12 ஆம் வகுப்பு - தமிழ்
புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்
செயல்பாடு - 30
நேர்காணல் உத்திகள்
கற்றல் விளைவுகள்
* நேர்காணலின் விளக்கத்தை அறியச் செய்தல்.
* நேர்காணலின் நோக்கங்களை புரியச் செய்தல்.
* நேர்காணலின் வகைகளைத் தெரிந்து கொள்ளுதல்.
* நேர்காணலால் ஏற்படும் பயன்களை உணரச் செய்தல்.
* நேர்காணலின்போது செய்யக்கூடியவை, செய்யக்கூடாதவை எவையென உணர்ந்து நேர்காணல் எடுக்கச் செய்தல்.
ஆசிரியர் செயல்பாடு
ஆர்வமூட்டல்
விளையாட்டில் சாதனை புரிந்த ஒருவரிடம் நேர்காணல் செய்யும்போது இந்த விளையாட்டில் நீங்கள் சிறந்து விளங்குவதற்கான காரணத்தைக் குறிப்பிட முடியுமா? இவ்விளையாட்டில் நீங்கள் எவ்வளவு நேரம் தினமும் பயிற்சி செய்வீர்கள்? நீங்கள் இந்த விளையாட்டை தேர்ந்தெடுத்தற்கான காரணம் ஏதேனும் உள்ளதா? விளையாட்டில் ஈடுபடும் இன்றைய இளைஞர்களுக்கு நீங்கள் சொல்லும் வழிகாட்டுதல் இது போன்ற வினாக்கள் வாயிலாக மாணவர்களை ஆர்வமாக பங்கேற்கச் செய்தால் "நேர்காணல்" என்னும் பாடத்தலைப்பினுள் நுழைய இயலும்.
கற்பித்தல் செயல்பாடுகள்
செயல்பாடு: 1
நேர்காணல் விளக்கம்:
நேர்காணல் என்பது கேள்விகள் கேட்டுப் பதில்களைப் பெறும் ஓர் உரையாடல் நிகழ்ச்சி ஆகும். செய்திக்கு மூலமாக இருப்பவரை அல்லது தானே செய்தியாகும் ஒருவரை நேர்காணல் செய்து கருத்துகளைத் திரட்டுதல் இதன் முக்கியமான நோக்கமாகும். நேர்காணல் இல்லாமல் செய்திகள் இல்லை என்னும் அளவிற்குச் செய்திகளில் நேர்காணல் முக்கியத்துவம் பெறுகின்றது.
நேர்காணல் என்பது ஒரு குறிப்பிட்ட துறை சார்ந்த வல்லுனரோடு தொடர்பு கொண்டு, அவர் மூலமாக விவரங்களைக் கேட்டுப் பெறுவதாகும். இது நேரிலோ, கடிதம் வாயிலாகவோ, தொலைபேசி வாயிலாகவோ அல்லது நவீன தகவல் தொடர்பு சாதனம் வழியாகவோ நிகழலாம்.
செயல்பாடு: 2
நேர்காணலின் நோக்கம்:
நேர்காணல் ஒவ்வொன்றும் ஏதாவது ஒரு நோக்கத்துடன் நடத்தப்பெறும். நோக்கமற்ற
நேர்காணல் பொழுதுபோக்குப் பேச்சு போல் ஆகிவிடும். நேர்காணல் செய்பவர் நேர்காணலின் நோக்கம் குறித்துத் தெளிவாக அறிந்திருத்தல் வேண்டும்.
நடப்பு அறிதல் - நடந்து கொண்டிருக்கும் சில சுவையான நிகழ்வுகள் குறித்த விவரம், கருத்தறிய அதனுடன் தொடர்புடையவரிடம் நேர்காணல் செய்தல்.
நிகழ்வு விவரம் அறிதல் - நடைபெறப்போகும் முக்கிய நிகழ்வு குறித்த விவரம், கருத்தறிய அதனுடன் தொடர்புடையவரிடம் நேர்காணல் செய்தல்.
கருத்து வெளிப்படுதல் - தலைவர்கள், கலைஞர்கள், சிந்தனையாளர்கள் போன்றவர்களின் ஆளுமைத்திறன், தனித்தன்மை ஆகியவற்றை வெளிப்படுத்த நேர்காணல் செய்தல்.
செயல்பாடு: 3
நேர்காணல் வகைகள்:
நேர்காணல் எப்படி வேண்டுமானாலும் அமையலாம். இருப்பினும் பொதுவாக கீழ்க்காணும் தலைப்புகளின் கீழ் நேர்காணல் வகைப்படுத்தப்படுகிறது.
* தற்செயல் நேர்காணல் :
* ஆளுமை விளக்க நேர்காணல்
• செய்தி நேர்காணல்
* செய்திக்கூட்ட நேர்காணல்
• செய்திச் சுருக்க நேர்காணல்
* சிற்றுண்டிக் கூட்ட நேர்காணல்
* தொலைபேசி நேர்காணல்
* அடைகாத்தல் நேர்காணல்
* பட்டம் பறக்கவிடும் நேர்காணல்
* மின்னஞ்சல் நேர்காணல்
* நிகழ்பட உரையாடல் நேர்காணல்
செயல்பாடு: 4
நேர்காணலின் பயன்கள்:
நேர்காணலால் பல நன்மைகள் கிடைக்கின்றன. அவற்றுள் சிலவற்றைக் காண்போம்.
* நேர்காணல் செய்திகளை உருவாக்குவதற்குப் பயன்படுகிறது.
* ஒரு குறிப்பிட்ட பொருள் பற்றி, பொதுமக்களிடம் கருத்தை உருவாக்குவதற்கு நேர்காணல் பயன்படுகிறது.
* அரசு வெளியிடும் செயல் திட்டங்களின் விளக்கங்களை அதிகாரப்பூர்வமாக அறிய நேர்காணல் துணை செய்கிறது.
* நாட்டிற்குப் பயன்படும் கண்டுபிடிப்புகள், திட்டங்கள் பற்றி விளக்கமாக அறிய நேர்காணல் பயன்படுகிறது.
* நேர்காணப்படுபவரின் சொற்களையும் செய்கைகளையும் ஒளிப்படங்களுடன் வெளியிடும் போது சுவையான கட்டுரை கிடைக்க, அது வாய்ப்பு அளிக்கிறது.
செயல்பாடு: 5
நேர்காணலின்போது செய்ய வேண்டியவை:
* நேர்காணலுக்குத் திட்டமிடுதல், இணங்க வைத்தல், தெளிவாக அறிதல், தொடர் முயற்சி எனும் நான்கு முக்கிய பங்குகள் இருக்க வேண்டும்.
* யாரை நேர்காணல் செய்கிறோமோ அவரைப் பற்றிய தகவல்களை அறிந்து வைத்திருத்தல் வேண்டும்.
நேர்காணலின்போது செய்யக் கூடாதவை:
* முன் தயாரிப்பு இல்லாமல் நேர்காணல் செய்யக்கூடாது.
* நேர்காணலின்போது பதிலளிப்பவர் சொல்லும் கருத்துக்கு இடைமறித்து கேள்வி
கேட்கக்கூடாது. அது அவர்களின் சிந்தனை ஓட்டத்தைத் தடுக்கும்.
மாணவர் செயல்பாடு
* மாணவர்கள் தங்களுக்குள் இந்த உத்திகளைக் கடைப்பிடித்து நேர்காணலைச்
செய்யச் சொல்லுதல். அதில் குடும்ப விவரங்கள், பள்ளி அனுபவம், எதிர்கால இலட்சியம் போன்றவைகளைப் பேசச் செய்தல்.
***************** ********* **************
மதிப்பீடு
1. நேர்காணல் - வரையறு.
நேர்காணல் என்பது கேள்விகள் கேட்டுப் பதில்களைப் பெறும் ஓர் உரையாடல் நிகழ்ச்சி ஆகும். செய்திக்கு மூலமாக இருப்பவரை அல்லது தானே செய்தியாகும் ஒருவரை நேர்காணல் செய்து கருத்துகளைத் திரட்டுதல் இதன் முக்கியமான நோக்கமாகும். நேர்காணல் இல்லாமல் செய்திகள் இல்லை என்னும் அளவிற்குச் செய்திகளில் நேர்காணல் முக்கியத்துவம் பெறுகின்றது.
2. நேர்காணல் வகைகள் இரண்டினைக் கூறுக.
* தற்செயல் நேர்காணல் :
* ஆளுமை விளக்க நேர்காணல்
3. நேர்காணலின் பயன்கள் இரண்டினைக் கூறுக.
* நேர்காணல் செய்திகளை உருவாக்குவதற்குப் பயன்படுகிறது.
* ஒரு குறிப்பிட்ட பொருள் பற்றி, பொதுமக்களிடம் கருத்தை உருவாக்குவதற்கு நேர்காணல் பயன்படுகிறது.
* அரசு வெளியிடும் செயல் திட்டங்களின் விளக்கங்களை அதிகாரப்பூர்வமாக அறிய நேர்காணல் துணை செய்கிறது.
* ************* ************ ***** ****
0 Comments