பத்தாம் வகுப்பு - தமிழ் - புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் - செயல்பாடு 16 , உரைநடையைக் கடிதமாகவும் , கருத்தைக் கவிதையாகவும் மாற்றுதல் / 10th TAMIL - REFRESHER COURSE MODULE - 16

 

பத்தாம் வகுப்பு - தமிழ் 

புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்

செயல்பாடு  - 16

உரைநடையைக் கடிதமாகவும்

கருத்தைக் கவிதையாகவும் மாற்றுதல்

கற்றல் விளைவு:

                  படித்த பகுதிகளின் பொருண்மையைப் புரிந்து உரையாடலில், எழுத்தில் வெளிப்படுத்துதல்.

எளிய தலைப்புகளில் எழுதும் திறன்பெறுதல்.

மற்றவர்கள் ஒரு குறிப்பிட்ட சூழலில் கூறிய சொற்களைப் பிறிதொரு சூழலில் தனது வழியில் பயன்படுத்துதல்.

கற்பித்தல் செயல்பாடு :

அறிமுகம்:

     கடிதமாக, அட்டவணையாக, செய்தியாக, அறிவிப்பாக என ஒரு குறிப்பிட்ட வடிவத்தில் கொடுக்கப்பட்ட செய்தியை உரையாடலாக, பேச்சுரையாக, தகவலாக, விளம்பரமாக என்பன போன்ற பிற வடிவங்களில் மாற்றி எழுதுவது படைப்பாற்றலையும் கற்பனை வளத்தினையும் மேம்படுத்தும்.

விளக்கம் :

   கொடுக்கப்பட்ட குறிப்பிட்ட ஒரு செய்தியைப் பிறவடிவங்களில் மாற்றுவதற்கான உத்திகளை/ வழிமுறைகளை அறிந்து கொள்வோம்.

* அறிவிப்பைச் செய்தியாக்கல்

* செய்தியைக் கடிதமாக்கல்

* தகவலை உரையாடலாக்கல்

* கருத்தைக் கவிதையாக்கல்

* நிகழ்வைக் கதையாக்கல்

* செய்தியை விளம்பரமாக மாற்றுதல்

            என்பன போன்ற வடிவமாற்றங்களையும் அவற்றிற்கான உத்திகளையும் விளக்கி, வினாக்களை எழுப்பி,விடைகளைப் பெற்று, எழுதவும் படைக்கவும் திறன் பெறுவோம்.


(எ.கா.)
கருத்தைக் கவிதையாக மாற்றுதல்

கருத்து

         படர வழியின்றித் தரையில் தவித்த முல்லைக்கொடிக்கு தன் தேரையே பாரி
கொடுத்தான். இதனைச் சங்க இலக்கியத்தில் கபிலர் பாடியுள்ளார். இந்த இலக்கியக் கருத்தைப் படித்துச்
சுவைத்த தற்காலப் புலவர் தனது புதுக்கவிதையில் காட்சிப்படுத்துகிறார்.

புதுக்கவிதை

பாரி
முல்லைக் கொடிக்குத்
தேரை நிறுத்திவிட்டு வந்தான்
கொடி
பாரி பாரி என்று
பூத்துக் கொண்டிருக்கிறது!
கவிதைகளில் முல்லைப்பூ மணம்!

                         - ஈரோடு தமிழன்பன்

மதிப்பீட்டுச் செயல்பாடுகள்

பத்தியைக் கடிதமாக மாற்றி எழுதுக.

(குறிப்பு - கொடுக்கப்பட்ட பத்தியின் கருத்துகளை அடிப்படையாகக்கொண்டு,
பெருந்தொற்று காலத்தில் தமிழர் மருத்துவத்தின் மகத்துவத்தினை உணர்த்தும்படியாக உங்கள் நண்பனுக்குக் கடிதம் எழுதுக.)

தமிழர் மருத்துவம்

         தொடக்ககாலத்தில் மனிதன் நோயைத் தீர்க்கத்தாவரங்களின் வேர்,பட்டை,இலை,
பூ, கனி ஆகியவற்றை மருந்தாகப் பயன்படுத்தியிருப்பான். பழந்தமிழ் இலக்கியங்களில் மூலிகை மருத்துவம், அறுவை மருத்துவம், மருந்தில்லா மருத்துவம் மற்றும் யோகம் முதலிய கலைகளையும் தமிழர் அறிந்திருந்தனர் என்பதற்குச் சான்றுகள் காணப்படுகின்றன. தமிழர் மருத்துவம் நாட்டுவைத்தியமாகவும், உணவுசார்ந்த 57 மருத்துவமாகவும், பண்பாடுசார்ந்த மருத்துவமாகவும் விரிந்திருக்கிறது. சர்க்கரை, இரத்தக் கொதிப்பு, புற்று, மாரடைப்பு போன்ற வாழ்வியல் நோய்கள் பெருகிய நிலையில்
இவற்றைத் தீர்க்க வெறும் இரசாயன மருந்துகள் போதா. கூடவே உணவு, வாழ்வியல், உடற்பயிற்சி, யோகம் இவையும் கூட்டாக மேற்கொள்ளப்பட வேண்டும். ஒரு மருந்தை  எடுத்துக்கொண்டால் அதற்கு விளைவும், பக்கவிளைவும் இருக்கும். ஆனால், தமிழர் மருத்துவத்தில் பக்கவிளைவுகள் இல்லை.

           உணவு எப்படிப் பக்கவிளைவுகளைத்
தருவதில்லையோ அதனைப்போலச் சித்தமருந்துகளும் பக்கவிளைவுகளை
ஏற்படுத்துவதில்லை.

            தமிழர் மருத்துவம், தனித்துவமான தன்மைகொண்டது, சூழலுக்கு இசைந்த
மருத்துவ முறையைக் கொண்டது. இந்த மருத்துவத்தின் பயன்பாடோ, மூலக்கூறுகளோ, மருந்துகளோ சுற்றுச்சூழலைச் சிதைக்காது. மிகமுக்கியமான சிறப்பு என்னவென்றால்,
நோய்க்கான சிகிச்சையை மட்டும் சொல்லாமல், நோய் மீண்டும் வராமலிருப்பதற்கான வழிமுறைகளையும் சொல்கிறது. அதாவது 'நோய்நாடி நோய் முதல்நாடி' என்ற திருக்குறளின்படி நோயை மட்டுமன்றி அதன் காரணிகளையும் கண்டறிந்து ஒருவரை நோயில்லா மனிதராக்குகிறது.

************   ****************    ***********

         மாணவர்களின் படைப்பாக்கத் திறன்  வெளிப்படுமாறு , மாணவர்கள் தம் மனதில் தோன்றிய செய்திகளைக் கடிதமாக எழுத முயற்சி செய்யவும்.வாழ்த்துகள்.


Post a Comment

0 Comments