பாடல் " பக்திப்  பாடல்   உலகில்   ஒரு   புதுமை.!

தமிழ்  மொழிக்கு  மற்றொரு பெருமை.!

திருஅருட்பா  ஆன்மீகக்  கருத்துகளைக்  கொண்ட  மந்திரப் பெட்டகம்.  மனித நேய   ஒருமைப்பாட்டை  வழங்கும்  சுடர்தீபம்.  கருணையும்,  ஒற்றுமையும்   ஒருசேர   உணர்த்தும்   உன்னத  நூல்.

       அடியவர்கள்   பாடிய பாடல்கள்  அனைத்தும்   அருட்  பாடல்களே !  ஆயினும்  ' திரு "  சேர்த்து  அமையப்பெற்ற  பாடல்களின் ( அருட்பா) ,  தொகுதி  திருவருட்பா  ஆகும்  இவை  திருவருட்பா எனப்பட்டது.  திருஅருட்பா   ஆறு  திருமுறைப்  பகுதிகள்  கொண்டு  விளங்குகின்றன.  399 --பதிகங்களையும்  , 5818 -- பாடல்களையும்  கொண்டது .இவற்றில்  அனைத்துப்  பாடல்களும்  இறைவனை  முதன்மைப்  படுத்தியே  பாடப்பட்டது.

தமிழ்ப் பற்று :

வள்ளலார்  மொழிப்பற்று  மிக்கவர் ;  தமிழ் மொழியே  இறவாத  நிலை தரும் என்று  கருதினார் ;  பயில்வதற்கும்  , அறிதற்கும்   மிகவும்  எளிதாகவும் ,  பாடுவதற்கும்,  துதிப்பதற்கும்   இனிமையு டையதாய்  சாகாக்   கல்வியை   மிகவும்  எளிமையாக  அறிவிப்பதாய்,  திவருளால்  கிடைத்த  தென்மொழி   ஒன்றினிடத்தே  மனம்  பற்றச் செய்து , அத்தென்மொழியால்   பல்வகை   துதிப்  பாடல்களைப்  பாடுவித்தருளினீர்   என்று  உண்மை  உரைத்தார்.

வள்ளலார்  நிகழ்த்திய   அற்புதங்கள்  :

    இராமலிங்கருக்கு  ஒரு  வருட  பருவமாக  இருத்தபோது,  தில்லையம்பல  நாதரின்  சந்நிதித்  திரைச்சீலை   தானே  விலகப் பெற்று  தரிசித்தார். ஒரு சமயம்   திண்ணையிலிருந்து  கீழே  விழுந்த போது  இறைவியால்  காப்பாற்றப்பட்டார்.  மற்றொரு  நாள்  பட்டினியோடு   படுத்திருந்த  போது  இவரின்  அண்ணியார்  வடிவில்  அம்மை வந்து  காப்பாற்றினார்.  இளமையில்   அண்ணனுடைய  சொற்பொழிவிற்கான  ஏடுகளைத்தான்  படிக்கத்  தொடங்கினார். ஒரு  முறை  அண்ணன்  நோய்வாய்ப் பட்டிருந்தமையால்  தாமே சொற்பொழிவாற்றி    நாடறிந்த  நற்பெருமான்   ஆனார் .

தண்ணீரில்  விலக்கெரியச் செய்தார். ஒரே  இரவில்   1596 -- வரிகளையுடைய  " அருட்பெருஞ் சோதி "  அகவலைப்  பாடினார்.

புரட்சித்  துறவி :

        வள்ளலார்  பக்தி  நெறி  நின்றாலும்  , உலகவாழ்வின்  மக்கள்  இறந்து  வாழும்  பக்குவ நெறியும்  கண்டவர். ஏழை  பணக்காரன்,  மேல்  சாதி , கீழ்சாதி   முறைகளை  வன்மையாகக்  கண்டித்தார். சாதி  சமய  வேறுபடுகளை   கடுமையாக   எதிர்த்தார். மக்கள்  வாழப்  பயன்படும்  நெறியே   நன்னெறி  எனப்  போற்றினார். மூடநம்பிக்கைகளாலும்,  சாதி  மத  வேறுபாடுகளாலும்  மக்கள் துன்புறுதல் கண்டு  மனம்  வருந்தினார். 

" கலையுரைத்த  கற்பனையே  நிலையெனக்  கொண்டாடும்

நிலைகண்மூடிய  வழக்கமெல்லாம்  மண்மூடிப் போக -- என  வருந்தினார்.

இறைநெறி  , ஆன்மநேயப்  பெருநெறி  ஆகிய வற்றை  ஆக்கிய  வள்ளலார்  பெருமான்  ,  தைப்பூச  நன்னாளில்  வடலூரில்  உள்ள  சித்திவளாகத்தில்  ஓர்  அறைக்குள்  சென்று  கதவினைத்  தாழிட்டு க் கொண்டு  " அருட்பெருஞ்சோதி "  ஆண்டவரான  இறைவனோடு  இரண்டறக்   கலந்து 30 • 1 • 1874  - அன்று சோதி  வடிவானார். 

இன்று  வள்ளலார்  பெருமானின்  கொள்கைகள்  உலகமெங்கும்   பரவி  வருகிறது.  ஒவ்வொரு  ஆண்டும்  தைப்பூச  திருவிழாவில்  பத்து  இலட்சத்திற்கும்  மேற்பட்டோர்  ஒன்று  திரண்டு  சோதி  வழிப்பாட்டில்  கலந்து க் கொண்டு  வள்ளலார் பெருமானின்  அருளைப்  பெறுகின்றார். வள்ளலார்  பெருமானின்  அருள்  நிறைந்த  ஆன்மநேய  நெறியையும்,  இரக்க  குணத்தையும்,  ஒற்றுமையுணர்வையும்  அறிந்து   அவர் தம்  திருவருட்பாவை  தினம் , தினம்  யாசித்து  நலம்  தரும்  நல்வாழ்வு  பெறுவோம்.!


ஒருமைப்பாட்டை  வலியுறுத்தும்   இன்றைய  நிலைப் போலவே  ,  அன்றே  ஆன்மநேய   ஒருமைப் பாட்டினை அறிமுகப்படுத்தி  அகிலத்தை   அமைதி வழிக்காண  அழைத்துக் கொண்டிருக்கிறது . அந்த   ஆன்மீக  பயணத்தின்   அற்புதம்  அறிந்து  அவர் தம்  பாதையில் பயன்பல  காண்போம் .!

Post a Comment

0 Comments