12 ஆம் வகுப்பு - தமிழ் - புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் 25 , எட்டுத்தொகை நூல்கள் - வினா & விடை / 12th TAMIL - REFRESHER COURSE MODULE - 25 , QUESTION & ANSWER

 

12 ஆம் வகுப்பு - தமிழ் 

புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்

செயல்பாடு - 25

எட்டுத்தொகை நூல்கள்

கற்றல் விளைவுகள்

* சங்க இலக்கியம் என்று அழைக்கப்படும் 'பாட்டும் தொகையும்' பற்றி அறிந்து கொள்ளுதல்.

*  பதினெண் மேற்கணக்கு நூல்களின் பட்டியலை நினைவில் நிறுத்தல்.

*  எட்டுத்தொகை நூல்களைப்பற்றியும் அவற்றுள் அக, புற நூல்களின் வரிசைகளையும் புரிந்து கொள்ளுதல்.

*  சமகால மக்களின் அகம் மற்றும் புறம் சார்ந்த வாழ்க்கை முறைகளை, பண்பாட்டுக் கூறுகளைத் தெரிந்து கொள்ளுதல்.

ஆர்வமூட்டல்

    'மாணவர்களே ! பேருந்தில் கரம், சிரம் புறம் நீட்டாதீர்கள்' என எழுதியுள்ளதை பார்த்தீர்களா? என்று வினவி அதற்கானப் பொருளை அவர்களிடமிருந்து பெறுதல். புறம் என்பதற்கான பொருளை மாணவர்களிடமிருந்து கேட்டறிந்து ஆர்வமூட்டல்.


ஆசிரியர் செயல்பாடு

செயல்பாடு:1

    சங்க இலக்கியங்கள் என்று போற்றப்படும் நூல்கள் எட்டுத்தொகையும், பத்துப்பாட்டும் ஆகும். அவற்றுள் எட்டுத்தொகை தனிச்சிறப்பு வாய்ந்ததாகும். நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு என்பன எட்டுத்தொகை நூல்களாகும்.

"நற்றிணை" என்பது 'நல்ல திணை' என்றும் 'நற்றிணை நானூறு' என்றும் வழங்கப்பெறும். 9 முதல் 12 அடி வரையிலான 400 அகப்பொருள் பாடல்களின் தொகுப்பு. இந்நூலை தொகுத்தாற் பெயர் அறியவில்லை. தொகுப்பித்தவன் பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி ஆவார்.

"நல்ல குறுந்தொகை" என்ற அடைமொழியுடன் 401 அகப்பாடல்களைக் கொண்ட நூல் குறுந்தொகை. 4 முதல் 8 அடி வரையிலான அடி எண்ணிக்கை உடையது. தொகுத்தவர் பூரிக்கோ; தொகுப்பித்தவர் பெயர் அறியப்படவில்லை.

செயல்பாடு: 2

               3 முதல் 6 அடி வரையிலான குறும்பாடல்களைக் கொண்டது. ஐந்திணைக்கும் முறையே நூறு பாடல்கள் வீதம் எழுதப்பெற்ற நூல் "ஐங்குறுநூறு". பத்து, பத்து பாடல்களாக 500 பாடல்களைக் கொண்டது. இந்நூலைத் தொகுத்தவர் புலத்துறை முற்றிய கூடலூர் கிழார். தொகுப்பித்தவர் யானைக் கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை ஆவார்.

              சேர மன்னர்கள் பதின்மரைப் பற்றிப் பாடிய பாடலின் தொகுப்பு பதிற்றுப்பத்து ஆகும். பத்துப்பத்துப் பாடல்களாக, நூறு பாடல்களைக் கொண்டதால் பதிற்றுப்பத்து என்று பெயர் பெற்றது. முதற்பத்தும் இறுதிப்பத்தும் கிடைக்கவில்லை. இந்நூல் பாடாண்திணை என்ற ஒரே திணைப் பாடலினால் ஆனது. ஒவ்வொரு சேர மன்னனையும் ஒவ்வொரு புலவர் பாடியுள்ளார்.

செயல்பாடு: 3

             எட்டுத் தொகையில் அகமும் புறமும் கலந்த ஒரே நூல் பரிபாடல். இதிலுள்ள மொத்தப் பாடல்களின் எண்ணிக்கை 70. ஆனால் இன்று 22 பாடல்களே கிடைத்துள்ளன.

             ' கற்றறிந்தோர் ஏத்தும் கலி' என்ற சிறப்பிற்குரியது கலித்தொகை. நல்லந்துவனார் பாடிய கடவுள்
வாழ்த்து நீங்கலாக 149 பாடல்கள் உள்ளன. 

குறிஞ்சி - 29, முல்லை - 17, மருதம் - 35, நெய்தல் - 33,
பாலை - 35 பாடல்களை முறையே கொண்டுள்ளது.

செயல்பாடு: 4

                  அகப்பாட்டு, நெடுந்தொகை, பெருந்தொகை நானூறு என்று பல பெயர்களால் அகநானூறு வழங்கப்படுகின்றது. 13 முதல் 31 அடி வரையிலான 400 பாடல்களைக் கொண்டது.

களிற்றியானை நிரை - 120

மணிமிடைப் பவளம்   -  180 

நித்திலக் கோவை         - 100

மொத்தம்                            = 400

என்ற 3 பிரிவுகளாக அமைந்தது அகநானூறு.

பாலை  - 1, 3, 5, 7, 9 ஒற்றைப்படை எண்கொண்ட பாடல்கள்

குறிஞ்சி  - 2, 8 என்ற வரிசை உடைய பாடல்கள்

முல்லை 4, 14 என்ற வரிசை உடைய பாடல்கள்

மருதம் - 6, 16 என்ற வரிசை உடைய பாடல்கள்

நெய்தல்  - 10, 20, 30 என்ற வரிசை உடைய பாடல்கள்

என்ற வரிசை முறைப்படி அமைந்த பாடல்களை உடையது.

'புறம்' என்றும் 'புறப்பாட்டு' என்றும் புறநானூற்றை அழைப்பர். 4 முதல் 40 அடி வரை அடியளவு கொண்ட நூல். சேர, சோழ, பாண்டிய, வேளிர் மன்னர்களைப் பற்றிய செய்திகளைக் கூறுகிறது. கடையெழு வள்ளல், சங்ககால போர் முறை, வீரம், கொடை, வாழ்க்கை முறை, உயரிய பண்பு
ஆகியவற்றை பிரதிபலிக்கும் காலக்கண்ணாடியாக புறநானூறு விளக்குகின்றது.

மாணவர் செயல்பாடு

* சங்க இலக்கியம் என்று கரும்பலகையில் எழுதி அதன் பகுப்பினை எழுத வைத்தல். மேலும் எட்டுத்தொகை நூல்களின் பட்டியலை எடுத்துக் கூறச் செய்தல்.

***************    ***********    ************

                            மதிப்பீடு

1. சங்க இலக்கியங்கள் யாவை?

      * எட்டுத்தொகை 

      * பத்துப்பாட்டு 


2. எட்டுத்தொகை நூல்களைப் பட்டியலிடுக.

   *  நற்றிணை 

   * குறுந்தொகை

   * ஐங்குறுநூறு

   * பதிற்றுப்பத்து

   * பரிபாடல்

   * கலித்தொகை

   * அகநானூறு

   * புறநானூறு


3. அகநானூற்றின் நூல் அமைப்பைக் கூறுக.

அகப்பாட்டு, நெடுந்தொகை, பெருந்தொகை நானூறு என்று பல பெயர்களால் அகநானூறு வழங்கப்படுகின்றது. 13 முதல் 31 அடி வரையிலான 400 பாடல்களைக் கொண்டது.

களிற்றியானை நிரை - 120

மணிமிடைப் பவளம்   -  180 

நித்திலக் கோவை         - 100

மொத்தம்                            = 400

என்ற 3 பிரிவுகளாக அமைந்தது அகநானூறு.

பாலை  - 1, 3, 5, 7, 9 ஒற்றைப்படை எண்கொண்ட பாடல்கள்

குறிஞ்சி  - 2, 8 என்ற வரிசை உடைய பாடல்கள்

முல்லை 4, 14 என்ற வரிசை உடைய பாடல்கள்

மருதம் - 6, 16 என்ற வரிசை உடைய பாடல்கள்

நெய்தல்  - 10, 20, 30 என்ற வரிசை உடைய பாடல்கள்

என்ற வரிசை முறைப்படி அமைந்த பாடல்களை உடையது.


4. புறநானூறு வாயிலாக நாம் அறியும் செய்திகள் யாவை?

              புறம்' என்றும் 'புறப்பாட்டு' என்றும் புறநானூற்றை அழைப்பர். 4 முதல் 40 அடி வரை அடியளவு கொண்ட நூல். சேர, சோழ, பாண்டிய, வேளிர் மன்னர்களைப் பற்றிய செய்திகளைக் கூறுகிறது. கடையெழு வள்ளல், சங்ககால போர் முறை, வீரம், கொடை, வாழ்க்கை முறை, உயரிய பண்பு
ஆகியவற்றை பிரதிபலிக்கும் காலக்கண்ணாடியாக புறநானூறு விளக்குகின்றது.

***************     ************   **************

Post a Comment

0 Comments