12 ஆம் வகுப்பு - தமிழ் - புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் - 9 , இலக்கிய நயம் பாராட்டுக - 2 , வினாக்களும் விடைகளும் / 12th TAMIL - REFRESHER COURSE MODULE - 9 , QUESTION & ANSWER

 

12 ஆம் வகுப்பு - தமிழ் 

புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்

செயல்பாடு - 9 

இலக்கிய நயம் பாராட்டுக - 2

கற்றல் விளைவுகள்

*  தமிழ்க்கவிதைகளில் காணப்படும் அழகியலை உணரச் செய்தல்.

* தமிழ்க்கவிதைகளில் பொருந்தியிருக்கும் திறன்களை உணர்ந்து வெளிக்கொண்டுவர செய்தல்.

* இலக்கண விதிகளை அறிந்து இலக்கியத்தைச் சுவைக்கும் திறன் பெறுதல்.

ஆர்வமூட்டல்

          முதல் எழுத்து அளவொத்து இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது எத்தொடை? என்ற நேற்று நடத்திய பாடத்திலிருந்து வினா கேட்டு அதற்கான பதிலை வரவழைத்து மாணவர்களை ஆர்வமூட்டச் செய்தல்,

கற்பித்தல் செயல்பாடுகள்

செயல்பாடு:1

சந்தநயம்

                  சந்தநயம் என்பது ஓசை, இசை, இன்னோசை ஆகியவற்றைக் குறிக்கும். ஒவ்வொரு பாவும் ஒவ்வொரு ஓசையைப் பெற்று வரும்.

• வெண்பா - செப்பலோசை

ஆசிரியப்பா - அகவலோசை

கலிப்பா - துள்ளலோசை

வஞ்சிப்பா - தூங்கலோசை

என முறையே பாவும் அவற்றின் ஓசைகளைப் பெற்று வரும்.

           சிந்துப்பா (நாட்டுப்புற சிந்து) என்ற பாவகையிலும் சில பாடல்கள் வரும். சிந்துப்பா தனிச்சொல் பெற்று வருவதால் வெண்பாவிற்கான செப்பலோசையே இப்பாவிற்கும் வரும்.

        இவற்றுள் பெரும்பாலும் ஆசிரியப்பாவும் கழி நெடிலடி ஆசிரிய விருத்தப் பாவும் சிந்து என்னும் இசைப் பாடலும் சந்தநயத்தில் பயின்று வருவனவாகும்.

செயல்பாடு:2

அணிநயம்:

அணி = அழகு

              பாடலுக்கு மென்மேலும் அழகூட்ட கையாளப்படும் நயமே அணிநயம். உவமை, உருவகம், இயல்பு நவிற்சி (தன்மையணி), உயர்வு நவிற்சி, தற்குறிப்பேற்றம், வேற்றுமை போன்ற பலவகை அணிகள் பயின்று வர கவிஞர்கள் கவிதை புனைவார்கள்.


         கவிஞன் தான் கூறக் கருதிய பொருளை மேலும் அழகூட்ட அணி நயத்தைப் பயன்படுத்துவார். கவிதையில் (செய்யுளில்) கூறப்பட்டுள்ள அணியினைச் சரியாக இனங்கண்டு பின்பு அதன் நயத்தை
வெளிப்படுத்த வேண்டும்.

செயல்பாடு: 3

சுவை நயம்

நகை  - சிரிப்பு 

அழுகை  - துன்பம்

இளிவரல் - இயலாமை 

மருட்கை  - வியப்பு 

அச்சம்  - பயம் 

பெருமிதம்  - புகழ்ச்சி 

வெகுளி   - கோபம்

உவகை  - மகிழ்ச்சி

          இவை ஒவ்வொன்றும் நான்கு பொருளில் வரும் இவற்றில் பெரும்பான்மை பெருமிதச்சுவையே பயின்றுவரும். இது இலக்கியப்பயில் நிலையைச் சார்ந்தது. படிப்போரின் மனவோட்டத்தைச் சார்ந்தது.
அதாவது உள்ளத்து உணர்ச்சிகள் உடலில் தென்படுவது.

செயல்பாடு: 4

               எடுத்துக்காட்டுப் பாடல் மூலம் மேற்கண்ட நயங்களைப் பொருத்திக் காண்போம் .

பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான்- புவி
          பேணி வளர்த்திடும் ஈசன் ;
மண்ணுக் குள்ளே சிலமூடர் - நல்ல
         மாதர் அறிவைக் கெடுத்தார்.
கண்கள் இரண்டினில் ஒன்றைக்- குத்திக்
          காட்சி கெடுத்திட லாமோ?
பெண்கள் அறிவை வளர்த்தால் - வையம்
         பேதைமை யற்றிடும் காணீர்.

                                              -  பாரதியார்
மையக்கருத்து

         இப்பாடலில் தேசியக்கவி பாரதியார் பெண்கள் கல்வி கற்றால் அறியாமை என்னும் இருள் நீங்கி, அறிவுடைமை என்னும் வெளிச்சம் பெறும் எனப் பெண்கல்வியின் அவசியத்தை மையக்கருத்தாகப்
பாடியிருப்பது பாராட்டுக்குரியது.

திரண்ட கருத்து

              உலகில் அனைத்தையும் படைத்த இறைவன் பெண்களுக்கு நல்ல அறிவையும் தந்துள்ளான். ஆனால் உலகில் உள்ள சில மூடர்கள் அவர்களின் அறிவு பயன்படாது எனக் கருதி அழித்தனர்.ஆண்களும் பெண்களும் சமுதாயத்தில் இரு கண்கள் போன்றவர்கள். எனவே அத்தகைய கண்களில் ஒன்றைக் குத்தி காணும் காட்சியைக் கெடுத்து விடலாமா? பெண்கள் அறிவை வளர்த்தால் உலகம் அறியாமை (பேதைமை) நீங்கி அறிவு வெளிச்சம் பெறும் எனப் பாடி இருப்பது சிறப்புக்குரியது.

தொடை நயம்:

மோனைத் தொடை :

பெண்ணுக்கு - பேணி, 
மண்ணுக்குள்ளே - மாதர்

எதுகைத்தொடை :

பெண்ணுக்கு - மண்ணுக்கு,
கண்கள் - பெண்கள்
.
எதுகைத்தொடை :

கொடுத்தார் - காணீர்

முரண்தொடை :

ஞானம் x பேதைமை
வளர்த்திடும் x கெடுத்திடும்

சந்தநயம் :

          சிந்துப்பா வகையில் அமைத்து "செப்பலோசை"அமைய பாடி இருப்பது பாராட்டுக்குரியது.

அணிநயம்:

     பெண் கல்வியின் தேவையை உள்ளதை உள்ளவாறு பாடியிருப்பதால் தன்மை அணி ( இயல்பு நவிற்சி அணி)பயின்று வந்துள்ளது சிறப்பிற்குரியது.

சுவை நயம்:

            பெண் கல்வியால் இவ்வுலகம் அறிவு கொள்ளும் எனப் பெருமைப்படப் பாடியிருப்பதால் "பெருமிதச் சுவை " பயின்று வந்துள்ளது பாராட்டிற்குரியது .

மேற்கண்ட நயங்களில் எவையேனும் 4 எழுதினால் போதுமானது.

மாணவர் செயல்பாடு

* மெய்ப்பாடுகளின் வகைகளைக் கூறி, மாணவர்களை வகுப்பில் நடிக்கச் செய்தல்.

* ஒவ்வொரு பா விற்கும் என்னென்ன ஓசை வரும் எனக் கூறச் சொல்லல்.

*  பாடலில் அணிநயம் ஏன் பயன்படுத்துகின்றனர் என்பதைக் கூறச் செய்தல்.

**************    ****************    **********

                          மதிப்பீடு

1. மெய்ப்பாடு எத்தனை வகைப்படும்? எவ்வாறு தோன்றும்?

   * மெய்ப்பாடு எட்டு வகைப்படும்.

   * நகை , அழுகை , இளிவரல் , மருட்கை , அச்சம் , பெருமிதம் , வெகுளி , உவகை  ஆகியன.

     *  இவை ஒவ்வொன்றும் நான்கு பொருளில் வரும்.

    *  இவற்றில் பெரும்பான்மை பெருமிதச் சுவையே பயின்று வரும்.

    * படிப்போரின் மன ஓட்டத்தைச் சார்ந்தது.

    *  உள்ளத்து உணர்ச்சிகள் உடலில் தென்படுவது.

2. பாரதிதாசன் பாடல் ஒன்றிற்கு இலக்கிய நயங்கள் எழுதி வரவும்.

கனியிடை ஏறிய சுளையும் - முற்றல் 
            கழையிடை ஏறிய சாறும் 
பனிமலர் ஏறிய தேனும் - காய்ச்சுப்
            பாகிடை ஏறிய சுவையும்
நனிபசு பொழியும் பாலும்  - தென்னை 
            நல்கிய குளிரிள நீரும்
இனியன என்பேன் எனினும் - தமிழை 
             என்னுயிர் என்பேன் கண்டீர்.

                                    - பாவேந்தர் பாரதிதாசன்
மையக்கருத்து 

            உலகில் இனிமையான சுவையுடைய பொருள்கள் பல இருப்பினும் ' தமிழ் ' ஒன்றே இனிமையானது என்றும் ' தமிழை ' உயிர் என்றும் கூறுகிறார் பாவேந்தர்.

திரண்ட கருத்து 

             நன்கு பழுத்த பலாப்பழத்தின் சுளையில் இனிமை இருக்கிறது. கரும்புச் சாற்றிலும் இனிமை உண்டு. தேனிலும் இனிமை  உண்டு. காய்ச்சிய வெல்லப் பாகிலும் இனிமை இருக்கிறது. பசுவின் பாலிலும் இனிமை இருக்கிறது.  இவையாவற்றிலும் இனிமை இருந்தாலும் என்னுயிரான தமிழின் இனிமை போற்றுதலுக்குரியது.

மோனை :  

கனி -  கழை 

பனி -  பாகிடை 

நனி - நல்கிய 

எதுகை :

கனி , பனி , நனி , இனி 

சுவை - பெருமிதச்சுவை 

சந்தம் :

          இப்பாடலில் சுளையும் , சாறும் , தேனும் சுவையும் , பாலும் , நீரும் , எனினும் என்று ' உம் ' என்ற சந்தம் அமைந்து ஓசை நயம் மிக்கதாய் உள்ளது.

3. அணி நயத்தை எவ்வாறு அறிவாய்?
         

அணிநயம்:

அணி = அழகு

    * பாடலுக்கு மென்மேலும் அழகூட்ட கையாளப்படும் நயமே அணிநயம். 

*  பாடலில் பயின்று வரும் உவமை, உருவகம், இயல்பு நவிற்சி (தன்மையணி), உயர்வு நவிற்சி, தற்குறிப்பேற்றம், வேற்றுமை போன்ற பலவகை நயங்களின் அடிப்படையில் அணி நயத்தை அறியலாம்.

*************   *********   **************

Post a Comment

0 Comments