பம்மல் சம்பந்த முதலியார் நினைவு தினம்.
24 • 9 • 2021
" நாடகம் என்பது பாட்டும் உரையும் நடிப்பும் தமிழ் மரபு வழி கூறும் இலக்கணமாக விளங்குகிறது."
சங்க காலத்தில் குணநூல் , கூத்துநூல், சயந்தம் நூல் , மதிவாணர் நாடகத் தமிழர் , முறுவல் போன்ற நாடக நூல்கள் இருந்தன என்பதை அடியார்க்கு நல்லார் குறிப்பிடுகிறார்.
" தமிழ் நாடகக் கலையின் சான்றாக " தொல்காப்பியமும் , சிலப்பதிகாரமும் " நூற்பாக்களைத் தருவதிலிருந்து நடகக்கலையின் சிறப்பை அறியலாம் ."
தமிழ் நாடகத் தந்தை , நாடகாசிரியர் , மேடைநாடக நடிகர் , எழுத்தாளர் , நாடக இயக்குனர் , வழக்கறிஞர், நீதியரசர் என பல பரிமாணங்களைக் கொண்டவர் பம்மல் சம்பந்த முதலியார் .
சம்பந்த முதலியார் அவர்கள் 1873 - ஆம் ஆண்டு பிப்ரவரி 1 -ம் நாள் சென்னை பம்மல் விஜயரங்க முதலியார் - மாணிக்கவேலு அம்மாள் இணையரின் மகனாகப் பிறந்தார். இவரின் இயற்பெயர் திருஞான சம்பந்தம் என்பதாகும்.
புத்தகச் சாலை :
சம்பந்த முதலியார் அவர்களின் தந்தை தமிழாசிரியராவும் , கல்வித் துறை ஆய்வாளராகவும் இருந்தவர். அவர் தமிழ் நூல்கள் பலவற்றைத் தாமே வெளியிட்டு வந்தார் . இதனால் இவரது வீட்டில் இரண்டாயிரம் புத்தகங்கள் தமிழும் , ஆங்கிலமுமாக இணைந்து அழகு சேர்த்தன.
இவ்வாறு கற்றோர் நிறைந்த குடும்பத்தில் பிறந்த சம்பந்த முதலியார் அவர்கள் படிக்கத் தொடங்கிய நாள் முதலே அனைத்துப் புத்தகங்களையும் ஒவ்வொன்றாக ஆர்வமுடன் பயின்று தெளிந்தார்.
கல்வி :
" விளையும் பயிர் முளையிலேயே தெரியும் " என்பதற்கிணங்க சம்பந்த முதலியார் சிறுவயது முதல் தானே ஆர்வம் மேலோங்கக் கற்றலில் ஈடுபட்டார். மேலும்
கோவிந்தப்ப நாயக்கர் உயர் நிலைப் பள்ளி , பச்சையப்பன் உயர்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளில் கல்வி பயின்றார். 1880 - ஆம் ஆண்டு புகழ்பெற்ற சென்னை பிராட்வேயிலுள்ள " இந்து புராப்பனரட்டரி ( Hindu Proprietory school )" பள்ளியில் ஆங்கில வழிக் கல்வி கற்றார். 1882 - ஆம் ஆண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரிப் பள்ளியில் தொடர்ந்து படித்தார் . 1886 - ஆம் ஆண்டு முதல் பச்சையப்பன் கல்லூரியில் பயின்று மெட்ரிக்குலேசன் தேர்வில் வெற்றி பெற்றார். அதனைத் தொடர்ந்து பி. ஏ . பட்டமும் , 1897 - ம் ஆண்டு சட்டத்தில் பட்டமும் பெற்றார்.
பின்னர் சட்ட வழக்கறிஞராக 1925 - முதல் 1928 - ம் ஆண்டு வரை நீதிமன்றத் தலைவராகவும் பணியாற்றினார்.
நாடக ஆர்வம் :
நாடகத்தில் ஆர்வம் கொண்ட சம்பந்த முதலியார் , தமிழ் , ஆங்கில நாடகங்களை சிறுவயது முதலே ஆர்வத்துடனும் , மகிழ்ச்சியுடனும் கண்டுகளித்தார். இவ்வாறு நாடகத்தின் தரம் அறியும் திறன் பெற்றதால், தமிழ் நாடகங்களின் தரமற்ற நிலையை எண்ணி மனம் வருந்தினார்.
1891 - ஆண்டு பெல்லாரி கிருஷ்ணமாச்சார்லு என்ற ஆந்திர நாடக நடிகர் நடித்த நாடகங்களைக் கண்ட சம்பந்த முதலியாருக்கு தமிழ் நாடகத்தின் மேல் பற்றினை ஏற்படுத்தியது.
சுகுண விலாச சபை :
தனது நாடக சபையை வலுப்படுத்த சுகுண விலாச சபை" என்னும் குழுவை 1891 - ம் ஆண்டு சம்பந்த முதலியார் தோற்றுவித்தார்.இப்பயின்முறை நாடகம் தமிழகத்தில் பல நாடகக் குழுக்கள் பிற்காலத்தில் தோன்றுவதற்கு தூண்டுதலாக அமைந்தது . இந்தக் குழுவில் இணைந்த அனைவரும் கல்வி , மற்றும் நாடகத்தில் ஆர்வம் கொண்டவர்களாக இருந்தனர். இதனைத் தொடர்ந்து 1891 - முதல் 1931 - ம் ஆண்டு வரையிலும் சம்பந்த முதலியார் சிறந்த நாடகப் பணியை நடத்தி வெற்றிகண்டார். 94 - நாடகங்களை எழுதியுள்ளார்.
தாம் எழுதிய நாடகத்தைச் சம்பந்த முதலியார் அவர்களே அச்சிட்டு வெளியிட்டார். ஆங்கிலப் புலமையும் மேலோங்கி யிருந்ததால் , ஆங்கில நாடகங்களையும் தமிழ் மொழியில் பெயர்த்தார்.
சிறந்த நாடகங்கள் :
சிறந்த தமிழ் நாடகங்களாக விளங்குவன யயாதி, மனோகரா , இரண்டு நண்பர்கள் , புஷ்பவல்லி, சுந்தரி , லீலாவதி , சுலோசனா , கள்வர் தலைவன் , முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் , ரத்னாவளி , காலவரிஷி , மார்க்கண்டேயர் , அமலாதித்தியன், வாணீபுர , வணிகன் , சபாபதி, வேதாள உலகம் , சிறுதொண்டர், வள்ளி மணம் , கொடையாளி கர்ணன், காளப்பன் கள்ளத்தனம் , நல்லதங்காள், ஏமாந்த இரண்டு திருடர்கள் , ஸ்திரி ராஜ்யம் , இந்தியனும் ஹிட்லரும் , கலையோ காதலோ! , போன்றவை சம்பந்த முதலியாரின் நாடகப் படைப்புகள் ஆகும்.
நாடக நூல்கள்
* கீதமஞ்சரி
* நாடகத் தமிழ்
* நாடக மேடை நினைவுகள்
* நடிப்புக் கலையில் தேர்ச்சி பெறுவது எப்படி ?
* பேசும் படம்
* பேசும்பட அனுபவங்கள் -- போன்ற சிறந்த நாடக நூல்களை சம்பந்த முதலியார் எழுதியுள்ளார்.
திரைப்படங்களான நாடகங்கள் .
சிறந்த கதைகளையும் , சமுக அவலங்களையும் தந்த நாடகங்கள் அவற்றின் மேன்மை கருதி திரைப்படங்களாக உருபெற்றது. இதன் காரணமாக சம்பந்த முதலியார் அவர்கள் 1931 - ம் ஆண்டு திரைத்துறையில் பணியற்றத் தொடங்கினார் . முதலில் சதி சுலோசனா என்ற நாடகம் திரையிடப்பட்டது. 1936 - ல் எடுக்கப்பட்ட " மனோகரா " திரைப்படத்தில் புருஷோத்மனாக வேடமேற்று நடித்தார். அதன் பின்பு காலவரிஷி, ரத்னாவளி , லீலாவதி , சந்தர ஹரி , சபாபதி , பொங்கள் பண்டிகை , இராமலிங்க சுவாமிகள் போன்ற நாடகங்களும் திரைப்படமாக்கப் பட்டன.
ஆங்கில நாடகம் :
மாணவப் பருவத்திலேயே நாடகம் மீது நாட்டம் கொண்டு விளங்கிய சம்பந்த முதலியார் 1883 - ஆம் ஆண்டு நடைபெற்ற பள்ளி விழாவி்ல் அலெக்சாண்டரும் கள்வனும் என்ற ஆங்கில நாடகத்தில் கள்வனாக வேடம் ஏற்று நடித்தார் . பின்பு மற்ற குழுவின் நாடகங்களையும் கண்ணுற்று அவற்றில் காணப்படும் வேறுபட்ட நடைகளையும் , நாடகம் பற்றிய சிந்தனைகளையும் பெருக்கிக் கொண்டார் . மேலைநாட்டு நாடகங்களைக் கண்டு , நம்மிடம் உள்ள குறைகளைக் கண்டறிந்து , நீக்கி மேல்நாட்டு முறையை அறிமுகப்படுத்த விரும்பினார். இவற்றின் விளைவே பயின் முறை ( Amateur) நாடக , முறையில் நாடகத்தைப் படைக்க உதவியது.
பயின் முறை நாடகம் :
மேலை நாடுகளில் செல்வாக்குப் பெற்று விளங்கிய இம்முறையைப் பயன்படுத்தி வெற்றிகண்டார். இதன் பொருள் , நாடகத்தை தொழிலாக க் கொள்ளாமல் கற்றவர்களும், அறிஞர்களும் தங்கள் ஓய்வு நேரத்தில் மேற்கொள்ளும் நாடகப் படைப்பாக இது அமைந்து பயன் பல கண்டது . இதுவே பயின்முறை எனப்பட்டது.
மொழிப்பெயர்ப்பு நாடகங்கள்
சம்பந்த முதலியார் அவர்கள் அயல் நாட்டுத் தொன்மை இலக்கியங்கள் , வரலாற்று நிகழ்வுகள் , சமூகப் பிரச்சனைகள் போன்ற நாடகங்களையும் , வடமொழி நாடகங்களையும் மொழி பெயர்த்தார் .
* ஆங்கில மொழியில் சேக்சுபியரின் ஐந்து நாடகங்களை மொழிபெயர்த்தார்.
* பிரெஞ்சு மொழியிலிருந்து " மோலியரின் " நாடகத்தை காளப்பனின் கள்ளத்தனம் என்ற பெயரில் நாடகமாடுகிறார்.
மொழிப் பெயர்க்கப் பட்ட நாடகங்களின் நிகழ்வுகள், பாத்திரப் பெயர்கள் போன்றவை தமிழ்படுத்தப் பட்டன. உதாரணம் , மேக்பத் என்பது " மகபதி " யாகவும் , ஹேம்லட் என்பது " அமலாதித்தன் " எனவும் மாற்றம் பெற்றன.
பம்மல் சம்பந்த முதலியார் பெற்ற விருதுகள் :
* 1916 - ஆம் ஆண்டு நாடகப் பேராசிரியர் - என்ற விருதைப் பெற்றார்.
* சங்கீத அகாதமி விருதை 1959 - ஆம் ஆண்டு பெற்றார்.
" பத்ம பூஷன் " பட்டத்தை 1959 - ஆம் ஆண்டே பெற்றார்.
மறைவு :
சட்டம் பயின்று, பட்டம் பல பெற்ற போதும் , நித்தமும் நாடகமே தன் முத்திரை என நாடகக் கலையின் உயிர் நாடியாகி, தன் உழைப்பை நல்கி , நாடகக் கலையை பிழை நீக்கி மீட்டெடுத்தவர். பாமரர் அன்றி பண்டிதரும் பாராட்டும் படைப்பைத் தந்தவர். நாடகம் பற்றிய பல ஆய்வுகளை மேற்கொண்டவர். ஈரோட்டில் நாடுகூட்டி, நாடகத் தமிழ் போற்றி ,மாநாடு தந்து நாடகத் தமிழ் க் கொடி ஏற்றியவர், நாடகக் குழுக்களுக்கு தம் ஆதரவு கரம் நீட்டி சிறப்புச் செய்தவர் என பல சாதனைகள் கண்ட மாமேதை 1964 - ஆம் ஆண்டு செப்டெம்பர் 24 - ம் நாள் மண்ணுலக வாழ்வை விடுத்து விண்ணுலகம் காணச் சென்றார்.
அவர் மறைந்த போதும் , அவர் கண்ட நாடகக்கலை என்றும் அரங்கேறிய நிலையில் அவர் புகழ் பாடுகின்றன.
தமிழன்னைக்கு தனிப் பெரும் கலையால் அணிசெய்த நாடக ஆசான் பம்மல் சம்பந்த முதலியார் அவர்களின் நினைவை என்றென்றும் போற்றுவோம்.!
0 Comments