12 ஆம் வகுப்பு - தமிழ்
புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்
செயல்பாடு - 19
கருத்துப் படத்தைப் பத்தியாக்குக / சொற்களைப் பிரித்தும் சேர்த்தும் எழுதுதல்.
கற்றல் விளைவுகள்
* பத்தி எழுதும் நுட்பத்தை அறிந்து கொள்ளல்
* பத்தி எழுதுதல் கட்டுரை எழுத உதவும் என்பதை அறியச் செய்தல்.
* கருத்துப் படத்தை எளிமையாகப் புரிந்து கொள்ள பத்தி எழுதுதல் உதவும் என்பதை அறியச் செய்தல்.
* சொற்களைப் பிரித்தும் சேர்த்தும் தொடராக அமைத்தும் நுட்பத்தை அறிந்து கொள்ளல்.
ஆசிரியர் செயல்பாடு
ஆர்வமூட்டல்
செய்தித்தாள்களில் கேலிச்சித்திரம் (CARTOON) என்ற பகுதியைப் படித்து உள்ளீர்களா? படித்து அதன்மூலம் என்ன தெரிந்து கொண்டீர்கள் என்ற வினாவைக் கேட்டு அதற்கான பதிலைப் பெற்று
ஆர்வமூட்டச் செய்தல்.
கற்பித்தல் செயல்பாடுகள்
செயல்பாடு:1
நாம் கூற விரும்பும் கருத்தினைச் சுவை படவும் பிறர் எளிதாகப் புரிந்து கொள்ளவும் பத்தி அமைத்து எழுதுதல் இன்றியமையாதது. பற்பல கருத்துகள் அடங்கிய ஒரு செய்தியைப் பற்றி எழுதும் பொழுது அதனை பத்தியாக்கி எழுதினால் அதிலுள்ள கருத்துகளை எளிதில் புரிந்து கொள்ளலாம்.
அதேபோல் கருத்துப்படம் ஒன்றைக் கொடுத்து அதனைப் பத்தியாக எழுதச் சொல்வதினால் அதிலுள்ள கருத்துகள் எளிதில் புரியும்.
கருத்துப்படம்:
பொருள் இலக்கணம்
அகப்பொருள் புறப்பொருள்
முதற்பொருள்
கருப்பொருள்
உரிப்பொருள்
நிலம்
பொழுது
சிறுபொழுது
பெரும் பொழுது
தமிழ்மொழியின் இலக்கணம் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என ஐந்து வகைப்படும். அவற்றுள் பொருள் இலக்கணமானது அகப்பொருள், புறப்பொருள் என இருவகைப்படும். அகப்பொருளை, முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என்று மூன்று வகையாகப் பிரிப்பர். அதனுள் முதற்பொருள்
நிலமும் பொழுதுமாகும். பொழுதானது சிறுபொழுது, பெரும்பொழுது என்று இருவகைப்படும்.
இவ்வாறு கொடுக்கப்பட்ட கருத்துப் படத்தைச் பத்தியாக எழுத வேண்டும்.
செயல்பாடு: 2
தொடரில் உள்ள சொற்களைப் பிரித்தும் சேர்த்தும் எழுதும்போது வெவ்வேறு பொருளைத் தருகின்றன. அதனால் இடத்திற்கு ஏற்ப அச்சொற்களைப் பிரித்தும், சேர்த்தும் தொடர் அமைப்பதினால்
அதிலுள்ள கருத்துகள் எளிதாகப் புரியும்.
எடுத்துக்காட்டு:
1. கால்நடை- கால்நடைகளை மேய்ச்சல் நிலத்திற்கு ஓட்டிக்கொண்டு போனார்கள்.
சிறிய தொலைவைக் கடக்க கால் நடையாகச் செல்வது உடலுக்கு நலம் பயக்கும்.
2. பிண்ணாக்கு- கடலைப் பிண்ணாக்குக் கால்நடைக்குத் தீவனமாகப் பயன்படும்.
பாம்பு தன் பிண்ணாக்கை (பிள் நாக்கு) வெளியே நீட்டியது.
3. எட்டுவரை- அவன் எட்டுவரை தெளிவாக எழுதினான்.
தன் நிலத்தில் எட்டுவரை (எள் துவரை) விதைத்தான்.
4. அறிவில்லாதவன்- அறிவு இல்லாதவனுக்கு எதையும் பலமுறை சொன்னால்தான் புரியும்.
ஆசிரியர் கந்தனைப் பார்த்து "நீ அறிவில் ஆதவன்" என்று கூறிப் புகழ்ந்தார்.
5. தங்கை - தங்கை தன் அண்ணனைப் போற்றிப் பேசினாள்.
பண்புடையோர் தங்கையே (தம் கையே) தமக்கு உதவி என வாழ்வர்.
6 . வைகை- மதுரையில் வைகை நதி பாய்கிறது.
மாணவர்களைப் பேசாமல் வாயில் வை கை என்று ஆசிரியர் கூறினார்.
7. நஞ்சிருக்கும்- வாழைப்பழம் நஞ்சிருக்கும்போது உண்ணக்கூடாது.
பாம்புக்குப் பல்லில் நஞ்சு இருக்கும்.
மாணவர் செயல்பாடு
* பலகை என்ற சொல்லைக் கரும்பலகையில் எழுதி அதனைச் சேர்த்தும் பிரித்தும் பொருள்
சொல்ல செய்தல்.
* கருத்துப்படம் வரைந்து பொருள் கூறச் செய்தல்.
***************** ********* ***************
மதிப்பீடு
1. செய்தித்தாள்களில் வந்துள்ள கருத்துப்படத்தைச் சேகரித்துப் பத்தியாக எழுதுக.
2. தாமரை, கோவில் - இச்சொற்களை பிரித்தும் சேர்த்தும் தொடரமைக்க.
தாமரை - தாமரை மலர் நமது தேசிய மலர்
தா மரை - ' தாவும் மான் ' கருத்தைக் கவரும்.
கோவில் - மீனாட்சி அம்மன் கோவில் மிகப் பழமையானது.
கோவில் - கோ இல் - ( மன்னனின் வசிப்பிடம் ) ' கோ ' ' இல் ' என்பது அரண்மனை ஆகும்.
***************** ************ ***********
0 Comments