ஒன்பதாம் வகுப்பு - தமிழ் - புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் - 17 , கவிதை எழுதுதல் / 9th TAMIL - REFRESHER COURSE MODULE - 17

 

ஒன்பதாம் வகுப்பு - தமிழ் 

புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் 

செயல்பாடு - 17

கவிதை எழுதுதல்

கற்றல் விளைவு:

              தாம் அறியாத சூழல்களைப் பற்றிக் கற்பனை செய்தும் நிகழ்வுகள் பற்றி மனத்தில் உருவகித்தும் அவற்றைப் பற்றிச் சிந்தித்தும் எழுத்துவழி வெளிப்படுத்துதல்,

கற்பித்தல் செயல்பாடு:

         கவிதை என்றால் என்ன? அது எப்படி இருக்கவேண்டும்? எது கவிதை?என்பவற்றைப் பற்றி இப்பகுதியில் காண்போம்.

             கவிதை எழுதுதல் ஒரு கலை. அது எண்ணங்களைச் சொற்களால் அழகுபடுத்திக் காட்சிப்படுத்துவது. கவிதை என்பது படித்தவுடன் மனத்தைத் தொடக்கூடியதாகவும், மகிழ்ச்சி, துன்பம், அச்சம், வீரம், நம்பிக்கை, ஏமாற்றம் போன்ற பல உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தக் கூடியதாகவும் இருக்கவேண்டும். கவிதை வெளிப்படுத்தும் காட்சி படிப்பவரின் மனத்தில் படிமம் போல் தோன்றும்படியாக இருக்க வேண்டும்.

           எடுத்துக்காட்டாக, ஒரு பெரிய மரம் இருக்கிறது என வைத்துக் கொள்வோம். அதைச் சற்றுத் தொலைவில் நின்று ஒரு சிறிய கண்ணாடியால் பார்க்கலாம் தானே!கண்ணாடி தெளிவாக இருந்தால் மரத்தில் உள்ள பூ, இலை, காய், கனி, பிஞ்சு, கிளை, அதில் அமர்ந்துள்ள பறவைகள், பூக்களைச் சுற்றிவரும் வண்டுகள், மரத்திற்குப் பின்னால் தெரியும் வானம் என அனைத்தையுமே நம்மால் பார்க்கமுடியும் அல்லவா?

         கண்ணாடி சிறியதுதான்; ஆனால், அது பெரிய மரத்தைத் தன்னுள் அடக்கிக் காட்டுகிறது அல்லவா? அதுபோலக் கவிதையும் சிறியதாக இருந்தாலும் சொல்லக்கூடிய பொருளைத் தெளிவாக உணர்த்தும்படி இருக்கும். கவிதையில் எதுகை, மோனை, இயைபு போன்ற நயங்கள் இருப்பது கவிதையை இனிமையாகவும் சிறப்பாகவும் ஆக்கும்.

        கவிதை, மரபுக்கவிதை, புதுக்கவிதை என்று வகைப்படுத்தப்பட்டாலும் சொல்லக் கூடிய பொருளை எளிதாகப் புதுக்கவிதையில் சொல்லலாம்.

எடுத்துக்காட்டாகச் சிலகவிதைகளைப் பார்ப்போமா?

பூமி

சூரியனைச் சுற்றிவரும் பூமி

நம்மை வாழவைக்கும் சாமி!

(அரவணைப்பும், பாசமும், ஈகையும், சோர்வும்)

உழைப்பு

நெற்றியின் வியர்வை
நிலத்தில் பட்டால்
வெற்றியின் கனியே
உனக்குக் கிடைத்திடும்!

மழை

தாகம் கொண்ட
மேகக்கூட்டம்
மண்ணில் ஊர்வலம்!

மழலை

பிஞ்சு விரலால்
நெஞ்சம் தொட்டு
பஞ்சு இதழால்
கொஞ்சிடும் மழலை!

கண்ணே விழித்திடு

கதிரவன் வரும் முன்னே
கண் விழித்திடு கண்ணே
நன்மை பல வந்திடும்
நலமாய் உனக்குப் பின்னே!

          நீங்களும் சிறுசிறு சொற்களைச் சேர்த்து கவிதையாக எழுத முயற்சி செய்யுங்கள்.
உங்கள் மொழிவளமும்பெருகும். பாரதியார், பாரதிதாசன்,கண்ணதாசன்போன்றவர்களை
போல நீங்களும் வருங்காலத்தில் ஒரு சிறந்த கவிஞராகவும் வாய்ப்பு உள்ளது.

                   உங்களது எண்ணங்களை, நீங்கள் பார்க்கும் நிகழ்வுகளைக் கவிதையாக எழுதிப்
பழகுங்கள் மாணவர்களே!

****************   ***************    ***********

                   மதிப்பீட்டுச் செயல்பாடு

1. பொருத்தமான சொற்களைத் தேர்ந்தெடுத்துக் கவிதையை நிறைவுசெய்க.

அன்பும் அரவணைப்பும்
ஆணிவேராய் இவளிடம்!
பண்பும் பாசமும்
பசையாய் இவளிடம்!
இன்பமும் ஈகையும்
இதமாய் இவளிடம்!
தன்னலமும் சோர்வும் 
தங்காது இவளிடம்!
அன்னையெனும் வடிவில்
இறையே இவளிடம்!

(அரவணைப்பும், பாசமும், ஈகையும், சோர்வும்)


2. கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகள் ஒவ்வொன்றிலும் இரண்டு முதல் நான்கு
வரிகளுக்குள் கவிதை எழுதுக.

உழைப்பு

குனிந்து நிமிர்ந்து
தினமும் உழைத்தேன்.
நிமிர்ந்து நிற்கிறது
என் வாழ்க்கை.

பூமி

உயிரினங்களை
உள்ளங்கையில் தாங்கும்
உருண்டை வடிவ சாமி.

மழை

விண்ணிலிருந்து
மண்ணைத் தொட்டதால்
கண்ணைத் திறந்தன
விதைகள் செடியாக !

மழலை 

கருவாய்  உருவாகி 
பத்துமாதத்தில்
குழந்தையாய் உருமாறி
குடும்பத்திற்கு
குதூகலம் தரும் தேவதை.

கவிதை - மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , மதுரை.


3. படத்தைப் பார்த்துக் கவிதை எழுதுக.

மாணவர்கள் தங்கள் மனதில் தோன்றும் கருத்துக்களைக் காட்சிக்கேற்ப கவிதையாக எழுதலாமே.

*************    ***********   *****************


Post a Comment

1 Comments