12 ஆம் வகுப்பு - தமிழ் - புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் - செயல்பாடு 7 - அணி இலக்கணம் - வினா & விடை / 12th TAMIL - REFRESHER COURSE MODULE - ACTIVITY 7 - QUESTION & ANSWER

 

12 ஆம் வகுப்பு  - தமிழ் 

புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் 

செயல்பாடு - 7 

அணி இலக்கணம்

கற்றல் விளைவுகள்

* செய்யுளின் கருத்தை அழகுபடுத்தி அலங்கரிப்பது அணியிலக்கணம் என்பதை அறிந்து கொள்ளுதல்.

*  அணிகளின் வகைகளில் சிலவற்றைத் தெரிந்து கொள்ளல்.

ஆசிரியர் செயல்பாடு

ஆர்வமூட்டல்

         தமிழ்மொழி இலக்கணம் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணிஎன ஐந்துவகையாக அமைந்துள்ளது. அவற்றுள் செய்யுளின் அழகையும் நயத்தையும் எடுத்து மொழிவது அணி இலக்கணமாகும். மாணவர்களிடம், அணி இலக்கணம் கூறும் நூல்கள் எவை? என்று வினா எழுப்பி ஆர்வமூட்டல்.

கற்பித்தல் செயல்பாடுகள்

         தொல்காப்பியம்-பொருளதிகாரத்தில் உவமயியல் பின்னாளில் அணி இலக்கணமாக உருவெடுத்தது என்பர். அணியிலக்கணம் கூறும் சிறந்த நூல் தண்டியலங்காரம் ஆகும். தண்டியலங்காரம் நூலின் ஆசிரியர் தண்டி ஆவார். இந்நூல் காவியதர்சம் என்னும் வடமொழி நூலின் தழுவல் என்பர். காலம் கி.பி.12ஆம் நூற்றாண்டு ஆகும்.

அணி இலக்கணம் மட்டும் கூறும் நூல்கள்

1. தண்டியலங்காரம் 2. மாறனலங்காரம்

3. குவலயானந்தம்

அணி இலக்கணத்தையும் கூறும் நூல்கள்

1. தொல்காப்பியம் 

2. வீரசோழியம்

3. இலக்கண விளக்கம்

4. தொன்னூல் விளக்கம்

5. முத்துவீரியம் போன்றவை ஆகும்.

செயல்பாடு:1

உவமை அணி

         அணிகளில் இன்றியமையாதது உவமை அணியாகும். உவமானம் ஒரு தொடராகவும் உவமேயம் மற்றொரு தொடராகவும் அமைய, இடையில் உவமஉருபு வெளிப்படையாக வருவது உவமை அணி ஆகும்.

சான்று

சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம்

சுடச்சுட நோற்கிற் பவர்க்கு ,


விளக்கம்

புடமிடச் சுடுகையில் ஒளிவிடும் பொன்போலத் தவம் இருப்பவரைத் துன்பம் வருத்த வருத்த ஞானம் மெருகேரும்.

உவமானம் : சுடச்சுடரும் பொன்

உவமேயம்: துன்பம் சுடச்சுட நோற்கிற் பவர்க்கு

உவம உருபு : போல்

   இக்குறட்பாவில் உவமை, உவமேயம், உவம உருபு ஆகியவை வெளிப்படையாகப் பயின்று
வந்துள்ளதால் உவமை அணி ஆயிற்று.

செயல்பாடு:2

உருவக அணி

        உவமையின் தன்மையை உவமேயத்தின் மேல் ஏற்றிக்கூறுவது உருவக அணியாகும்.
உவமை, உவமேயம் என்னும் இரண்டும் ஒன்றே என்று தோன்றக் கூறுவது உருவக அணி எனப்படும்.

சான்று

இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும்
பார்த்தாக்கப் பக்கு விடும்.

விளக்கம்

     இக்குறட்பாவில், பிறரிடம் இரந்து வாழ்வது பாதுகாப்பற்ற தோணியாகவும், கொடை வழங்காதது பாறையாகவும் உருவகம் செய்யப்பட்டுள்ளன. எனவே இதில் உருவக அணி அமைந்துள்ளது.

செயல்பாடு: 3

வேற்றுமையணி:

     இரு பொருள்களின் ஒற்றுமையை முதலில் கூறி, பின்னர் அப்பொருள்களுக்கிடையே
வேற்றுமைத் தோன்றக் கூறுவது வேற்றுமையணி அகும்.

சான்று

தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு.

விளக்கம் :

ஒற்றுமை : தீயும் சுடும், வன்சொல்லும் சுடும்.

வேற்றுமை : தீப்புண் ஆறும்: நாவினால் சுட்ட வடு ஆறாது. எனவே இக்குறட்பாவில்
வேற்றுமை அணி பயின்று வந்துள்ளது.

செயல்பாடு: 4

சொற்பொருள் பின்வரும் நிலையணி:

            செய்யுளில் வந்த சொல்லே, மீண்டும் மீண்டும் வந்து தந்த பொருளையே தருமாயின் அது சொற்பொருள் பின்வருநிலையணி ஆகும்.

சான்று

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.

விளக்கம்

   இக்குறளில் நாடி என்னும் சொல் ஆராய்ந்து என்னும் பொருளில் பல முறை வந்துள்ளதால் இது சொற்பொருள் பின்வருநிலையணி ஆயிற்று.

மாணவர் செயல்பாடு

* மாணவர்களைக் கரும்பலகையில் அணி இலக்கண நூல்களின் பெயர்களை எழுத வைத்தல்.

* மூன்று குழுவாகப் பிரித்து ஒரு குழு அணியின் இலக்கணத்தையும் மற்றொரு குழு அதற்கான சான்றையும் இன்னொறு குழு அதற்கான விளக்கத்தையும் கூறச் செய்தல்.

**************     *************   ************

                               மதிப்பீடு

1. அணி இலக்கணம் கூறும் நூல்களை எழுதுக?

அணி இலக்கணம் மட்டும் கூறும் நூல்கள்.

* தண்டியலங்காரம் 

* மாறனரங்காரம் 

* குவலயானந்தம் 

அணி இலக்கணத்தையும் கூறும் நூல்கள்

1. தொல்காப்பியம் 

2. வீரசோழியம்

3. இலக்கண விளக்கம்

4. தொன்னூல் விளக்கம்

5. முத்துவீரியம் போன்றவை ஆகும்


2. உவமை அணியைச் சான்றுடன் விளக்குக.

உவமை அணி

          உவமானம் ஒரு தொடராகவும் உவமேயம் மற்றொரு தொடராகவும் அமைய, இடையில் உவமஉருபு வெளிப்படையாக வருவது உவமை அணி ஆகும்.

சான்று

சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம்

சுடச்சுட நோற்கிற் பவர்க்கு ,


விளக்கம்

புடமிடச் சுடுகையில் ஒளிவிடும் பொன்போலத் தவம் இருப்பவரைத் துன்பம் வருத்த வருத்த ஞானம் மெருகேரும்.

உவமானம் : சுடச்சுடரும் பொன்

உவமேயம்: துன்பம் சுடச்சுட நோற்கிற் பவர்க்கு

உவம உருபு : போல்

   இக்குறட்பாவில் உவமை, உவமேயம், உவம உருபு ஆகியவை வெளிப்படையாகப் பயின்று
வந்துள்ளதால் உவமை அணி ஆயிற்று.


3. இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும்
பார்த்தாக்கப் பக்கு விடும் -

 இக்குறட்பாவில் பயின்றுள்ள அணியை விளக்குக


உருவக அணி

        உவமையின் தன்மையை உவமேயத்தின் மேல் ஏற்றிக்கூறுவது உருவக அணியாகும்.
உவமை, உவமேயம் என்னும் இரண்டும் ஒன்றே என்று தோன்றக் கூறுவது உருவக அணி எனப்படும்.

சான்று

இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும்
பார்த்தாக்கப் பக்கு விடும்.

விளக்கம்

     இக்குறட்பாவில், பிறரிடம் இரந்து வாழ்வது பாதுகாப்பற்ற தோணியாகவும், கொடை வழங்காதது பாறையாகவும் உருவகம் செய்யப்பட்டுள்ளன. எனவே இது உருவக அணி ஆயிற்று.

****************    ***********     *************

Post a Comment

0 Comments