பத்தாம் வகுப்பு - தமிழ்
புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்
செயல்பாடு - 20
கட்டுரை எழுதுதல்
கற்றல் விளைவு:
சொந்த அனுபவங்களைத் தமது சொற்களைப் பயன்படுத்திக் கட்டுரைவடிவில் எழுதுதல்.
கற்பித்தல் செயல்பாடு :
அறிமுகம்:
ஒரு பொருளைப் பற்றி நன்கு சிந்தித்து, கருத்துகளைத் திரட்டி, அவற்றை முறைப்படுத்தி எழுதுவதே கட்டுரையாகும். கட்டுரை, முன்னுரை பொருளுரை முடிவுரை ஆகியவற்றைக் கொண்டிருக்க வேண்டும்.
முன்னுரையானது எழுதப்புகும் கருத்தை அறிமுகப்படுத்துவதாக அமைய வேண்டும்.
பொருளுரை,கருத்துகளை வரிசைப்படுத்திச் சொல்லப்பட வேண்டும். அது,சிறுசிறு பத்திகளையும் எடுத்துக் கொண்ட பொருளுக்கேற்ற உள்தலைப்புகளையும் கொண்டிருக்க வேண்டும்.
முடிவுரை கட்டுரையில் சொல்லப்பட்டக் கருத்துகளைத் தொகுத்துக் கூறுவதாக அமையவேண்டும்.
சிறந்த கட்டுரைக்குச் செய்திகளைத் திரட்டுதல், திரட்டியச் செய்திகளை முறைப்படுத்துதல், தலைப்பு கொடுத்தல், பத்தி அமைத்தல், சிறந்த கருத்துகளை எடுத்தாளுதல், மேற்கோள்கள், பழமொழிகளைத் திரட்டுதல், நிறுத்தக் குறிகளைப் பயன்படுத்துதல் போன்றவை அவசியமாகும்.
ஆய்வுக்கட்டுரை, பொதுக்கட்டுரை, கற்பனைக் கட்டுரை, வரலாற்றுக் கட்டுரை வருணனைக் கட்டுரை எனக் கட்டுரைகள் பலவகைப்படும்.
விளக்கம்:
(எ.கா.) 'காடுகளைப் பாதுகாப்போம்' என்ற தலைப்பில் எவ்வாறு கட்டுரை எழுதலாம் என்று பார்ப்போம்.
காடுகளைப் பாதுகாப்போம்!
முன்னுரை:
' காடுகளே நாட்டின் அரண்' என்பர் சான்றோர். அதனால்தான் காடுகளைப்
பாதுகாக்க அரசும் மக்களுடன் இணைந்து பாடுபட்டு வருகிறது. பல வழிகளில் உலக
உயிர்களை வாழவைக்கும் காடுகளின் பாதுகாப்பைக் குறித்து நாம் அறிய வேண்டியது அவசியமாகும்.
இம்முன்னுரை, காடுகளைப் பாதுகாப்பதன் அவசியம் குறித்த அறிமுகக் கருத்தாக
அமைந்துள்ளது.
பொருளுரை
பசுமைப்பொன்:
காடுகளைப்'பசுமைப்பொன்' என்று அழைப்பதுமிகவும் பொருத்தமாகும். காடுகளின்இன்றியமையாமை கருதி நமது அரசு, வனத்துறைப் பாதுகாப்புக்காக ஓர் அமைச்சகத்தை நிறுவியுள்ளது.
நமது கடமை:
விறகிற்காகவும் மரப்பொருள்கள் உருவாக்கவும் நாம் அழித்த காடுகள் ஒன்று
இரண்டல்ல. காடுகள் அழிந்து போகுமாயின், அது நாட்டைப் பாதிக்கும் என்பதை நாம்
புரிந்துகொள்ள வேண்டும். அரசுக்கு மட்டுமன்று, காடுகளைப் பாதுகாக்கும் பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் உண்டு என்பதை அனைவரும் உணர வேண்டும்.
காடுகளின் முக்கியத்துவம்:
காடுகளே மழைக்கு முக்கியக் காரணியாக அமைகின்றன. அடர்ந்த மரங்கள் நிறைந்த காடுகள், மேகங்களைக் குளிர்வித்து மழையைத் தருகின்றன. காலத்தே மழை பெய்யாவிட்டால் நாட்டில் வறட்சி, பஞ்சம், குடிநீர்ப் பற்றாக்குறை போன்ற பல கேடுகள் விளையும்.
காடுகளைப் பாதுகாக்காவிடில் ஏற்படும் விளைவுகள்: காடுகளிலுள்ள மரங்களின்
வேர்கள், மண்ணில் ஊடுருவி இருப்பதாலேயே மண்ணின் கெட்டித்தன்மை மாறாது இருக்கிறது. மரங்கள் இல்லை என்றால் மண் இளகி ஆங்காங்கே நிலச்சரிவு,மண்ணரிப்பு, புதைமணல் போன்றவிளைவுகள் ஏற்படக்கூடும். காடுகளே மூலிகைகளின் கருவூலங்கள்
ஆகும். சித்தமருத்துவத்தில் பயன்படுத்தும் எண்ணற்ற மூலிகைகளைத் தருபவை
காடுகளே என்பதை நாம் மறந்து விடக்கூடாது. காடுகள் அழிவதால் எண்ணற்ற
தொடர்விளைவுகள் ஏற்படும். அரிதான பறவை, விலங்கினங்கள் அழிந்துவிடும்.
பாதுகாக்கும் வழிகள்:
நாட்டுக்கு அரண் போன்று விளங்கும் காடுகளைப் பாதுகாப்பது நமது கடமையாகும். மரங்களை வெட்டாமல் தடுப்பதும் மீறுபவர்களுக்குத் தண்டனைகளை அதிகப்படுத்துவதும் அவசியமாகும். மர விதைகளை வான்வழியே தூவி, புதிய காடுகளை உருவாக்கலாம்.
இவ்வாறாகப் பொருளுரையில் திரட்டிய கருத்துகளைச் சிறுசிறு தலைப்புகளில்
முறைப்படுத்தி, எளிமையான தொடர்களில் அமைக்க வேண்டும்.
முடிவுரை:
உலகையே பாதுகாக்கும் காடுகளை அழிக்காமல் பாதுகாப்பது அவசியம். ஒரு
மரத்தை வெட்டினால் இரு மரங்களை நடவேண்டும் என்பதை மனதில்கொண்டு,
மரங்களை வளர்த்து நமது வருங்காலத் தலைமுறையினரை நலமுடன் வாழவைப்போம். நல்ல காற்றையும் மழையையும் உணவையும் தந்து எல்லா உயிர்களையும் வாழவைக்கும்
காடுகளைப் பாதுகாப்போம்!
"காட்டு வளத்தைப் பெருக்கினால் அது
நாட்டு வளத்தைக் கூட்டுமே!"
இவ்வாறு முடிவுரையில் கட்டுரையின் கருத்தைச் தொகுத்துக் கூறவேண்டும்.
மதிப்பீட்டுச் செயல்பாடுகள்
1. கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைப் பயன்படுத்திக் கட்டுரை எழுதி, பொருத்தமான தலைப்பும் தருக.
முன்னுரை - நோயற்ற வாழ்வு - உடற்பயிற்சியின் அவசியம் - உடலை
வலிமையாக்குதல்- நோய் எதிர்ப்பு சக்தி- எளிய பயிற்சிகள் - நடைப்பயிற்சி- புத்துணர்ச்சி - இளமைத்தோற்றம் நீண்டஆயுள் - முடிவுரை.
0 Comments