12 ஆம் வகுப்பு - தமிழ் - புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் - 15 , உவமைத்தொடரைச் சொற்றொடரில் அமைத்து எழுதுக.- வினா & விடை / 12th TAMIL - REFRESHER COURSE MODULE - 15 , QUESTION & ANSWER

 

12 ஆம் வகுப்பு - தமிழ் 

புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்

செயல்பாடு - 15

உவமைத் தொடரைச்

சொற்றொடரில் அமைத்தல்

கற்றல் விளைவுகள்

*  உவமைத்தொடர் பற்றி அறிதல்.

*  உவமைத்தொடர் உணர்த்தும் பொருளை அறிந்து கொள்ளுதல்.

* உவமைத்தொடரைச் சொற்றொடரில் அமைத்து எழுதுதல்.

ஆசிரியர் செயல்பாடு

ஆர்வமூட்டல்

     மாணவர்களே! பாடத்தைப் படிக்கும்போது, ஆழமாகப் படிக்க வேண்டும் 'நுனிப்புல் மேய்ந்தாற் போல' படிக்கக்கூடாது. "நுனிப்புல் மேய்ந்தாற் போல" என்ற உவமைத் தொடருக்குப் பொருள் என்ன? என்று மாணவர்களிடம் கேள்வி கேட்டுப் பதிலைக் கூறச் செய்து ஆர்வமூட்டல்.

கற்பித்தல் செயல்பாடுகள்

செயல்பாடு: 1

      நன்கு தெரிந்த ஒரு பொருளின் இயல்பை கூறி, தெரியாத ஒரு பொருளின் இயல்பை விளக்குவது உவமையணி அத்தகைய உவமையை உள்ளடக்கிய தொடரே உவமைத் தொடராகும்.

               ' போல' என்ற உவம உருபு வெளிப்படையாக வரும். இவ்வுவமைத் தொடர்கள் வாக்கியங்களை அழகாக்குவதற்கும், கருத்துகளை ஆணித்தரமாக விளக்குவதற்கும் உதவுகின்றன.

                ஒரு செய்தியைத் தெளிவாகவும், செறிவாகவும், உணர்ச்சிமயமாகவும் தெரிவிக்க உவமைத் தொடர் பயன்படுகிறது.

எடுத்துக்காட்டு : 'அனலிற் பட்ட மெழுகு போல'

செயல்பாடு: 2

        உவமைத் தொடரில் அமையக்கூடிய உவமைகளை மூன்று வகையாகக் கூறலாம். அவை,

1. பண்பு உவமை

2. தொழில் உவமை

3. பயன் உவமை

பண்பு உவமை :

            ஒரு பொருளின் வடிவம், நிறம், சுவை, அளவு ஆகியவை அப்பொருளின் 'பண்பு' எனப்படும். இப்பண்புகள் காரணமாக அமைவது பண்பு உவமையாகும்.

சான்று:

பச்சைக் கம்பளம் விரித்தார் போல (நிறம்)

பொருள் : பசுமை

வாக்கியம் : கிராமங்களில் வயல்வெளி பார்ப்பதற்குப் பச்சைக் கம்பளம் விரித்தார் போல் இருக்கும்.


தொழில் உவமை :

      ஒரு பொருளின் தொழில் அல்லது செயல் காரணமாக அமையும் உவமை 'தொழில் உவமை'  எனப்படும்.

சான்று:

பசுத்தோல் போர்த்திய புலி

பொருள்: நல்லவன் போல் நடித்தல்.


பயன் உவமை:

         ஒரு பொருளால் கிடைக்கும் பயன் காரணமாக அமையும் உவமை பயன் உவமை எனப்படும்.

சான்று சூரியனைக் கண்ட பனிபோல
பொருள் : பெருந்துன்பம் நீங்குதல்.

செயல்பாடு: 3

சான்று :

இலைமறை காய் போல - ஆற்றல் வெளிப்படாமல் இருத்தல்.

அத்தி பூத்தாற் போல - அரிதாக

நகமும் சதையும் போல - ஒட்டி உறவாக இருத்தல்

இலவு காத்த கிளி போல - காத்திருந்து ஏமாறுதல்.

செயல்பாடு: 4

    உவமைத்தொடரைச் சொற்றொடரில் அமைத்து எழுதுவதைச் சில எடுத்துக்காட்டுகள் மூலம் காணலாம்.

* அடியற்ற மரம் போல

பொருள் : அடியற்ற - வேரில்லாத

பயன்பாடு: பெரும் துன்பம்

வாக்கியம் : கணவன் இறந்த செய்தி கேட்ட கண்ணகி அடியற்ற மரம் போலச் சாய்ந்தாள்

பொருள் : இலைமறை - இலையின் மறைவில்

பயன்பாடு : மறைமுகமாக

வாக்கியம் : திரைப்படத்தில் ஒரு சில மர்மங்களை இயக்குனர் இலைமறை காய் போலக் காட்டியிருந்தார்.

மாணவர் செயல்பாடு

* ஆசிரியர் ஏதேனும் ஒரு நிகழ்ச்சியைக் கூறி, ஒவ்வொரு மாணவரையும் எழுப்பி, அந்நிகழ்ச்சிக்கு உவமையைக் கூறச் சொல்லுதல்.

***************    ***********   ***************

                          மதிப்பீடு

1. உவமைத்தொடர் என்பது யாது?

      நன்கு தெரிந்த ஒரு பொருளின் இயல்பை கூறி, தெரியாத ஒரு பொருளின் இயல்பை விளக்குவது உவமையணி அத்தகைய உவமையை உள்ளடக்கிய தொடரே உவமைத் தொடராகும்.


2. உவமைத்தொடரின் பயன் யாது ?

           ஒரு செய்தியைத் தெளிவாகவும், செறிவாகவும், உணர்ச்சிமயமாகவும் தெரிவிக்க உவமைத் தொடர் பயன்படுகிறது


3. கீழ்க்காணும் உவமைத்தொடரை வாக்கியத்தில் அமைத்து எழுதுக.


அ) இலவு காத்த கிளி போல.

          இலவு காத்த கிளி போல  தண்ணீர்க் குடங்களுடன் மக்கள் காத்திருந்தனர்.


ஆ) சித்திரப்பதுமை போல

       மணப்பெண் சித்திரப் பதுமை போல இருந்தாள்.


இ) தாமரை இலை நீர் போல

     இவ்வுலக வாழ்வானது தாமரை இலை நீர் போல் பற்றற்றதாக இருத்தல் வேண்டும்.

******************    *********    *************

Post a Comment

0 Comments