பத்தாம் வகுப்பு - தமிழ் - புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் - செயல்பாடு 15 , செய்யுள் நயம் பாராட்டல் / 10th TAMIL - REFRESHER COURSE MODULE - ACTIVITY 15

 

பத்தாம் வகுப்பு - தமிழ் 

புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்

செயல்பாடு -  15

செய்யுள் நயம் பாராட்டல்

கற்றல் விளைவு :

        பல்வேறு வகை படித்தல் பொருள்களில் காணப்படும் சொற்கள், தொடர்கள், மரபுத்தொடர்கள் ஆகியவற்றைப் புரிந்து கொண்டு நயம் பாராட்டுதல்,

                  படிக்கும்போது எழுத்தாளனின் சொற்சித்திரத் திறனை நயம்படப் பாராட்டித் தனது கல்வி நிலைக்கு ஏற்ப அதை வெளிப்படுத்துதல். (பேச்சு/ எழுத்து/ சைகைமொழி வழியில்)

கற்பித்தல் செயல்பாடு :

அறிமுகம்:

      நயம் என்ற சொல்லுக்கு அழகு என்பது பொருள். நயம் பாராட்டுதல் என்பது செய்யுளில், பாடலில் அமைந்துள்ள நயங்களை எடுத்துக்காட்டுதல் ஆகும்.

செய்யுள் நயம் பாராட்டல்

                        செய்யுளின்திரண்டகருத்து, மையக்கருத்து,சந்தம்,கற்பனை,தொடைநயங்களான மோனை, எதுகை, இயைபு, முரண் மற்றும் அணி நயங்கள் பற்றி விரிவாக அழகுபட விளக்குவது செய்யுள் நயம் பாராட்டல் எனப்படுகிறது.

விளக்கம்:

         பாரதிதாசனின் குடும்பவிளக்கு என்னும் நூலிலிருந்து ஒரு பாடலின் பகுதியை நயம் பாராட்டுவோம்.

"கல்வி இல்லாத பெண்கள்

களர்நிலம் அந்நிலத்தில்

புல்விளைந் திடலாம் நல்ல

புதல்வர்கள் விளைதல் இல்லை

கல்வியை உடைய பெண்கள்

திருந்தியகழனி அங்கே

நல்லறிவு உடைய மக்கள்

விளைவது நவில வோநான் "

                                       - பாரதிதாசன்.

   கொடுக்கப்பட்டுள்ள பாடலை நன்கு படித்து, அதன் கருத்தைப் புரிந்துகொண்டு
எளிய உரைநடையில் எழுதுவதே திரண்ட கருத்து எனப்படும்.

திரண்ட கருத்து

          கல்வியறிவு இல்லாதபெண்கள் பண்படாதநிலத்தைப் போன்றவர்கள்; அந்நிலத்தில் புல் போன்றவை விளையலாம்; நல்ல பயிர் விளையாது. அதுபோலக் கல்வியறிவு இல்லாத பெண்கள் வாயிலாக அறிவுடைய மக்கள் உருவாக மாட்டார்கள். கல்வியைக் கற்ற பெண்கள், பண்பட்ட நன்செய் நிலத்தினைப் போன்றவர்கள். அவர்கள்மூலம் சிறந்த அறிவுடைய மக்கள் உருவாகின்றனர் என்பதை நான் சொல்லவும் வேண்டுமோ?

மையக்கருத்து

      பாடல், எந்த நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டதோ அதுவே
அப்பாடலின் மையக்கருத்து ஆகும்.

           இப்பாடல், பெண்கல்வியை மையநோக்கமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. கல்வியறிவு இல்லாத பெண்கள் பண்படாத நிலம் போன்றவர்கள்; கல்வியறிவு பெற்ற பெண்கள், பண்பட்ட நிலத்தினைப் போன்றவர்கள்; எனவே, பெண்கல்வி இன்றியமையாதது- என்பதே இப்பாடலின் மையக்கருத்து ஆகும்.

தொடை நயம்

"தொடையற்ற பாட்டு நடை அற்றுப்போகும்".
யாப்பிலக்கணக் கூறுகளுள் ஒன்று தொடை. தொடை என்பதற்குத் தொடுத்தல்
என்பது பொருள். பாடலின் அடிகளிலோ சீர்களிலோ எழுத்துகள் ஒன்றிவரத் தொடுப்பது,தொடை ஆகும். ஒன்றிவருதல் என்பது எழுத்துகள் ஓசைநயம் தோன்ற ஒத்து அமைந்து  வருவது ஆகும்.

(எ.கா.)

சூரியன் வருவது யாராலே
சந்திரன் திரிவது எவராலே
காரிருள் வானில் மின்மினிபோல்
கண்ணில் படுவன அவை என்ன?

மோனை

          செய்யுளின் அடிகளிலோ சீர்களிலோ முதலெழுத்து ஒன்றிவரத் தொடுப்பது
மோனைத்தொடை எனப்படும்.

"குயவனின்கைவண்ணம் பானையிலே
கவிஞனின்கைவண்ணம் மோனையிலே"


     ஓர் எழுத்துக்கு மோனையாக அதன் இன எழுத்துகளும் வரலாம். (எ.கா.) அஆ,
உஊ.

      மோனை, அடி மோனை, சீர்மோனை என இருவகைப்படும்.

(எ.கா.) கல்வி
களர்

எதுகை

            செய்யுளின் அடிகளிலோ சீர்களிலோ இரண்டாம் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது
எதுகைத்தொடை எனப்படும்.

"பாடலுக்கு எது கை கொடுக்காவிட்டாலும்
எதுகை கைகொடுக்கும்"

                 செய்யுள் அடிகளிலும் சீர்களிலும் இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது எதுகை
ஆகும்.

(எ.கா.) கல்வி
புல் விளைந்து

இயைபு

"செய்யுளிலே இயைபு, படிப்போருக்கு வியப்பு"

செய்யுளின் அடி, சீர்களில் இறுதி எழுத்தோ, அசையோ, சீரோ ஒன்றிவருவது
இயைபு.

(எ.கா.)

"கல்வி இல்லாத பெண்கள்
கல்வியை உடைய பெண்கள்"

முரண்

          செய்யுளின் அடிகளிலோ சீர்களிலோ எதிர்ச்சொற்கள் அமைய வருவது முரண்
எனப்படும். (முரண் எனில் மாறுபாடு)

(எ.கா.) களர்நிலம் - பண்படாத நிலம்
திருந்திய கழனி - பண்பட்ட நிலம்.
பண்படாத நிலம் பண்பட்ட நிலம்

சந்தம்

"சந்தம் தமிழுக்குச் சொந்தம்"
சந்தநயம், செய்யுளை ஓசையுடன் படிப்பதற்கும், பாடுவதற்கும் உதவுவது.

அணி

"கழுத்துக்கு மணி, செய்யுளுக்கு அணி"

                ஒரு செய்யுளைச் சொல்லாலும் பொருளாலும் அழகுபடக் கூறுவது அணி.

(எ.கா.) களர் நிலம் - பண்படாத நிலம்.

   இப்பாடல், கல்வியறிவு இல்லாத பெண்கள் களர்நிலத்தைப் போன்றவர்கள்
உருவகம் அமையப் பாடப்பட்டுள்ளது. இதனை உருவக அணி என்பர். இவ்
ஏதேனும் ஓர் அணி அமையப் பாடுவது செய்யுளுக்குச் சிறப்பைத் தரும்.

கற்பனை

"கற்பனை இல்லாப் பாடல் விற்பனை இல்லை".

         கற்பனை என்பது கவிஞர் தம் மனதில் தோன்றுவதை அழகுபட எழுது
பெரும்பாலான பாடல்கள், பாடுபொருளுக்கு
ஏற்பக் கற்பனை நயத்துடன் 
அமைந்திருக்கும்.

             இவ்வாறு செய்யுள் நயம் பாராட்டல் அமையும். இச்செயல்பாட்டில் பாடலில்
இடம்பெறும் திரண்ட கருத்து, மையக்கருத்து, மோனை, எதுகை, இயைபு, முரண், சந்தம் , 
அணி, கற்பனை ஆகியவை குறித்து விளக்கமாக எழுதவேண்டும்.

*************    *************    *************


          மதிப்பீட்டுச் செயல்பாடுகள்

1. திருமந்திரப் பாடலைப் படித்துச் செய்யுள் நயம் பாராட்டுக.

"படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயில்
நடமாடக் கோயில் நம்பர்க்கு அங்கு ஆகா
நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்
படமாடக் கோயில் பகவற்கு அது ஆமே".

                                                   -   திருமூலர்
திரண்ட கருத்து 

              கோயிலில் வீற்றிருக்கும் இறைவனுக்கு ஒரு பொருளைத் தந்தால் அது நடமாடும் கோயிலாக விளங்கும் உலக உயிர்களைப் போய்ச் சேராது. ஆனால் ,நடமாடும் கோயிலாக விளங்கும் உலக உயிர்களுக்கு ஒரு பொருளைத் தந்தால் அது கோயிலில் வீற்றிருக்கும் இறைவனைப் போய்ச்சேரும்.

மையக்கருத்து 

        கோயிலில் மட்டுமல்லாமல் எல்லா உயிர்களிலும் இறைவன் இருக்கிறான். மனித உயிர்களுக்குச் செய்யும் சேவை  இறைவனுக்குச் செய்யும் சேவையாகும்.

தொடை நயம் 

" தொடையற்ற பாட்டு நடையற்றுப் போகும்."

       தொடை என்பதற்குத் தொடுத்தல் என்பது பொருள். பாடலின் அடிகளிலோ , சீர்களிலோ எழுத்துகள் ஒன்றிவரத் தொடுப்பது தொடை ஆகும்.

மோனை 

   " குயவனின் கைவண்ணம் பானையிலே 
கவிஞனின் கைவண்ணம் மோனையிலே " 

            பாடலில் அடிதோறும் , சீர்தோறும் முதல் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது மோனை ஆகும்.

படமாடக் கோயில் பகவற்கு 
நடமாடக் கோயில் நம்பர்க்கு 
நடமாடக் கோயில் நம்பர்க்கு 
படமாடக் கோயில் பகவற்கு 

          முதல் சீரின் முதல் எழுத்தும் மூன்றாம் சீரின் முதலெழுத்தும் ஒன்றிப் ' பொழிப்பு மோனை ' பெற்று வந்துள்ளது.

நடமாட 
நடமாட 

முதற்சீரின் முதல் எழுத்து ஒன்றி ' அடிமோனை ' பெற்று வந்துள்ளது.

எதுகை 

" பாடலுக்கு எது கைகொடுக்கா விட்டாலும் எதுகை கைகொடுக்கும் "

      பாடலில் அடிதோறும் சீர்தோறும் இரண்டாம் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது எதுகை ஆகும்.

படமாட
நடமாட
நடமாட
படமாட 

       இப்பாடலில் அடிதோறும் இரண்டாம் எழுத்து ஒன்றி , ' அடி எதுகை ' பெற்று வந்துள்ளது.

இயைபு 

" செய்யுளிலே இயைபு படிப்போர்க்கு வியப்பு " 

         செய்யுளின் அடி , சீர்களில் இறுதி எழுத்தோ , அசையோ , சீரோ ஒன்றி வருவது இயைபு எனப்படும்.

இப்பாடலில் ஈயில் , ஈயில் என அமைந்து இயைபு நயம் பயின்று வந்துள்ளது.

அணி 

" கழுத்துக்கு மணி செய்யுளுக்கு அணி " 

         சொல்லாலும் பொருளாலும் அழகுபட அமைப்பது அணியாகும். இப்பாடலில் உள்ளதை உள்ளபடிக் கூறும் இயல்பு நவிற்சி அணி பயின்று வந்துள்ளது.

       மேற்கண்ட நயங்கள் பாடலைப் படிப்போர்க்கு மகிழ்வும் கருத்துப் புரிதலுக்கும் துணை செய்கின்றன.

***************     **********   **************


2. "ஒருவர் ஒருவரின் ஓட முந்தினர்
உடலின் நிழலினை வெருவி அஞ்சினர்".

                                  -  கலிங்கத்துப்பரணி

இவ்வடிகளில் பயின்று வரும் நயம் எது?

       இவ்வடிகளில் இயைபு நயம் பயின்று வந்துள்ளது.

****************    **********    **************

3. "பழ மணல் மாற்றுமின்
புது மணல் பரப்புமின்".

                                              - மணிமேகலை

இவ்வடிகளில் பயின்றுவரும் நயங்களை எடுத்துக்காட்டுடன் எடுத்து எழுதுக.


பழ  - புது     - மோனை நயம் 

மாற்றுமின்  - பரப்புமின்   --- இயைபு நயம்

*************    **************    ************

நன்றி - 

விடைத்தயாரிப்பு : 

திரு.மணி மீனாட்சி சுந்தரம் , 

தமிழாசிரியர் , அ.மே.நி.பள்ளி , 

சருகுவலையபட்டி , மேலூர் , மதுரை.

************     **************   ************

Post a Comment

0 Comments