12 ஆம் வகுப்பு - தமிழ்
புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்
செயல்பாடு - 6 . துறை
கற்றல் விளைவுகள்
* சங்க இலக்கியத்தில் இடம் பெறும் துறைகளைப் பற்றி அறியச் செய்தல்.
* மக்களின் வாழ்வியல் நெறிகளை அறிதல்.
* புறத்திணைகளின் உட்பிரிவுகளை அறிதல்.
ஆசிரியர் செயல்பாடு
ஆர்வமூட்டல்
மாணவர்களே! நேற்று நாம் கற்ற பாடத்தில் எதைப் பற்றி அறிந்து கொண்டீர்கள்?(தினை, திணை வகைகள்) இன்று அதன் தொடர்ச்சியாகத் திணையின் உட்பிரிவாகிய துறைப் பற்றிக் கற்றுக்கொள்ள போகிறோம் என்று கூறி மாணவர்களை ஆர்வமூட்டல்.
கற்பித்தல் செயல்பாடுகள்
செயல்பாடு: 1
துறை என்பது ஒரு சிறிய பிரிவு அல்லது பகுப்பு, திணையின் உட்பிரிவு துறை எனலாம். திணை என்பது மக்கள் ஒழுக்கம். துறை என்பது மக்களும் விலங்குகளும் சென்று நீர் உண்ணும் துறை போலப் பல வகைப்பட்ட பொருள்களும் ஒருவகை பட்டுச் செல்லுதற்குறிய வழியாகும். மக்கள் வாழ்க்கைக்குரிய நெறி என்று சுருக்கமாகக் கூறலாம். திணை ஆறு போன்றது, துறை ஆற்றில் மக்கள் இறங்கும் துறை போன்றது.
செயல்பாடு: 2
குறிப்பிட்ட சில துறைகளை எடுத்துக்காட்டு மூலம் விளக்குதல்.
செவியறிவுறூஉத்துறை
துறை விளக்கம் : அரசன் செய்ய வேண்டிய கடமைகளை முறை தவறாமல் செய்யுமாறு அவன் கேட்க அறிவுறுத்தல் செவியறிவுறூஉ என்னும் துறையாகும்.
சான்று
" காய் நெல் அறுத்துக் கவளம் கொளினே,
மாநிறைவு இல்லதும், பல்நாட்கு ஆகும்
யானை புக்க புலம் போலத்
தானும் உண்ணான், உலகமும் கெடுமே " (புறம் - பிசிராந்தையார்)
சான்று விளக்கம்
சிறு நிலப்பரப்பில் விளைந்த நெல்லைக் கவளமாக்கிக் கொடுத்தால், யானைக்குப் பல
நாள்களுக்கு உணவாகும். பெரு நிலமாயினும் யானை தானே புகுந்து உண்ணத் தொடங்கினால், யானையின் வாயுள் புகுவதைவிடக் கால்களில் பட்டு அழிவதே மிகுதியாகும். அது போல், அரசன்
என்பவன் மக்களிடம் முறையறிந்து வரியை வசூலித்தால் மிகுதியான பொருளும் கிடைக்கும், நாடும் தன் வளத்தில் குறையாது பெருகும். மக்கள் மகிழ்வர்.
வரி திரட்டும் முறை அறியாது மக்களை வருத்தும் மன்னன், விளை நிலத்தில் புகுந்து தானே உண்ணும் யானைக்கு ஒப்பானவனாகி விடுவான். அதனால் குடி மக்களின் அன்பு கெடும். நிலத்தில்
புகுந்த யானை தானும் உண்ணாது வீணாக்குவது போல, வரி விதிப்பின் முறை அறியாத அரசன் தானும் பயன் அடையமாட்டான், மக்களும் துன்புறுவார்கள்.
துறை பொருத்தம்
பாண்டியன் அறிவுடைநம்பிக்கு வரி திரட்டும் முறைகளை அவர் கேட்கும் படிக் கூறியிருப்பதால்,இப்பாடல் இத்துறையுடன் பொருந்தியுள்ளது.
செயல்பாடு: 3
பொருண்மொழிக் காஞ்சித்துறை
துறை விளக்கம்
மக்களுக்கு நலம் செய்யும் வாழ்வியல் நெறிகளை எடுத்துக் கூறுதல் பொருண் மொழிக்காஞ்சித் துறையாகும்.
சான்று
"புகழ் எனின் உயிருங் கொடுக்குவர்
பழியெனின் உலகுடன் பெறினும் கொள்ளலர்"
(புறம் - கடலுள் மாய்ந்த இளம் பெருவழுதி)
சான்று விளக்கம்
தமக்காக உழைக்காமல் பிறர்க்காகப் பெரிய முயற்சியுடன் உழைப்பவர்கள், தனித்து உண்ண மாட்டார்கள், பழிக்கு அஞ்சுவர் வெறுத்தல், சோம்பல் இன்றிச்செயல்படுவார்கள். புகழ் வரும் என்றால் தம் உயிரையும் கொடுப்பர், பழி வரும் என்றால் உலகம் முழுவதும் கிடைத்தாலும் ஏற்றுக் கொள்ளாதவர்.
எதற்கும் மனம் தளராதவர்கள். இத்தகைய சிறப்புடையோர் இருப்பதால்தான் இவ்வுலம் இன்றுவரை இயங்கிக் கொண்டிருக்கிறது.
துறை பொருத்தம்
புகழ் வரும் என்றால் தம் உயிரையும் கொடுப்பர், பழி வரும் என்றால் உலகம் முழுவதும் கிடைத்தாலும் ஏற்றுக் கொள்ளார் என்று மக்களுக்கு நன்மை செய்யும் வாழ்வியல் நெறிகளை எடுத்துக் கூறுவதால் பொருண்மொழிக்காஞ்சித் துறைக்குப் பொருந்தி வருகிறது.
செயல்பாடு: 4
பரிசல் துறை
துறை விளக்கம்
புலவர் ஒருவர் அரசனிடம் பரிசு வேண்டி வாயிலில் நிற்பது பரிசல் துறையாகும்.
சான்று
" வாயிலோயே! வாயிலோயே!
-------------------- -------------- -----------
செலினும், அத்திசைச் சோறே"
(புறம் - ஔவையார்)
சான்று விளக்கம்
வாயில் காவலனே! புலவர்களாகிய நாங்கள் வள்ளல்களை அணுகி அறிவார்ந்த சொற்களை விதைத்துத் தான் எண்ணியதை முடிக்கும் வலிமையுடையவர்கள். அதியமான் தன் தகுதி அறியானோ? இவ்வுலகில் அறிவும் புகழும் உடையோர் மாய்ந்து விடவில்லை. தச்சனின் பிள்ளைக்குக்
காட்டில் ஒரு மரம் கூடவா கிடைக்காமல் போகும். கலைத்தொழில் வல்ல எங்களுக்கும் எத்திசைகளில் சென்றாலும் தவறாமல் உணவு கிட்டும்.
துறை பொருத்தம்
பரிசில் கிடைக்கச் சற்றுத் தாமதமாகவே வாயிற்காவலனிடம் ஔவையார் வாதம் செய்கிறார். எனவே இப்பாடல் பரிசில் துறைக்குச் சான்றாயிற்று.
************** *************** ***********
மாணவர் செயல்பாடு
துறையைக் கரும்பலகையில் சான்றுடன் எழுதி விளக்குதல்.
மதிப்பீடு
1. துறை என்றால் என்ன?
*' துறை ' என்பது ஒரு சிறிய பிரிவு அல்லது பகுப்பு .
* திணையின் உட்பிரிவு 'துறை ' எனலாம்.
* மக்கள் வாழ்க்கைக்கு உரிய நெறி எனவும் கூறலாம்.
2. பொருண்மொழிக்காஞ்சித் துறையைச் சான்றுடன் விளக்கிக் கூறுக.
பொருண்மொழிக் காஞ்சித்துறை
துறை விளக்கம்
மக்களுக்கு நலம் செய்யும் வாழ்வியல் நெறிகளை எடுத்துக் கூறுதல் பொருண் மொழிக்காஞ்சித் துறையாகும்.
சான்று
"புகழ் எனின் உயிருங் கொடுக்குவர்
பழியெனின் உலகுடன் பெறினும் கொள்ளலர்"
(புறம் - கடலுள் மாய்ந்த இளம் பெருவழுதி)
சான்று விளக்கம்
தமக்காக உழைக்காமல் பிறர்க்காகப் பெரிய முயற்சியுடன் உழைப்பவர்கள், தனித்து உண்ண மாட்டார்கள், பழிக்கு அஞ்சுவர் வெறுத்தல், சோம்பல் இன்றிச் செயல்படுவார்கள்.
புகழ் வரும் என்றால் தம் உயிரையும் கொடுப்பர், பழி வரும் என்றால் உலகம் முழுவதும் கிடைத்தாலும் ஏற்றுக் கொள்ளாதவர். எதற்கும் மனம் தளராதவர்கள். இத்தகைய சிறப்புடையோர் இருப்பதால்தான் இவ்வுலம் இன்றுவரை இயங்கிக் கொண்டிருக்கிறது.
துறை பொருத்தம்
புகழ் வரும் என்றால் தம் உயிரையும் கொடுப்பர், பழி வரும் என்றால் உலகம் முழுவதும் கிடைத்தாலும் ஏற்றுக் கொள்ளார் என்று மக்களுக்கு நன்மை செய்யும் வாழ்வியல் நெறிகளை எடுத்துக் கூறுவதால் பொருண்மொழிக்காஞ்சித் துறைக்குப் பொருந்தி வருகிறது.
************** **************** ***********
0 Comments