12 ஆம் வகுப்பு - தமிழ்
புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்
செயல்பாடு - 17
பழமொழி- வாழ்க்கை நிகழ்வு
கற்றல் விளைவுகள்
* பழமொழி நம் தமிழ் மரபோடு ஒன்றிணைந்தது என்பதை அறிதல்.
* பழமொழி அனுபவத்துடன் அறிவுரையும் உணர்த்துகிறது என்பதை உணர்தல்.
* ஒவ்வொரு பழமொழியின் சிறப்பைப் படித்து அதன் உண்மைப் பொருளை அறிதல்.
ஆசிரியர் செயல்பாடு
ஆர்வமுட்டல்
மாணவர்களே! உங்களுக்குத் தெரிந்த பழமொழி ஏதாவது ஒன்றைக் கூறி அதற்குரிய விளக்கம் சொல்லவும் எனக்கூறி மாணவர்களுடன் கலந்துரையாடி ஆர்வமூட்டல்.
கற்பித்தல் செயல்பாடுகள்
செயல்பாடு:1
கிராமப் புறங்களில் ஒரு சில செய்கையைக் குறிக்கவும், அதன் மூலம் கருத்துச் சொல்லவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நம் முன்னோர்கள் பழமொழிகளைச் சொல்லி வந்தனர் . பழமொழி என்பது ஒரு செயலுக்கு விளக்கம் தரவும், அனுபவத்துடன் சேர்ந்து அறிவுரை தரவும் சொல்லப்படுகிறது. ஆனால் தற்பொழுது பல பழமொழிகளுக்கு அதற்குரிய பொருள் சொல்லப்படாமல் நாளடைவில் மருவி வேறு ஏதோ பொருள் சொல்லப்படுகிறது.
சான்று: புண்பட்ட மனதை புகை விட்டு ஆத்து.
உண்மைப் பொருள்: புண்பட்ட மனதை புக விட்டு ஆற்று.
மனம் புண்பட்டு இருக்கும் போது தமக்குப் பிடித்த வேறு ஒரு செயலில் மனதைப் புக விட்டு ஆற்றிக்கொள்ள வேண்டும் என்பதே சரி.
செயல்பாடு: 2
பழமொழி எவ்வாறு வாழ்க்கை நிகழ்வோடு பொருந்துகிறது என்பதை ஒரு சில எழுத்துக்காட்டு மூலம் விளக்குதல்.
சான்று "தன் கையே தனக்கு உதவி"
பழமொழி விளக்கம்:
ஒரு பணியைச் செய்வதற்குப் பிறரை நம்பாமல் தன்னை மட்டுமே நம்புவது சிறப்பு.
வாழ்க்கை நிகழ்வு :
செல்வம், இராமு இருவரும் மிக நெருங்கிய நண்பர்கள். செல்வம் பல வேலைகளை இராமுவுக்காகச் செய்து தந்திருக்கிறான். இராமுவும் அவனாலான பல உதவிகளைச் செய்துள்ளான். ஒருநாள் செல்வத்திடம் அவன் அண்ணன் என்னுடைய கல்லூரி தேர்வுக் கட்டணத்தைச் செலுத்த இன்றே கடைசி நாள்; கொஞ்சம் கட்டணத்தைச் செலுத்தி விடு; எனக்குப் படிக்க நிறைய உள்ளது என்று கூறிச் சென்றுவிட்டான் . செல்வம், இராமுவின் வீட்டிற்கு அருகில் தானே வங்கி உள்ளது எனக்காக இராமு பணத்தைக் கட்டி விடுவான் என எண்ணி அவனிடம் பணத்தைக் கொடுத்து விட்டு விளையாடச் சென்று விட்டான். அன்று வங்கியில் கூட்டம் அதிகம் என்று கூறி பணத்தைக் கட்டவில்லை. மறுநாள் பணம் கட்டியதால் தேர்வு எழுதும் வாய்ப்பைச் செல்வத்தின் அண்ணன் இழந்து விட்டான், செல்வத்தின் கவனக்குறைவால் அவன் அண்ணன் பாதிக்கப்பட்டான், இராமுவை நம்பாமல் செல்வம் அவன் வேலையை அவனே செய்திருந்தால் அவன் அண்ணன் தேர்வு எழுதியிருப்பான்
"தன் கையே தனக்குதவி"
மாணவர் செயல்பாடு
* ஆசிரியர் ஒவ்வொரு மாணவரையும் ஒரு பழமொழியைக் கரும்பலகையில் எழுதச் சொல்லுதல்.
************** *************** ***********
மதிப்பீடு
1. 'வாய்மையே வெல்லும்' என்ற பழமொழிக்கு ஏற்ப வாழ்க்கை நிகழ்வு எழுதுக ?
பள்ளிக்குத் தாமதமாக வந்த முருகனை , தலைமையாசிரியர் , ஏன் தாமதமாக வந்தாய் ? எனக் கடிந்து கொண்ட போது , தான் பள்ளிக்கு வரும் வழியில் நிகழ்ந்த விபத்து ஒன்றில் காயம்பட்டவர்களுக்கு உதவி செய்து , பின் பள்ளிக்கு வந்ததால் காலதாமதம் ஏற்பட்டது ஐயா என்று உண்மையைக் கூறியதால் அவனைத் தலைமையாசிரியர் பாராட்டியதோடு ' வாய்மையே வெல்லும் ' என்ற பழமொழிக்கு நீ எடுத்துக் காட்டாக இருக்கிறாய் என்றும் தட்டிக் கொடுத்தார்.
2. உனக்கு மிகவும் பிடித்த பழமொழிகள் ஐந்தினை எழுதுக?
0 Comments