பத்தாம் வகுப்பு - தமிழ் - புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் - செயல்பாடு 7 - செய்யுள் அடிகளின் கருத்தை அறிதல் - வினா & விடை / 10th TAMIL - REFRESHER COURSE MODULE - ACTIVITY 7 - QUESTION & ANSWER

 

பத்தாம் வகுப்பு  - தமிழ் 

புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் 

செயல்பாடு - 7 

செய்யுள் அடிகளின் கருத்தை அறிதல் 

வினாக்களும் விடைகளும்


*************     *************    ***********-


7. செய்யுள் அடிகளின் கருத்தை

அறிதல்

கற்றல் விளைவு :

வேறுபட்ட கவிதை வடிவங்களைப் படித்துப் பொருளுணர்தல்.

தமிழரின் சிந்தனை மரபுகளை உணர்தல்,

தமிழ் இலக்கியங்கள் காட்டும் அறச்சிந்தனைகளை அறிந்து, அறத்தோடு வாழும் வாழ்வியல்திறன் பெறுதல்.

கற்பித்தல் செயல்பாடு :

அறிமுகம்:

பாடல் அல்லது செய்யுளைப் படித்துப் பொருளுணர்ந்து சுவைத்தல்.

(எ.கா.)

கத்தியைத் தீட்டாதே-உந்தன்

புத்தியைத் தீட்டு

கண்ணியம் தவறாதே-அதிலே

திறமையைக் காட்டு!

ஆத்திரம் கண்ணை

மறைத்திடும் போது

அறிவுக்கு வேலை கொடு --உன்னை

அழித்திட வந்த

பகைவன் என்றாலும்

அன்புக்குப் பாதைவிடு! (கத்தியைத் )

மன்னிக்கத் தெரிந்த

மனிதனின் உள்ளம்

மாணிக்கக் கோயிலப்பா -- இதை

மறந்தவன் வாழ்வு

தடம் தெரியாமல்

மறைந்தே போகுமப்பா!(கத்தியைத் )

இங்கே இருப்பது சில காலம்

இதற்குள் ஏனோ அகம்பாவம்

இதனால் உண்டோ ஒருலாபம் -- இதை

எண்ணிப்பாருதெளிவாகும்! (கத்தியைத்)

                                                - ஆலங்குடி சோமு
விளக்கம் :

மையக்கருத்து

                பகைவனிடத்தும் அன்புபாராட்ட வேண்டும்; வன்முறையின்றி, அறிவின்
உதவியோடு பிரச்சினைக்குத் தீர்வுகாண வேண்டும். தண்டித்தவரைவிட
மன்னித்தவரைத்தான் இவ்வுலகம் என்றும் நினைவில் வைத்திருக்கும்.

பாடல் அடிகளுக்கான பொருளைஅறிவோம்.

கத்தியைத் தீட்டாதே-உந்தன்
புத்தியைத் தீட்டு
கண்ணியம் தவறாதே -அதிலே
திறமையைக் காட்டு!

பொருள்

           எந்தப் பிரச்சினைக்கும் வன்முறையை ஆயுதமாகக் கொள்ளாமல் அறிவைக் கொண்டு தீர்வுகாண வேண்டும். கண்ணியத்தைக்காப்பதில் நமது திறமையைக்  காட்டவேண்டும்.

ஆத்திரம் கண்ணை
மறைத்திடும் போது
அறிவுக்கு வேலை கொடு --உன்னை
அழித்திட வந்த
பகைவன் என்றாலும்
அன்புக்குப் பாதைவிடு!

பொருள்

               அளவிற்கு அதிகமான கோபம் வந்து அறிவுக்கண்ணை மறைத்தாலும் அறிவையே
பயன்படுத்த வேண்டும். தம்மை அழிக்க நினைக்கும் பகைவரிடமும் அன்பையே நாம்
காட்டவேண்டும்.

மன்னிக்கத் தெரிந்த
மனிதனின் உள்ளம்
மாணிக்கக் கோயிலப்பா -- இதை
மறந்தவன் வாழ்வு
தடம் தெரியாமல்
மறைந்தே போகுமப்பா!

பொருள்

           மன்னிக்கத் தெரிந்த மனிதரின் உள்ளம் உயர்ந்த கோயிலைப் போன்றதாகும்.
இதனை மறந்து வாழ்ந்தால் நமது வாழ்வு எவ்வித அடையாளம் இல்லாமல் அழிந்து போகும்.

இங்கே இருப்பது சிலகாலம்
இதற்குள் ஏனோ அகம்பாவம்
இதனால் உண்டோ ஒருலாபம் -- இதை
எண்ணிப்பாரு தெளிவாகும்!

பொருள்

   இப்பூமியில் நாம்வாழ்வது மிகக்கொஞ்ச காலம்தான். அதற்குள் நாம், ஒருவர்மீது
ஒருவர் அன்பு பாராட்டி மகிழ்ச்சியோடு வாழவேண்டும். அதைவிடுத்து அகந்தையால்
அனைவரிடமும் பகைமை கொண்டால் யாருக்கும் எந்தப்பயனுமில்லை. இதனை
ஆழ்ந்து சிந்தித்தால் நமது மனம் தெளிவடையும்.

**************    ***************    ************

           மதிப்பீட்டுச் செயல்பாடுகள்

1. பாரதியார் பாடலைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க.

வாழ்க நிரந்தரம்! வாழ்க தமிழ்மொழி!
வாழிய வாழியவே!
வானமளந்தது அனைத்தும் அளந்திடு
வண்மொழி வாழியவே!
ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசி
இசைகொண்டு வாழியவே!

எங்கள் தமிழ்மொழி! எங்கள் தமிழ்மொழி!
என்றென்றும் வாழியவே!
சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத்
துலங்குக வையகமே!

தொல்லை வினைதரு தொல்லை அகன்று
சுடர்க தமிழ்நாடே!
வாழ்க தமிழ்மொழி! வாழ்க தமிழ்மொழி
வாழ்க தமிழ்மொழியே!
வானம் அறிந்த தனைத்தும் அறிந்து
வளர்மொழி வாழியவே!

                                                -- பாரதியார்

1. இப்பாடலின் மையக்கருத்தை எழுதுக.

                 தொன்மையும் வளமும் கொண்ட புகழ்மிக்க மொழி தமிழ் மொழி. தமிழ் மொழி சிறந்தால் வையம் சிறக்கும்.தமிழ் வாழட்டும். தமிழகம் ஓங்கட்டும்.

2. "வானமளந்தது அனைத்தும் அளந்திடு
வண்மொழி வாழியவே!" - --- இவ்வடிகளின் பொருளைத் தேர்க.

அ) தமிழ்மொழி எக்காலத்தும் நிலைபெற்று வாழ்க!

ஆ) ஆகாயத்தால் சூழப்பட்ட அனைத்தையும் அறிந்து உரைக்கும்
வளமான தமிழ்மொழி வாழ்க!

இ ) எங்கள் தாய்மொழியாகிய தமிழ்மொழி உலகம் உள்ள வரையிலும்
வாழ்க!

விடை :  

ஆ) ஆகாயத்தால் சூழப்பட்ட அனைத்தையும் அறிந்து உரைக்கும்
வளமான தமிழ்மொழி வாழ்க!

3. பொருளோடு பொருத்துக

சூழ்கலி - சூழ்ந்துள்ள அறியாமை இருள்

வையகம்  -  உலகம்

இசைகொண்டு   -   புகழ் கொண்டு 

வண்மொழி    -  வளமிக்க மொழி 

***************     *************    ************

விடைத்தயாரிப்பு :

திரு.மணி மீனாட்சி சுந்தரம் , 

தமிழாசிரியர் , அ.மே.நி.பள்ளி ,

சருகுவலையபட்டி , மேலூர் , மதுரை.

***************     *************    ************





Post a Comment

0 Comments