உலக சுற்றுலா தினம்
( WORLD TOURISM DAY )
27 • 9 • 2021
காணும் வெளியெங்கும் பறந்து
கவலைவிடுத்து விடுதலை அடைத்து
மன அழுத்தம் குறைய ! மகிழ்ச்சி நிறைய !
சோகம் மறைய ! சுகம் வளர..!
பண்பாட்டு யாத்திரை தரும் மாமருந்தென
மனித மனம்தனில் கலாச்சார கலை வளர்க்கும்
காடும் , மலையும் கடலும் கோவிலும்
கட்டிக் கலையும்
சொல்லும் மனம் மகிழும் அற்புதங்கள் காண
சுற்றி வருவோம் சுற்றுலாவென ...!
சுற்றுலா ; ( Tourism )
வேடிக்கைக்காக, விளையாட்டாக பயணிக்கும் மனிதன் பல வகையான இடங்களையும், பொருட்களையும் பார்வையிட்டு , முகாமிட்டு தரம் கண்டு மகிழ்ந்து புத்துணர்வு பெறுவது சுற்றுலா.
TOUR -- என்னும் ஆங்கிலச் சொல் " TORNUS " என்னும் இலத்தீன் மொழிச் சொல்லிலிருந்து பிறந்ததாகும். " டோர்னஸ் " என்றால் சக்கரம் என்று பொருள். எனவே இச்சொல் சுற்றி வருவதைக் குறிக்கும் சுற்றுலாவானது.
ஓரிடத்தில் வாழும் மக்கள் பாரம்பரியம் , பண்பாடு , வரலாறு, பழக்க வழக்கங்கள் , வழிபாட்டு முறை , சடங்குகள் போன்றவற்றைத் தெரிந்துக் கொள்ள மேற்க்கொள்ளும் பயணமே சுற்றுலாவாம்.
சுற்றுலா தினத்தின் முக்கிய நோக்கம் பொருளாதாரப் பெருக்கம் , சமாதானம், சர்வதேச மகிழ்வு அகியவற்றை மேம்படுத்துதல். மனித குலம் முழு அடிப்படைச் சுதந்திரம் குறித்த அறிவு பெறுதல் போன்றவற்றைக் குறிக்கிறது.
" யாதும் ஊரே யாவரும் கேளீர் " - என்னும் நம் தாரக மந்திரமும் இச்சுற்றுலாவிற்கு சிறப்பைத் தருவனவாகும்.
சுற்றுலா மனித குலத்தை மேம்படுத்தும் நோக்கில் 1970 -- ஆம் ஆண்டு செப்டெம்பர் 27 -- ம் நாளை உலக சுற்றுலா தினமாக ஐ.நா அங்கீகரித்தது. அவ்வகையில் உலக சுற்றுலா தினம் , உலக சுற்றுலா நிறுவனத்தின் ( WTO ) ஆதரவில் 1980 -- ஆம் ஆண்டிலிருந்து கொண்டாடப் பட்டு வருகிறது.
உலக பொருளாதாரத்தில் பெரும் பங்களிப்பு சுற்றுலாவின் மூலம் ஈட்டப் படுகின்றது . இச்சுற்றுலா உலகின் மிகப்பெரிய தொழில்துறை என்றால் மிகையல்ல. உலக அளவிலான பல மக்களின் வாழ்வாதாரமாகவும் இவை விளங்குகிறது. இச்சுற்றுலாவை மேம்படுத்தி பொருளாதாரத்தை அதிக அளவு பெருக்கிய நாடாக ஸ்பெயின் முதல் இடத்தைப் பெற்றுள்ளது.
பிரான்ஸ் இரண்டாம் இடத்தையும் , ஜெர்மன் மூன்றாம் இடத்தையும் பெற்று விளங்குகின்றன. சீனா 13- ம் இடத்தையும், இந்தியா 40 - வது இடத்தையும் பெற்று விளங்குகின்றது. பாலைவனத்தை மட்டுமே கொண்ட நாடான துபாய் சுற்றுலாவில் அதிக வருவாய் ஈட்டிவருகிறது. இன்று உலகிற்கு சவால் விடும் வளர்ச்சியைப் பெற்றுள்ள சிறிய நாடான " சிங்கப்பூர் " எவ்விதமான வேறு வளமும் இல்லாமல் சுற்றுலாவையே மூலதனமாகக் கொண்டு பொருளாதாரத்தில் பெரும் வருவாயை ஈட்டுகிறது.
இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு மிகப்பெரிய பலமாகவும் நம்பிக்கையாகவும் இருப்பது சுற்றுலா வாகும். மேலும் சில நாடுகளின் பொருளாதாரம் நாட்டின் சுற்றுலாவையே நம்பியுள்ளது.
இந்தியச் சுற்றுலா :
இந்தியா சுற்றுலாவின் அனைத்து வாய்ப்புகளையும் பெற்றுள்ளது. இந்தியச் சூழலில் பல்வேறு வகையான காலநிலைகள் , மக்கள், கலாச்சாரம் , கலைகள், மொழிகள் என சுற்றுலாவிற்கான வாய்ப்புகளை உடைய துறையாக விளங்குகிறது. இந்திய அரசு இத்துறையில் சிறப்பு கவனம் செலுத்தி திட்டம் பல அறிவித்து சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதன் மூலம் உலக நாடுகளின் பட்டியலில் முன்னேறும் வாய்ப்புகளைப் பெற்று விளங்கும்.
மனம் சலித்த மக்கள் புத்துணர்ச்சி பெறவும் , இயற்கை வளங்களை கண்டுணரவும் , வேறு பல இட கலாச்சாரத்தைக் காணவும் இத்தகைய சுற்றுலாவை உள்நாடு , வெளி நாடு என சுற்றுலாவை தத்தம் வசதிக்கேற்ப செல்வார். பல புதிய இடங்களைக் காணும் மனது களிப்பிலும், கருத்திலும் நிறைந்து இன்பமடையும். அவை அனுபவமாகவும் , அறிவைப் பெருக்கவும் , பாடமாகவும், பண்பாடு விளக்கவும் அளவிடப்படுகின்றன. இந்தியாவில் மாசுக் குறைபாடு காணப் பட்டாலும் , தொன்மையான இடங்களைப் பார்வையிட வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வரத்து ஆண்டு தோறும் அதிகரித்துக் கொண்டே உள்ளது. இந்தியாவில் ஆன்மீகப் பயணமே அதிக அளவு உள்ளதாக சுற்றுலாத் துறை விளக்குகிறது .
பாதுகாப்பற்ற சுற்றுலா :
பாகிஸ்தான் , வங்கதேசம் , இலங்கை , உள்ளிட்ட நாடுகளுக்குச் செல்லும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைந்துக் கொண்டு வருவதாக , உலக சுற்றுலா நிறுவனம் தெரிவித்துள்ளது. எனவே ஒருநாட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் உடல்நலமும், உயிரைக் காக்கும் பொறுப்பையும் பாதுகாக்கும் வண்ணம் , அந்த நாடுகள் உறுதி செய்யப்பட வேண்டும்.
சுற்றுலா சுவடுகள் :
இயற்கையின் மடியில் கொட்டிக் கிடக்கும் அழகையெல்லாம் உள்ளத்தில் அள்ளி எண்ணத்தில் நிறுத்தும் கலையே சுற்றுலா.இயற்கை படைக்கும் எண்ணிலடங்கா உயிரினங்கள் , அழகுகள், ஆச்சரியங்கள் போன்றவை கண்ணையும் , கருத்தையும் கவரும் வண்ண வண்ண ஓவியங்கள் .
ஸ்பேஸ் போர்ட் அமெரிக்கா:
தற்போதைய விண்வெளி சார்ந்த ஆராய்ச்சிகள் காணும் முன்னேற்றம் , இனி வரும் காலங்களில் சுற்றுலாப் பயணி களை விண்ணுக்கு அழைத்துச் செல்லும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இத்திட்டத்திற்கு " ஸ்பேஸ் போர்ட் அமெரிக்கா " என்று பெயர். இத்திட்டம் வெற்றி பெறுமாயின் கற்பனைக்கு எட்டாத ஒரு செயல் சாத்தியமாகும் .இடம் விட்டு இடம் செல்வது ஓய்வு மற்றும் ஏனைய காரணமாகவும் சென்று தங்கி அவ்விடத்தின் அமைப்பு , சிறப்பு , பாய்ந்து நெளிந்து வளையும் ஆறுகள் , அதன் கரை தரும் சோலைகள், பரந்த பரப்பெங்கும் நீல வெண் முத்துத் திட்டுக்களாய் கடல்கள் , பச்சை உடுத்திய பவனி வரும் தேர்போல விண்ணை முட்டும் மலைகள் , அவற்றை அலங்கரிக்கும் வெள்ளிக் கோடுகளாக அருவிகள் , பலவித விலக்கு களின் உல்லாச ஊர்வலங்கள். பழங்கதைப் பேசும் அழகு குகைகள், பல வண்ணமும், மணமும் நிறைந்த மண்ணின் மாட்சிகள் என எத்தனை எத்தனை காட்சிகள் மனம்மகிழ்ந்து இன்புற.
கலாச்சாரம், நாகரீகம் , பண்பாடு , நாடு , இனம் , மொழி , போன்றவறில் வேறுபட்டாலும் வேற்றுமையில் ஒற்றுமைக் காண்பதே மனித இனத்தின் மகத்துவம் சொல்வதும், மனித உறவுகளைப் புரிந்துக் கொள்ள வைப்பதுமாக விளங்குகிறது. உள்நாடு, வெளிநாடு என எங்குச் செல்லும் போதும் திட்டமிடுதலை செயல்படுத்துவதன் மூலம் செல்லும் இடத்தின் சிறப்பு , வளம் , கலாச்சார ம் போன்றவற்றைக் காணும் வாய்ப்பைப் பெறலாம்.
தமிழக சுற்றுலாத் துறை :
" பல ஊர்சுற்றி வந்தவர் பண்டிதர் "
என்பது பண்டைய தமிழ் மக்களின் பைந்தமிழ் வரிகள் இது சுற்றுலாவின் மேன்மையை எடுத்தியம்புகிறது. சுற்றுலா வளர்ச்சியில் இரண்டாம் இடத்தைக் கொண்ட நீண்ட வரலாற்றையும் , தனித்துவ பண்பாட்டையும், எழில் கொஞ்சும் நிலப்பகுதியையும் கொண்டு விளங்குகிறது தமிழ் நாடு.
பண்டைக் காலம் தொட்டே இயற்கையைப் போற்றிய தமிழன் , அதனை ஏற்றமிகு தோற்றத்தை " குறிஞ்சி , முல்லை , மருதம் , பாலை , நெய்தல் எனப் பிரித்து விவரித்தான். இவற்றில் குறிஞ்சி எனப்படும் பகுதிகளான கோடைக்கானல், நீலகிரி , மேற்குத் தொடர்ச்சி மலைகள் போன்றவை எழில் கொஞ்சும் அடர் மிகு வனப்பகுதிகள் ஆகும். இவற்றைக் காணும் போது மகிழ்ச்சியும், புத்துணர்ச்சியும் மேலோங்கும்.
பாரம்பரியச் சின்னங்கள் நிறைந்த தமிழ்நாடு , திராவிட கலைகள் மிளிரும் கட்டிடங்கள் மிகு கோவில்கள் பெருமை சேர்க்கின்றன. இக்கோயில்கள் வியக்கத்தக்க கோபுரங்களும் , ரகங்களும் கொண்டதாக விளங்கு கிறது. சோழப் பெருமை தனைப் பறைசாற்றும் தஞ்சை பெரிய கோவில் , பல்லவர்களின் மாமல்லபுர சிற்பங்களும் , கோயில்களும் உலகப் பாரம்பரியச் சின்னங்களாக அங்கீகரிக்கப்பட்டு பெருமை சேர்க்கின்றன. மேலும் தஞ்சை , மதுரை , காஞ்சி மற்றும் சுவாமிதோப்பு ஆகியவை கோயில் நகரங்களாக அழகு சேர்ப்பன. கன்னியா குமரியின் விவேகானந்தர் பாறையும், திருவள்ளுவர் திருவுருவச் சிலையும் காணும் கண்களை களிப்புறச் செய்பவை ஆகும்.
மேலும் தமிழகத்தின் சுற்றுலாவிற்கென கண்டுகளிக்கும் சிறந்த பல இடங்கள் பெருமை சேர்க்கின்றன. அவை சிறப்பு மிக்க கோவில்கள் , குளிர்பிரதேசங்கள், கடற்கரைகள் , தொல்லியல் சின்னங்கள் , மலைப்பிரதேசங்கள் எனப் பல இட ங்கள் கண்ணைக் கவரும் வண்ணத்தில் உள்ளன. தற்போது சுற்றுலாத் துறையில் முன்னணியில் விளங்கும் தமிழகம் முயற்சி மேற்கொண்டு சிறப்புக் கவனம் செலுத்தினால் முதலிடத்தில் மிளிர்வோம் என்பதில் ஐயமில்லை.
உலக பாரம்பரிய தளங்களாக --- தமிழ்நாடு :
யுனெஸ்கோவினால் அறிவிக்கப்பட்ட தமிழ்நாட்டின் ஐந்து உலக பாரம்பரிய தளங்கள் .
* மாமல்லபுரம்
* தஞ்சை பெருவுடையார் கோயில்
* கங்கைகொண்ட சோழபுரம்
* ஐராவதேஸ்வரர் கோயில்
* நீலகிரி மலை இரயில் பாதை -- போன்றவை தமிழ் நாட்டின் பெருமைக்குரிய உலகத்தரம் வாய்ந்த இடங்களாகும்.
சுற்றுலாவின் பயன்கள் :
சுற்றுலாவை மேம்படுத்துவதன் மூலம் பொருளாதார முன்னேற்றம் அடைய ஏதுவாகிறது. உலக மக்களை ஒன்றினைப்பதன் மூலம் வேற்றுமை நீக்கி ஒற்றுமை கொள்ள வைக்கிறது.அந்நியச் செலாவணியை ஈட்டித் தருகின்றன. இதன் பயனாக போக்குவரத்து பெருகிட வழிகாண்கிறது. ஒரு நாட்டு மக்களின் கலாச்சார, பழக்க வழக்கங்களை அறியவும் , அது தொடர்பான அறிவைப் பெறவும் பயன்படுகிறது. உணவகம் , தங்குமிடம் , பொழுதுபோக்கு , போக்கு வரத்து , ஓய்விடம் என ஐந்து முக்கிய துறைகளின் வேலை வாய்ப்பை தருகின்றன.
" கல்வி அறிவு கற்பதால் கிடைப்பது
அனுபவ அறிவு என்பது சுற்றுலாவினால் பெறுவது."
உலகைச் சுற்றி வரும் ஆசையில்லாதவர் இருக்க முடியுமா ?
சுற்றுலா என்பதை இடம் விட்டு இடம் செல்லும் பயணம் என்று சொல்வதில் முடிவுறுவதில்லை .சிறுவயது உறவுப் பயணம், கல்விச் சுற்றுலா , நண்பர்களுடன் கண்டுகளித்த இன்பச் சுற்றுலாவின் இனிய நாட்களின் நினைவுகள் என்றும் மகிழ்ச்சி நிறைந்தவை. இவற்றை எப்போது நினைத்தாலும் மனம் துன்பம் மறந்து இன்பத்தில் திழைக்கும்.
எனவே திட்டமிடுதலின்படி முடிந்த வரையில் ஒவ்வொரு வருடமும் இனிய சுற்றுலா சென்று இன்பம் மட்டுமல்லாது நாட்டின் பொருளாதாரத்தையும் கூட்டி மகிழ்வோம் .! இனியச் சுற்றுலா இன்பம் பயக்கும்.! இத்தினத்தைப் என்றும் போற்றுவோம் .!
0 Comments