பத்தாம் வகுப்பு - தமிழ் - புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் - செயல்பாடு 8 - பயன்பாட்டு இலக்கணம் - ஆகுபெயர் - வினா & விடை / 10th TAMIL - REFRESHER COURSE MODULE - ACTIVITY 8 - QUESTION & ANSWER

 

பத்தாம் வகுப்பு - தமிழ் 

புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் 

செயல்பாடு : 8 

பயன்பாட்டு இலக்கணம் - ஆகுபெயர் 

வினாக்களும் விடைகளும்

கற்றல் விளைவு:

மொழிப் பயன்பாட்டில் ஆகுபெயர் எவ்விதம் வெளிப்படுத்தப்படுகிறது என்பதைக் கண்டறிதல்.

கற்பித்தல் செயல்பாடு :

அறிமுகம்:

                ஒன்றின் இயற்பெயர் அதனோடு தொடர்புடைய வேறொன்றுக்கு ஆகி வருவது ஆகுபெயர் எனப்படும். ஆகுபெயர் எனப்படுவது, ஒரு சொல் அதன் பொருளைக் குறிக்காமல் அச்சொல்லோடு தொடர்புடைய வேறு ஒருபொருளைக் குறிப்பது ஆகும்.

விளக்கம் :

   நாம் பிறரிடம் பேசும்போது நமக்குத் தெரிந்தும் தெரியாமலும் பல இலக்கணப் பகுதிகளைப் பயன்படுத்துகிறோம். அவற்றிலிருந்து ஆகுபெயரினை இனங்கண்டு, எவ்வகை ஆகுபெயர் என்பதை அறியலாம்.

(எ.கா.1)

மல்லிகை சூடி வந்தாள்,

        தொடரில் மல்லிகை என்பது செடியைக் குறிக்காமல் செடியின் (சினை) உறுப்பாகிய பூவுக்கு ஆகிவந்ததால் பொருளாகுபெயர் எனப்படும்.

(முதற்பொருள், சினைக்கு ஆகி வருவது)

(எ.கா.2)

ஊரே பேசுகிறது.

          தொடரில் ஊர் என்பது இடத்தைக் குறிக்காமல் அங்கு வாழும் மக்களைக் குறிப்பதால் இடவாகுபெயர் எனப்படும்.(இடப்பெயர், அங்கு வாழும் மக்களுக்கு ஆகி வருவது)

(எ.கா. 3)

கார்த்திகையாள் வந்தாள்.

                  தொடரில்,கார்த்திகை என்பதுகாலத்தைக்குறிக்காமல் அம்மாதத்தில் பிறந்தவரைக்
குறிப்பதால் காலவாகுபெயர் எனப்படும்.

(காலப்பெயர் மனிதருக்கு ஆகி வருவது)

(எ.கா. 4)

கம்பு நீரின்றி காய்ந்தது.

         தொடரில் கம்பு என்பது தானியத்தைக் குறிக்காமல் தானியத்தை உருவாக்கும்
பயிருக்கு ஆகி வருவதால் சினையாகுபெயர் எனப்படும்.

(சினைப்பெயர் முதற்பொருளுக்கு ஆகி வருவது)

(எ.கா. 5)

மஞ்சள் பூசிவந்தாள்.

           தொடரில் மஞ்சள் என்பது நிறத்தைக் குறிக்காமல் மஞ்சள் நிறமுள்ள கிழங்கைக்
குறிப்பதால் பண்பாகுபெயர் எனப்படும்.

(பண்புப்பெயர் பொருளுக்கு ஆகி வருவது)

(எ.கா. 6)

நாதஸ்வரம் கேட்டு மகிழ்ந்தான்.

     தொடரில் நாதஸ்வரம் என்பது கருவியைக் குறிக்காமல் அதிலிருந்து வெளிப்படும்
இசைக்கு ஆகிவருவதால் கருவியாகுபெயர் எனப்படும்.

(கருவியின் பெயர் காரியத்திற்கு ஆகி வருவது)

(எ.கா.7)

கம்பரைப் படித்திருக்கிறேன்.

தொடரில் கம்பர் என்பது புலவரைக் குறிக்காமல் அவர் இயற்றிய நூலுக்கு
ஆகி வருவதால் கருத்தாவாகுபெயர் எனப்படும்.

(கருத்தாப்பெயர் நூலுக்கு ஆகிவருவது)

(எ.கா.8)

ஐந்து கிலோ கொடு.

                        தொடரில் கிலோ என்பது எடுத்தலளவைப் பெயரைக் குறிக்காமல் நாம்
வாங்கும் பொருளுக்கு ஆகிவருவதால் எடுத்தலளவையாகுபெயர் எனப்படும்.

(எடுத்தலளவைப்பெயர், வாங்கும் பொருளுக்கு ஆகிவருவது)

*************     *************    ************

            மதிப்பீட்டுச் செயல்பாடுகள்

           கலந்துரையாடலைப் படித்துணர்ந்து ஆகுபெயர் தொடர்களை அவற்றின் வகைகளோடு பொருத்துக.

நன்மொழியாள் : இளமதி இன்றைக்கு என்ன உன்னிடத்தில் முல்லையின் மணம் வீசுகிறது?


இளமதி : ஆமாம், எங்கள் தோட்டத்தில் பூத்த முல்லைப் பூவைத் தலையில்
வைத்திருக்கிறேன். மணம் நன்றாக இருக்கிறதா?

நன்மொழியாள் ; நன்றாக இருக்கிறது, அது சரி உன் அப்பா வேலைக்குப்
போகவில்லையா? வள்ளுவரைப் படித்துக் கொண்டிருக்கிறாரே!

இளமதி :  ஆமாம், உனக்குச் செய்தியே தெரியாதா? கொரோனா என்னும் பெருந்தொற்றால் உலகமே அச்சத்தில்
உள்ளது. அந்நோய் மிகவும் கொடியதாம். அதனைத் தடுக்க அரசாங்கம் முழு ஊரடங்கு போட்டிருக்காங்க, அதான்வேலைக்குப் போகவில்லை.

நன்மொழியாள்  :அப்படியா? அவ்வளவு கொடியதா?

இளமதி  : ஆமாம், தொலைக்காட்சியைப் பார்த்தாலே பயமாக இருக்கிறது.
தொலைக்காட்சியைப்பார் உனக்கும் புரியும்.

நன்மொழியாள் :  அப்படியா? இப்பவே போய்ப் பார்க்கிறேன்.

இளமதி :என் தங்கை சித்திரையாள் கூப்பிடுகிறாள். நாளை பார்க்கலாம். ஏன்
பாப்பா கூப்பிட்டாய்?

அம்மா :  நான்தான் கூப்பிட்டேன். நேற்று பெய்த காற்று மழையிர்  தோட்டத்திலுள்ள சோளம் சாய்ந்து கிடக்கிறது.

இளமதி : அப்ப இந்த ஆண்டு, கூழ் கிடைக்காதா?

அம்மா :  கொஞ்சமாகக் கிடைக்கும் என நினைக்கிறேன். இன்றைக்கு
வீட்டுக்கு வெள்ளை அடிக்க ஆட்கள் வருகிறார்கள். இன்னும்
சமையல் வேற செய்யவில்லை. உங்க அப்பாவை, அரிசி வாங்கி
வரச்சொல்.


இளமதி : நான் போய் வாங்கி வருகிறேன். அப்பா அரிசி வாங்கணுமாம், காசு
கொடுங்க. அம்மா, எவ்வளவு வாங்கி வரவேண்டும்?

அம்மா :இரண்டு கிலோ வாங்கி வா.

இளமதி : சரிங்க அம்மா.

பொருத்துக.

ஆகுபெயர் தொடர்கள்

அ)  முல்லை மணம் வீசுகிறது.

ஆ) (வள்ளுவரைப் படித்துக்
கொண்டிருக்கிறாரே!

இ ) உலகமே அச்சத்தில் உள்ளது.

ஈ)  தொலைக்காட்சியைப்
பார்த்தாலே பயமாக இருக்கிறது.

உ) சித்திரையாள் கூப்பிடுகிறாள்.

ஊ) சோளம் சாய்ந்து கிடக்கிறது.

எ) வீட்டுக்கு வெள்ளை அடிக்க
ஆட்கள் வருகிறார்கள்.

ஏ ) இரண்டுகிலோ வாங்கி வா.

ஆகுபெயர் வகைகள் 

1 ) சினையாகு பெயர்  - ஊ ) சோளம் சாய்ந்து கிடக்கிறது.

2 ) காலவாகு பெயர் - உ ) சித்திரையாள் கூப்பிடுகிறாள்.

3 ) எடுத்தலளைவையாகு பெயர் - ஏ ) இரண்டு கிலோ வாங்கி வா

4 )  பண்பாகு பெயர்  - எ ) வீட்டுக்கு வெள்ளை அடிக்க ஆட்கள் வருகிறார்கள்.

5 ) பொருளாகு பெயர் - முல்லை மணம் வீசுகிறது.

6 ) கருவியாகு பெயர் - தொலைக்காட்சியைப் பார்த்தாலே பயமாக இருக்கிறது.

7 ) கருத்தாவாகுபெயர் - வள்ளுவரைப் படித்துக் கொண்டிருக்கிறாரே !

8 ) இடவாகு பெயர் - உலகமே அச்சத்தில் உள்ளது.

*****************      ************   **********

நன்றி

விடைத்தயாரிப்பு : 

திரு.மணி மீனாட்சி சுந்தரம் , 

தமிழாசிரியர் , அ.மே.நி.பள்ளி , 

சருகுவலையபட்டி , மேலூர் , மதுரை.

************     **************   *************

Post a Comment

0 Comments