12 ஆம் வகுப்பு - தமிழ்
புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்
செயல்பாடு - 22
பா இயற்றப் பழகலாம்
கற்றல் விளைவுகள்
* கவிதை (பாடல்)எழுதுவதற்கான நுட்பத்தை அறிந்து கொள்ளுதல்.
* இலக்கண அறிவை வளர்த்துக் கொள்ளுதல்.
* கற்பனைத் திறனை வளர்த்துக் கொள்ள உதவுதல்.
ஆசிரியர் செயல்பாடு
ஆர்வமூட்டல்
செய்யுள்/உரைநடை இரண்டிற்குமான வேறுபாடு என்ன? என்ற வினாவினைக் கேட்டு அதற்கான விடையை மாணவர்களிடமிருந்து பெற்று அதற்கான தெளிவான விளக்கமளித்து ஆர்வமூட்டச் செய்தல்.
கற்பித்தல் செயல்பாடுகள்
செயல்பாடு:1
கவிதை இலக்கியங்கள் :
கவிதைகளை மரபுக் கவிதைகள், புதுக்கவிதைகள், ஹைக்கூ, குக்கூ, சென்ரியூ கவிதைகள் எனக் கவிதைகளைப் பலவகைகளாகப் பாகுபடுத்தலாம். இவை அனைத்தும் மரபுக்கவிதை புதுக்கவிதை என்னும் இருவகைக்குள் அடங்கும். மரபுக்கவிதைகள் இலக்கணவரம்புகள் உடையன. புதுக்கவிதைகள் இலக்கண வரம்புகளுக்கு உட்படாதவை.
பாடல், கவிதை, பா, செய்யுள், தூக்கு, கவி, பாட்டு ஆகிய சொற்கள் ஒரே பொருளில் வருவன. தமிழ்ச் செய்யுள் வடிவங்கள் பெரும்பாலும் இசையை அடிப்படையாகக் கொண்டவை. ஓசையே தமிழ்ச்செய்யுளை மெருகேற்றும். இவ்வோசை செய்யுளுக்கு மேலும் அழகு சேர்க்கிறது. ஒவ்வொரு பாவும் ஒவ்வொரு ஓசை வடிவம் கொண்டவை.
செயல்பாடு: 2
மரபுக் கவிதைகள் :
மரபு என்பது தொன்றுதொட்டுவழங்கி வருவது.அதேபோல்மரபுக்கவிதை என்பது தொன்றுதொட்டு வழங்கி வரும் இலக்கண வரையறைக்குட்பட்டது. அவற்றில் அசை, சீர், தளை, அடி, தொடை போன்ற செய்யுள் உறுப்புகள் காணப்படும். அதன் ஓசையை (இசையை) ஒழுங்குபடுத்த மோனை, எதுகை, முரண், இயைபு போன்றவை அவற்றுடன் பிணைந்திருக்க வேண்டும்.
இதில் பாவும் பாவினங்களும் யாப்பின் அடிப்படையில் அமைந்திருக்க வேண்டும். நான்கு வகை பாக்களும் அவற்றின் இலக்கணம் பற்றியும் நம் பாடப் பகுதியில் கூறப்பட்டுள்ளன.
ஆசிரியப்பா :
பா இயற்றுவதற்கான எளிமையான பா ஆசிரியப்பாவாகும். இது அகவலோசை பெற்றதால் அகவற்பா என்றழைப்பர். இதன் சீர் இயற்சீர். இதனை ஆசிரிய 'உரிச்சீர்' என்றும் கூறுவர். காய்ச்சீர் கலந்தும் வரலாம்.
தளை - ஆசிரியத்தளை .
பொது இலக்கணம்:
• அகவலோசை கொண்டது.
* அளவடி பெற்று வரும்.
* இயற்சீர் மிகுந்தும் பிற சீர் கலந்தும் வரும்.
ஆசிரியத்தளை மிகுந்தும் பிறதளை கலந்தும் வரும்.
* மூன்றடி சிற்றெல்லையாக வரும்.
* பேரெல்லை கவிஞனின் கற்பனைத் திறனைப் பொறுத்தது (எல்லையற்றது).
இதன் வகைகளையும் அறிந்து இவ்விலக்கணப்படி ஆசிரியப்பாவில் செய்யுள் (கவிதை) இயற்றப் பழக வேண்டும்.
செயல்பாடு: 3
புதுக்கவிதை :
மரபுக்கவிதையின் யாப்பு வரையறைகளுக்கு உட்படாது தோன்றிய கவிதை வடிவமே புதுக்கவிதை. இதனாலேயே புதுக்கவிதை எனில் இலக்கணம் இல்லை என்னும் கருத்து எழுந்தது வைரமுத்து கூட தன் பாடலில்,
" நமது கதை புதுக்கவிதை
இலக்கணங்கள் இதற்கு இல்லை
- என எழுதியிருப்பார்.
தொடக்கக்காலத்தில் "வசனக் கவிதை எனச் சாதாரணமாகச் சுட்டப்பட்ட நிலையில்
பின்பு புதுக்கவிதை எனப் போற்றிக் கொள்ளப்பட்டது. இலக்கணங்களே இல்லை என்பது தான் புதுக்கவிதையின் இலக்கணம் என்னும் நிலை மெல்ல மெல்ல மாறியது. புதுக்கவிதை ஏற்றுக்கொள்ளப்பட்ட பின் பரவலாக ஆயிரக்கணக்கில் பலரும் புதுக்கவிதைகளை எழுதினர்.
மாணவர் செயல்பாடு
* மரபுக்கவிதை ஒன்றைப் பாடப் புத்தகத்திலிருந்து படித்துக் காட்டவும்.
* புதுக்கவிதை ஒன்றை மாணவரை எழுதச் சொல்லுதல்.
* செய்யுள் (கவிதை) இயற்றுவதற்கான அடிப்படைக் கூறுகள் எவை என்பதைக் கூறச் செய்தல்.
**************** ************ ************
மதிப்பீடு
1. ஆசிரியப்பாவில் மரபுக்கவிதை ஒன்றை எழுதுக.
2. "வானம்"- என்ற தலைப்பில் புதுக்கவிதை எழுதுக.
மாணவர்கள் தம் கற்பனைக்கேற்ப சுயமாகக் கவிதை படைக்கவும்
*************** ********** ***************
1 Comments
Its very useful to me thank you
ReplyDelete