பத்தாம் வகுப்பு - தமிழ்
புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்
செயல்பாடு - 13
படித்துப் பொருளுணர்தல்
கற்றல் விளைவு:
படித்த பகுதியின் பொருளுணர்ந்து பதிலளித்தல்.
படிக்கும் பகுதியை நுட்பமாக ஆய்ந்து சிறப்புக்கூறுகளைக் கண்டறியும் திறன் பெறுதல்.
ஒரு கட்டுரையைப் படித்த பின்னர் அதன் சமூக மதிப்புகள் குறித்து விவாதித்தல், சில வினாக்களுக்கு விடைகாண முற்படல் .
கற்பித்தல் செயல்பாடு :
அறிமுகம்:
கருத்துகளைத் தெரிந்துகொள்ள நூல், செய்தித்தாள், இதழ்களை நாம் நாள்தோறும் படிக்கின்றோம். படித்த பகுதியின் கருத்தின்/ செய்தியின் பொருளுணர்ந்து கொள்ளும் முறையை அறிவோம்.
விளக்கம் :
படித்தவற்றைப் பற்றிச் சிந்திக்கவும் வினாக்களை எழுப்பவும் விடைகளைப் பெறவும் அவை குறித்த கலந்துரையாடல்களை மேற்கொள்ளவும் பயிற்சி பெறுவோம்.
பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்கும் முறையைத் தெரிந்து கொள்வோம்.
மனித இனத்திற்கு மொழியின் தேவை எப்போது, எவ்வாறு ஏற்பட்டிருக்கும் என நாம் சிறிது சிந்தித்துப் பார்ப்போம்!
அடர்ந்த காடுகளும் மலைக்குகைளுமே தொடக்ககாலத்தில் மனித இனத்தின் வாழ்விடங்களாக இருந்தன. நாள்தோறும் உணவைத் தேடுவதும் வாழ்வதுமே போராட்டமாக இருந்தது. நிலையான தங்கும் இடமோ குடியிருப்புகளோ இல்லை. ஆகவே மனிதர்கள் தாம் மனதில் விரும்பும் எண்ணங்களைப் பிறரிடம் வெளிப்படுத்த கையை அசைத்து,சைகைகளைச் செய்திருப்பர்.அதன்பின்தொடர்ந்து பழக்கப்பட்டவாயசைப்பின் மூலம் தொடக்ககால பேச்சுமொழி தோன்றி இருக்கலாம். அன்றைய சூழலில் அருகருகே இருப்பவர்களுடன் பேச மொழி தேவைப்பட்டிருக்காது. ஆனால் தொலைவில் இருப்பவர்களுக்குத் தகவல்களைத் தெரிவிக்கவும் தம் கருத்தை அனுப்பவும் ஓர் ஊடகம் தேவையாக இருந்திருக்கும். அத்தகு தேவையின் பொருட்டு மனிதனால் படிப்படியாக உருவாக்கப்பட்டதே எழுத்து.
வினாக்கள்
1. அடர்ந்த காடுகளும் மலைக் குகைகளும் தொடக்க காலத்தில் மனித இனத்தின்
வாழ்விடமாக இருந்ததன் காரணம் யாது?
விடை: ஏனெனில் அக்காலத்தில் நிலையான தங்குமிடமும் குடியிருப்புகளும்
இல்லை.
2. அன்றைய சூழலில் அருகருகே இருப்பவருடன் பேச மொழியின் பயன்பாடு
தேவைப்பட்டிருக்காது. - ஏன்?
விடை: ஏனெனில் அருகில் இருப்பவரிடம் பேச சைகை மொழியே போதுமானதாக
இருந்திருக்கும்.
3. எழுத்து எவ்வாறு உருவாக்கம் செய்யப்பட்டது என்பதை பத்தியின் வழியே விளக்குக.
விடை: தொலைவில் இருப்பவரோடு தொடர்புகொள்ளவும் தன் கருத்தை மற்றவர்கள் அறிந்துகொள்ளவும் எழுத்தை உருவாக்கி இருக்கலாம்.
************* *********** *************
மதிப்பீட்டுச் செயல்பாடுகள்
பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடையளிப்போம்.
மனித வாழ்வில் மரங்கள்
மரங்கள், மனித உயிர் வாழ்க்கைக்கு ஊட்டச்சத்து அளிக்கும் ஊசிகள். ஒரு
மனிதனின்தேவைக்கான நீர்,காற்று, உணவு, உடை, உறைவிடம் ஆகிய அனைத்தையும் தருவன மரங்களே. சிந்து, கங்கை, பிரம்மபுத்திரா, காவிரி போன்ற நதிப்பெண்கள் நடனமிடுவதற்கு முகிற்கலைஞனின் சுருதி, கட்டாயம் தேவைப்படுகிறது.அந்த முகிற்கலைஞனின் சுருதிக்கு முத்தாய்ப்பாக விளங்குபவை மலைகளும், மலைகளில்
வாழும் மரங்களுமே. பழங்காலத் தமிழர், மரங்களைத் 'தரு' என்று மறுபெயரிட்டு
அழைத்தனர். மரங்கள் நிழல் தருவதோடு, விலங்குகள் உண்ணுவதற்கும் விவசாயம்
மேம்படுவதற்கும் தழைகளைத் தருகின்றன. வீடு செழிக்கவும் நாடு செழிக்கவும் மரங்கள் காரணமாகின்றன. மழையையும் குளிர்காற்றையும் மக்கள் உடல்நலம் பேணும் மருந்துகளையும் விறகுகளையும் மரங்கள் தருகின்றன. காற்று, மழை, வெயில், பனி
ஆகியவற்றைச் தாங்கிக்கொண்டு நம்மைக் காப்பாற்றும் இத்தருக்கள் இலை, பூ, காய், பழம்,வேர்,மரவுரி, கிளை,வாசனையுள்ள பிசின், பொடி, தளிர் போன்றவற்றைவரையின்றி
வழங்கி மனித வாழ்வில் மகத்தான இடத்தைப் பிடிக்கின்றன. எனவே, எல்லா
உயிர்களுக்கும் உயிர் மரங்களே! என்று உறுதியாகக் கூறலாம்.
- சுற்றுச்சூழல் சிந்தனைகள் நூலிலிருந்து....
1. மரங்களால் மனிதன் பெறும் அடிப்படைத் தேவைகளைக் குறிப்பிடுக.
நீர் , காற்று , உணவு , உடை , உறைவிடம் , மருந்து முதலியவை மரங்களால் மனிதன் பெறும் அடிப்படைத் தேவைகள் ஆகும்.
2. பத்தியில் இடம்பெற்றுள்ள உருவகத்தொடர் அல்லாததைக் கண்டறிக
அ)முகிற்கலைஞன் ஆ) நதிப்பெண்
இ) உயிர்மரங்கள் ஈ) மரவுரி
விடை : ஈ ) மரவுரி
3. மரம் நமக்கு வழங்குவன யாவை?
நீர் , காற்று , உணவு , உடை , உறைவிடம் முதலியவற்றை மரம் நமக்கு வழங்குகிறது.
4. எல்லா உயிர்களுக்கும் உயிராக மரங்கள் விளங்குகின்றன- எவ்வாறு?
மரங்கள் அனைத்து உயிரினங்களுக்கும் நீர் , காற்று , உணவு , உடை , உறைவிடம் வழங்கி உயிராக விளங்குகின்றன.
5. பத்தியைப் படித்துப் பொருளுணர்ந்து உரையாடலை நீட்டித்து எழுதுக.
மலர்விழி : சுற்றுச்சூழலுக்கு மரங்கள்
பெரிதும் துணைபுரிகின்றன என்று
கூறுகிறார்களே வெண்பா! அதனைக் குறித்து நீ ஏதும் அறிவாயா?
வெண்பா : புவி வெப்பமடைதல்,
பருவநிலை மாற்றம், விளைநிலங்கள் அழிதல், நகரமாதல் போன்ற செயல்களே சுற்றுச்சூழல் அழிவிற்குக் காரணம்
என அறிவேன். ஆகவே மரங்களை
நட்டுப் பசுமை நிறைந்த நிலமாகச் சுற்றுப்புறத்தை மாற்றுவது நமது கடமையாகும்.
மலழ்விழி : புவி வெப்பமடைதல் என்றால் என்ன ? மரங்களை வளர்ப்பதற்கும் இதற்கும் என்ன தொடர்பு வெண்பா ?
வெண்பா : பூமியின் மேற்புர வெப்பநிலை ஆண்டுதோறும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.இது பூமியில் வாழும் உயிரினங்களுக்குப் பேராபத்தாக முடியும். இதைத்தடுக்கும் ஆற்றல் மரங்களுக்கே உண்டு. ஆகவே மரம் வளர்க்க வேண்டும்.
************* *************** ************
நன்றி -
விடைத்தயாரிப்பு :
திரு.மணி மீனாட்சி சுந்தரம் ,
தமிழாசிரியர் , அ.மே.நி.பள்ளி ,
சருகுவலையபட்டி , மேலூர் , மதுரை.
************ ************** ************
0 Comments