ஒன்பதாம் வகுப்பு - தமிழ் - புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் - 13 , இலக்கணப் பயன்பாடு - அணி , வினா & விடை / 9th TAMIL - PUTHTHAAKKAP PAYIRCHIK KATTAKAM - 14 - ANI - QUESTION & ANSWER

 

ஒன்பதாம் வகுப்பு - தமிழ்

புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்

செயல்பாடு - 13

இலக்கணப் பயன்பாடு-அணி

கற்றல் விளைவு:

         மொழி பற்றிய நுட்பங்களை அறிந்து அவற்றைத் தம்மொழியில் எழுதும்போது பயன்படுத்துதல்.

         பாடல், கட்டுரை, கதை எழுதும்போது பல்வேறு புலப்பாட்டு உத்திகளையும் முறைகளையும் இனம்கண்டு அவற்றைப் பயன்படுத்துதல்.

கற்பித்தல் செயல்பாடு:

அறிமுகம்:

          இலக்கணம் ஐந்து வகைப்படும். அவை எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்பவையாகும். இவற்றுள் அணி இலக்கணம் பற்றிக் காண்போம். அணி என்ற சொல்லுக்கு அழகு என்பது பொருள். ஒரு செய்யுளைச் சொல்லாலும் பொருளாலும் அழகுபெறச் செய்தலை அணி என்பர்.

         அணிகலன் அழகுபடுத்திக் கொள்ளப் பயன்படுவதுபோல செய்யுளை அணி அழகுபடுத்துகிறது. அணி என்பது, வடமொழியில் அலங்காரம் என்று கூறப்படுகிறது. அணியிலக்கணம் பற்றிக் கூறும் தொன்மையான நூல் தண்டியலங்காரம் ஆகும். இந்நூலில் தன்மை அணி தொடங்கி பாவிக அணிவரை 35 வகையான அணிகள் சொல்லப்பட்டுள்ளன.

  அணிகளில் முதன்மையானது உவமையணி ஆகும். மற்ற அணிகள் உவமையில் இருந்து தோன்றியதாகவும் கூறுவர். அணிகளுக்கெல்லாம் தாயாக விளங்குவது

உவமையணி ஆகும்.

எ.கா. : மலர் போன்ற முகம் என்னும் தொடரில் முகத்துக்கு மலர் உவமையாகக் கூறப்படுகிறது.

இதில்,

மலர் - உவமை (உவமானம்)

போன்ற - உவம உருபு

முகம் - பொருள் (உவமேயம்)


                        இத்தொடரில் உவமஉருபு வெளிப்படையாக உள்ளதைக் காணலாம். இவ்வாறு உவமஉருபு வெளிப்படையாக வருவதை உவமை என்று கூறுவர். மறைந்து வருவதை உவமைத்தொகை என்று கூறுவர். தொடர்களில் உவமஉருபு மறைந்து வந்தால் அதனை எடுத்துக்காட்டு உவமை அணி என்று சிறப்பிப்பர்.

                செய்யுளில்/பாடலில் சொல்லவரும் கருத்தை/பொருளை நன்கு விளக்க. தெரிந்த
பொருளைத் துணையாகக் கொள்வதும் அதனை ஒப்புமைப்படுத்தி விளக்குவதும்
உவமையுள் அடங்கும்.

           ஒரு பொருளை மற்றொரு பொருளுடன் ஒப்பிட்டு அழகுபடுத்திக் கூறுவதால்
பொருளின்பம் தோன்றுவதாக அமையும்.

எ.கா.. "இருட்டைப் பிழிந்து வைத்திருந்தது போல் படுத்திருந்தது ஆட்டுக்குட்டி"

             இவ்வெடுத்துக்காட்டில் கறுப்புநிற ஆட்டுக்குட்டியின் அடர்கருமை, இருளுடன்
ஒப்புமைப்படுத்தி விளக்கப்பட்டுள்ளது.

        உவமையணியில் உவமானம், உவமேயம், உவம உருபுகள் ஆகிய மூன்றும்
வெளிப்படையாக வரும்.

உவம உருபுகள் :

      போல, புரைய, ஒப்ப, உறழ, மான, கடுப்ப, இயைய, ஏய்ப்ப, நேர, நிகர, அன்ன, இன்ன,
அற்று போன்றவை உவம உருபுகள் ஆகும்.

எ.கா. : இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்க முடையார்வாய்ச் சொல்.

பொருள்: சேற்று நிலத்தில் நடக்கும்போது கீழே விழாதபடி உதவுவது ஊன்றுகோல்.
அதுபோல, வாழ்க்கையில் ஏற்படும் தடுமாற்றத்தை ஒழுக்கம் உடையவர்களின் அறிவுரை நீக்கிப் பாதுகாக்கும்.

உவமை : சேற்று(வழுக்கல்) நிலத்தில் நடக்க உதவும் ஊன்றுகோல்

உவமேயம் : ஒழுக்கம் உடையவர்களின் அறிவுரை

உவம உருபு:அற்றே (அது போன்றது)

        உவமை ஒரு தொடராகவும், உவமேயம் மற்றொரு தொடராகவும் வந்து உவம
உருபு வெளிப்படையாக வந்தால் அதனை உவமையணி என்பர்.

எடுத்துக்காட்டு உவமையணி

              உவமையும் உவமேயமும் தனித்தனித் தொடர்களாக வரும். உவம் உருபு
வெளிப்படையாக வராமல் மறைந்து வரும்.

எ.கா.: அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

பொருள் :

                     எழுத்துகள் எல்லாம் அகரத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்குகின்றன.
(அதுபோல) இவ்வுலகம் ஆதிபகவனாகிய கடவுளை முதன்மையாகக் கொண்டு
இயங்குகிறது. இக்குறளில் அதுபோல என்னும் பொருளைத் தரும் சொல்
இடம்பெறவில்லை. இக்குறளில் பொருள் வெளிப்படையாகத் தெரிகிறது. ஆயினும்
போல என்னும் உவம உருபு மறைந்து வருகிறது.

இவ்வாறு வருவதே எடுத்துக்காட்டு உவமை அணி ஆகும்.

இக்குறளில்,

உவமை: எழுத்துகள் எல்லாம் அகரத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன.

உவமேயம்:உலகம் ஆதிபகவானை (கடவுளை) அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன.

உவம உருபு : அது போல என்பது மறைந்து வந்துள்ளது.

இல்பொருள் உவமையணி

   இல்லாத ஒன்றை இருப்பதுபோல கற்பனை செய்து அதனை உவமையாக்கிக்
காட்டுவது இல்பொருள் உவமையணி எனப்படும்.

எ.கா.:அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று.

பொருள்:  உள்ளத்தில் அன்பு இல்லாதவர்கள் வாழ்ந்து கொண்டிருப்பர். அவர்தம் வாழ்வு
வறண்ட பாலை நிலத்தில்பட்டுப்போன மரம் இலைவிட்டுத் தளிர்த்ததைப் போன்றதாகும்.

விளக்கம்: பாலைவனத்தில் பட்டுப்போன மரம் தளிர்ப்பது என்பது எங்கும் எப்போதும்
நடக்காத செயலாகும். அப்படி இல்லாத ஒன்றை உவமையாகக் கூறுவது இக்குறள்
இல்பொருள் உவமை அணி ஆகும்.

மதிப்பீட்டுச் செயல்பாடு

தனிநபர் செயல்பாடு:

              பாடப்பகுதியில் உள்ள திருக்குறளில் பயின்றுவரும் அணிகளைக் கண்டறிந்து
அணிவிளக்கம் எழுதக் கூறுதல்.

குழுச் செயல்பாடு:

                மாணவர்களை மூன்று குழுக்களாகப் பிரித்து ஒவ்வொரு குழுவிற்கும் அணியின்
தலைப்பைக் கொடுத்து அதற்குரிய எடுத்துக்காட்டு எழுதி, விளக்கம் தரக்கூறுதல்.

******************   **********    **************

வினாக்களுக்கு விடையளிக்க.

1. அணி என்ற சொல்லின் பொருள் என்ன?

           அணி என்ற சொல்லுக்கு அழகு என்பது பொருள்.

2. அணி இலக்கணம் பற்றிக் கூறும் தொன்மையான நூல் எது?

      அணி இலக்கணம் பற்றிக் கூறும் தொன்மையான நூல் தண்டியலங்காரம்.

3. உவம உருபுகளைத் தொடரில் அமைத்து எழுதுக.

ஒப்ப,அன்ன,புரைய, போல.

* தாய் ஒப்ப அழகாகப் பேசுகிறாள் மகள்

* சிறு குழந்தையின் பாதம் மலரன்ன சேவடியாக உள்ளது.

* விளையாட்டில் கலந்துகொண்ட வீரனுக்கு வேய்புரைத் தோள்கள் உள்ளன.

*  பெண்களுக்கு மீனைப் போல கண்கள் உள்ளன.


4. வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று

 -இக்குறளில் பயின்று வரும் அணியாது?

     இக்குறளில் பயின்று வரும் அணி . இல்பொருள் உவமையணி ஆகும்.

5. வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்

        -இக்குறளில் பயின்று வரும் அணியை விளக்குக.

இக்குறளில் உவமை அணி பயின்று வந்துள்ளது.

உவமையணி :

        உவமையணியில் உவமை , உவமேயம் , உவம உருபு ஆகிய மூன்றும் வெளிப்படையாக வரும்.

குறளின் பொருள் : பழிவருமுன்னே சிந்துத்துத் தம்மைக் காத்துக் கொள்ளாதவருடைய வாழ்க்கை நெருப்பின் அருகில் வைக்கப்பட்ட வைக்கோல் போர் போல அழிந்துவிடும்.

உவமை : வருமுன்னர் காவாதான் வாழ்க்கை

உவமேயம் : எரிமுன்னர் வைத்தூறு போலக்கெடும்.

உவம உருபு : போல 

***************   ************    *************


Post a Comment

0 Comments