ஒன்பதாம் வகுப்பு - தமிழ் - புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் - செயல்பாடு 6 - செய்யுள் , பாடலின் கருத்தை அறிதல் - வினா & விடை / 9th TAMIL - REFRESHER COURSE MODULE - ACTIVITY 6 - QUESTION & ANSWER

 

ஒன்பதாம் வகுப்பு  - தமிழ் 

புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்

செயல்பாடு - 6 

செய்யுள் / பாடலின் கருத்து அறிதல்

கற்றல் விளைவு:

         பல்வேறுவகை படித்தல் பொருள்களில் காணப்படும் சொற்கள், தொடர்கள், மரபுத்தொடர்கள் ஆகியவற்றைப் புரிந்துகொண்டு நயம்பாராட்டுதல்.

            படிக்கும்போது படைப்பாளியின் சொற்சித்திரத்திறனை நயம்படப் பாராட்டித் தமது கல்வி நிலைக்கு ஏற்ப அதை வெளிப்படுத்துதல்

        தேவைப்படின் பார்வை நூல்களாகிய அகராதிகள், தேசப்படங்கள், கலைக் களஞ்சியம் போன்றவற்றையும் இணையத்தளத்தையும் பொருத்தமான முறையில் பயன்படுத்துதல். பிறர் உதவியை நாடியும் இதனைச் செய்யலாம்.

கற்பித்தல் செயல்பாடு:

அறிமுகம்:

             கவிஞனின் மனக்கருத்தே நயமான சொற்களால் கவிதைகளாகின்றன. உப்பில்லாத உணவு எப்படியோ?அப்படித்தான் கருத்தில்லாத கவிதையும். கருத்தில்லாத கவிதை சிறக்காது. காலம் கடந்தும் கவிதைகள் இன்றும் வாசிக்கப்படுவதற்கான காரணம் அதன் உட்கருத்தும் வெளிப்பாட்டு நயமும் என்பதை உணரலாம். கவிஞனின் ஒவ்வொரு கவிதைவரியும் ஏதேனும் ஓர் ஆழமான கருத்தினைக் கொண்டே அமைகின்றது. கவிதையின்நயமும் கருத்தும் உடலும் உயிரும் போன்றவை ஆகும். எனவே,கவிதையை எந்த அளவிற்குப் படித்துச் சுவைக்கின்றோமோ அந்த அளவிற்கு அதன் வெளிப்பாட்டு நயத்தையும் உணர்ந்து சுவைக்க வேண்டும்.

விளக்கம்

         மாணவச் செல்வங்களே! செய்யுளின் அடிகளுக்கு நம்மால் எப்படிக் கருத்தை எழுதமுடியும் என்று நினைக்கிறீர்களா? அது மிகவும் எளிமையானது. சில எளிய பயிற்சிகள் வாயிலாக. அவற்றைக் கற்றுக் கொள்ளுங்கள். சில பயிற்சிகளுக்குப் பிறகு நீங்களும் தானாகவே செய்யுளைப் படித்துப் பொருளுணரக்கற்றுக் கொள்வீர்கள்.

          செய்யுள் அல்லது கவிதையின் தலைப்பினை உற்றுநோக்கி, அதன் உட்பொருளினை உள்வாங்கிக் கொள்ளவேண்டும். செய்யுள் அல்லது கவிதையின் பொருள் விளங்கச் சொற்களைப் பிரித்து, ஒரு முறைக்கு இருமுறை நன்கு வாய்விட்டு முழுமையாக ஆர்வத்துடனும் உணர்ச்சியுடனும் படிக்க வேண்டும்.


       படிக்கும்போது பொருள் புரியாத சொற்களை அடிக்கோடிட்டு வைத்துக் கொள்ள வேண்டும். அடிக்கோடிட்ட பொருள் புரியாத சொற்களுக்குத் தமிழ் அகராதி கொண்டு பொருளை அறியவேண்டும். அச்சொற்களின் அருகில் பொருளை எழுதி
வைத்துக்கொள்ள வேண்டும் இப்போது அக்கவிதையையோ, செய்யுளையோ மீண்டும் நன்கு படித்துப் பார்த்து,
அடிக்கோடிட்ட சொற்களின்மேல் எழுதி வைத்த பொருளையும் உற்றுநோக்கி, ஒவ்வோர் அடியின் கருத்தையும் தாளில் எழுத வேண்டும்.

         ஒவ்வோர் அடியின் கருத்தையும் முன்பின் அடிகளோடு ஒப்பிட்டுப் பார்க்க
வேண்டும். அப்போதுதான் கவிதையின் கருத்து, தொடர்ச்சியாக வருகிறதா? என்பதை
அறியமுடியும். ஏனென்றால், செய்யுளின் முதல் அடியின் கருத்து இரண்டாம் அடியிலும்
முடிவுபெறலாம்.

       கவிதையின் கருத்து சங்கிலித்தொடர் போலத் தொடர்ச்சியாக இருப்பதையும் நாம்
உணரலாம். உவமை, உருவகம் இடம்பெறும் சூழலில் சில இடங்களில், செய்யுள்
அடிகளின் கருத்துச்செறிவு சற்று மாறுபட்டும் நிற்கும் என்பதை நாம் நினைவில்
வைத்துக்கொள்ள வேண்டும். செய்யுளின் கருத்தை முழுமையாக எழுதி மையக்கருத்தை உணரலாம்.

எடுத்துக்காட்டாகப் பழமொழிநானூறு என்னும் நூலிலுள்ள ஒரு பாடலை எடுத்துக்
கொள்வோம்.

விருந்தோம்பல்

மாரியொன் றின்றி வறந்திருந்த காலத்தும்
பாரி மடமகள் பாண்மகற்கு - நீருலையுள்
பொன்திறந்து கொண்டு புகாவாக நல்கினாள்
ஒன்றுறா முன்றிலோ இல்.

- முன்றுறை அரையனார்.

    செய்யுளின் தலைப்பு, 'விருந்து' பற்றியது என்பதை உணரலாம். இச்செய்யுளின்
பொருள் விளங்கச் சொற்களைப் பிரித்துப் படிக்கலாம்.

மாரி ஒன்று இன்றி வறந்துஇருந்த காலத்தும்
பாரி மடமகள் பாண்மகற்கு - நீர்உலையுள்
பொன்திறந்து கொண்டு புகாவாக நல்கினாள்
ஒன்றுஉறா முன்றிலோ இல்.

செய்யுளில் உள்ள பொருள் புரியாத சொற்களைக் கண்டறிதல்

பொருள் புரியாத சொற்கள்

              மாரி, வறந்து, மடமகள், பாண்மகற்கு, புகாவா, நல்கினாள்,முன்றில்

அகராதி கொண்டு பொருள் அறிதல்

மாரி-மழை, வறந்து-வறண்டு, மடமகள்- இளமகள், பாண்மகற்கு -பாணர்களுக்கு,
புகாவா-உணவாக, நல்கினாள் - கொடுத்தாள், முன்றில் - வீட்டின் முன் இடம்

    இவ்வாறு பொருள் புரிந்துகொள்வதற்குக் கடினமாக இருக்கும் சொற்களின்
பொருளை அறிந்து செய்யுளைப் படிக்கவேண்டும்.

செய்யுளின் ஒவ்வோர் அடிக்கும் உரிய கருத்தை எழுதலாம்.

1. மாரி ஒன்று இன்றி வறந்து இருந்த காலத்தும் - அடியின்பொருள் : மழையில்லாமல் வறட்சி ஏற்பட்ட காலத்திலும்

2. பாரி மடமகள் பாண்மகற்கு -

 அடியின்பொருள் : பாரியின் இளமகளிரிடம் பாணர்கள், இரந்து (பிச்சை கேட்டு) நின்றனர்.

நீர்உலையுள்- உலை நீரில் (இந்தச் சொல் மட்டும் முன்னர்க் குறிப்பிட்டதைப்
போல அடுத்த அடியோடு சேர்ந்தால்தான் பொருள் முழுமை பெறும்.)

3. பொன்திறந்து கொண்டு புகாவா நல்கினாள் - அடியின்பொருள் : பொன்னை வைத்து அவர்களுக்குத் தந்தனர்.

4. ஒன்றுஆகும் முன்றிலோ இல் -  அடியின்பொருள் : ஒன்றில்லாத வீடு எதுவும்
இல்லை.

செய்யுள் கருத்து

மழையில்லாமல் வறட்சி ஏற்பட்ட காலத்திலும் பாரியின் இளமகளிரிடம் பாணர்கள்
இரந்து (பிச்சை) கேட்டு நின்றனர். அப்பாரி மகளிர், உலைநீரில் பொன்னை வைத்து
அப்பாணர்களுக்குத் தந்தனர். அதனால், ஒன்றில்லாத வீடு எதுவும் இல்லை என்பதை
அறியலாம்.

செய்யுளின் மையக்கருத்து

பாரிமகளிர் தம் வறுமையிலும் தந்தை பாரியைப் போலவே விருந்தினர்களை நன்கு
பேணினர் என்பது இச்செய்யுளின் மையக்கருத்தாகும்.

*****************    ********    ****************

           மதிப்பீட்டுச் செயல்பாடு

1. பின்வரும் செய்யுள் அடிகளின் கருத்துகளைத் தனித்தனியாக எழுதுக.

"மலைப்பொழிவு"

"வாயும் வயிறும் ஆசையில் விழுந்தால்
வாழ்க்கை பாலைவனம் - அவர்
தூயமனத்தில் வாழ நினைத்தால்
எல்லாம் சோலைவனம்"

      மனிதன் ஆசையில் விழுந்து விட்டால் அவனது வாழ்வு பாலைவனம் போல் பயனற்றதாகிவிடும். நல்ல உள்ளத்தோடு வாழ நினைத்தால் அவனுடைய வாழ்க்கை மலர்ச்சோலையாய் மாறிவிடும்.

2. கீழ்க்காணும் செய்யுளின் மையக்கருத்தை எழுதுக.

"இன்சொல் விளைநிலனா ஈதலே வித்தாக
வன்சொல் களைகட்டு வாய்மை எருவட்டி
அன்புநீர் பாய்ச்சி அறக்கதிர் ஈனஓர்
பைங்கூழ் சிறுகாலைச் செய்."

பாடலின் பொருள் 

 *  இனிய சொல்லையே விளை நிலமாகக் கொள்ள வேண்டும். 

* ஈகை என்னும் பண்பை விதையாக விதைக்க வேண்டும்.

* வன்சொல் என்னும் களையை நீக்க வேண்டும்.

*  உண்மைபேசுதல் என்னும் எருவினை இடவேண்டும்.

* அன்பாகிய நீரைப் பாய்ச்ச வேண்டும்.

*  அறமாகிய கதிரைப் பயனாகப் பெறமுடியும்.

* இவ்வாறு இளம் வயதிலேயே செய்ய வேண்டிய செயல்களைச் செய்ய வேண்டும்.

 
மையக்கருத்து 

            இளம் வயதிலேயே நல்ல பண்புகளைக் கற்றுக் கொள்ள வேண்டும். அறநெறியுடன் வாழ்தல் வேண்டும்.

**************    ****************   ***********


Post a Comment

2 Comments