12 ஆம் வகுப்பு - தமிழ்
புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்
செயல்பாடு - 16
பேச்சு வழக்கை எழுத்து வழக்காக மாற்றுதல்
கற்றல் விளைவுகள்
* பேச்சுமொழி என்றால் என்ன என்பதை அறிதல்.
* எழுத்து மொழி என்றால் என்ன என்பதை அறிதல்.
* பேச்சு வழக்கை எழுத்து வழக்காக மாற்றும் திறன் பெறுதல்.
* எழுத்து மொழி மூலம் மொழி எப்படி வளர்ச்சி அடைந்தது என்பதை அறிதல்.
ஆசிரியர் செயல்பாடு
ஆர்வமூட்டல்
மாணவர்களிடம், "நாம் காலத்துக்கு ஏத்த மாறி நம்ம அறிவ வளத்துக்கணும்' என்ற பேச்சு வழக்குச் சொற்றொடரை எழுத்து வழக்காக மாற்ற வேண்டும் என்று கூறி "நாம் காலத்திற்கு ஏற்றாற்போல் நம் அறிவையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்" என்ற பதிலையும் கூறி மாணவர்களை ஆர்வமூட்ட வேண்டும்.
கற்பித்தல் செயல்பாடுகள்
செயல்பாடு:1
பேச்சுமொழி :
வாயினால் பேசப்பட்டுப் பிறரால் கேட்டு உணரப்படுவது பேச்சுமொழியாகும். இவ்வாறு பேசுவதும் கேட்பதும் மொழியின் முதல்நிலை. மொழியின் உயிர்நாடியாக விளங்குவது பேச்சுமொழியே என்பர். பேசப்படும் சொற்கள் மட்டுமின்றிப் பேசுபவரின் உடல்மொழி, ஒலிப்பதில் ஏற்ற இறக்கம் ஆகியனவும் பேச்சுமொழியின் சிறப்புக் கூறுகளாகும். பேச்சுமொழி உலக வழக்கு என்பர்.
பேச்சுமொழி என்பது இயல்பாக உருவாகும் மொழி வடிவமாகும். இது எழுத்து மொழியில் இருந்து வேறுபட்டது. எந்தவொரு சமூகத்திலும் பேச்சு மொழியே காலத்தால் முற்பட்டது. பல வளர்ச்சியடைந்த மொழிகளில் இன்னும் பேச்சு வழக்கு மட்டுமே உள்ளதைக் காணலாம்.
பேச்சுமொழி இடத்திற்கு இடம் மற்றும் வாழும் சூழலுக்கு ஏற்ப மாறுபடும். இவ்வாறு மாறுபடும் ஒரே மொழியின் வெவ்வேறு வடிவங்களை வட்டார மொழி என்பர். பேச்சுமொழிக்கும் எழுத்து மொழிக்கும் இடையில் உள்ள உறவு சிக்கலானது. பேச்சுமொழி கிளைமொழிகளாக இன்றளவும் நடைமுறையில் வழக்கில் உள்ளது.
எழுத்து மொழி :
கண்ணால்கண்டு உணருமாறு வரிவடிவமாக எழுதப்பட்டுப்படிக்கப்படுவது எழுத்துமொழியாகும். இவ்வாறு எழுதப்படுவதும் படிக்கப்படுவதும் மொழியின் இரண்டாம் நிலை. பேச்சு மொழிக்கு நாம் தந்த வரிவடிவமே எழுத்து மொழி. ஒரு மொழியானது நீண்ட காலம் நிலை பெறுவதற்கு எழுத்து வடிவம் இன்றியமையாதது. எழுத்து மொழி இலக்கிய வழக்கு என்பர்.
0 Comments