12 ஆம் வகுப்பு - தமிழ்
புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்
செயல்பாடு - 11
மயங்கொலிச் சொற்களைத் தொடராக்குதல்
கற்றல் விளைவுகள்
* மயங்கொலிச் சொற்கள் என்றால் என்ன என்பதைத் தெரிந்து கொள்ளுதல்.
* உச்சரிப்பு முறைகள் பற்றி அறிதல்.
* தமிழில் உள்ள மயங்கொலிச் சொற்களைப் பற்றி அறிந்து கொள்ளுதல்.
* மயங்கொலிச் சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுதல்.
ஆசிரியர் செயல்பாடு
ஆர்வமூட்டல்
மாணவர்களே! 'இன்று மழை பெய்ததால் மைதானத்தில், மண் அரிப்பு ஏற்பட்டு மலை போல் ஓரிடத்தில் குவிந்துள்ளது ' பார்த்தீர்களா?' என்று கேட்டு மழை, மலை ஆகிய இரண்டு மயங்கொலிச் சொற்களுக்குப் பொருள் என்ன என்று மாணவர்களிடம் பதிலை வரவழைத்து ஆர்வமூட்டுதல்.
கற்பித்தல் செயல்பாடுகள்
செயல்பாடு:1
மயங்கொலிச் சொற்கள் என்பன தமிழில் ஏறத்தாழ ஒரே ஒலிப்பினைக் கொண்டதாகவும், முற்றிலும் வேறுபட்ட பொருள் கொண்டவைகளாகவும் காணப்படும்.
இவ்வகையான சொற்கள் ஒலிப்பின் போது நுண்ணிய வேறுபாடுகளை மட்டுமே கொண்டிருப்பதால் எது சரி, எது தவறு என மயங்க வைப்பவைகளாக இருக்கும். அதனாலேயே இவை மயங்கொலிச் சொற்கள் என்று அழைக்கப்படுகின்றன.
மயங்கொலி எழுத்துகளாக ண, ன, ந, ல, ள, ழ, ர, ற ஆகிய எட்டு எழுத்துகளைக் கூறுவர். இந்த எழுத்துகளை உச்சரிக்கக் கூடிய முறைகளை மூன்று வகையாகக் கூறலாம். அவை.
1. ண -ந -ன ஒலிப்புமுறை
2. ல -ழ -ள ஒலிப்புமுறை
3. ர-ற ஒலிப்புமுறை
செயல்பாடு: 2
உச்சரிப்பு முறைகள்
. ண -ந -ன ஒலிப்பு முறை:
'ண ' என்ற எழுத்தை 'டண்ணகரம்' என அழைக்கிறோம். இவ்வெழுத்தை ஒலிக்கும்போது, நாக்கு மேலண்ணத்தின் அடிப்பகுதியைத் தொட்டு ஒலிக்க வேண்டும். 'டகரமும்' 'ணகரமும் ' ஒரே இடத்தில் நாக்கைத் தொட்டு உச்சரிப்பதால் ஒலிக்கப்படுகின்றன.
' ந ' என்ற எழுத்தை 'தந்நகரம் என அழைக்கிறோம். இவ்வெழுத்தை ஒலிக்கும்போது அண்பல்லைத் தொட்டு ஒலிக்க வேண்டும். 'தகரமும்' 'நகரமும்' ஒரே இடத்தில் நாக்கைத் தொட்டு
உச்சரிப்பதால் ஒலிக்கப்படுகின்றன.
'ன' என்ற எழுத்தை 'றன்னகரம் ' என அழைக்கிறோம். இவ்வெழுத்தை ஒலிக்கும்போது நாக்கு மேலண்ணத்தின் நடுப்பகுதியைத் தொட்டு உச்சரிப்பதால் ஒலிக்கப்படுகின்றது.
'றகரமும்' 'னகரமும்' ஒரே இடத்தில் நாக்கைத் தொட்டு உச்சரிப்பதால் ஒலிக்கப்படுகின்றன.
ல -ழ -ள ஒலிப்பு முறை:
'ல' என்ற எழுத்தை மேல்நோக்கிய 'லகரம்' என அழைக்கிறோம். இவ்வெழுத்தை ஒலிக்கும்போது நுனிநாக்கு முன்பல் வரிசைக்கு மேல் உள்ள அண்ணத்தைத் தொட்டு ஒலிக்க வேண்டும்.
'ள' என்ற எழுத்தைக் கீழ்நோக்கிய 'ளகரம்' என அழைக்கிறோம். இவ்வெழுத்தை ஒலிக்கும்போது நாக்கு மேலண்ணத்தின் மையப்பகுதியைத் தொட்டு ஒலிக்க வேண்டும்.
'ழ' என்ற எழுத்தை சிறப்பு 'ழகரம்' என அழைக்கிறோம். இவ்வெழுத்தை ஒலிக்கும்போது, நாக்கு மேலண்ணத்தின் அடிப்பகுதியைத் தொட்டு ஒலிக்க வேண்டும்.
ர-ற ஒலிப்பு முறை
'ர' என்ற எழுத்தை இடையின 'ரகரம்' என அழைக்கிறோம். இவ்வெழுத்தை ஒலிக்கும் போது நாக்கு மேலண்ணத்தைத் தொட்டு வருடுமாறு ஒலிக்க வேண்டும்.
'ற' என்ற எழுத்தை வல்லின 'றகரம்' என அழைக்கிறோம். இவ்வெழுத்தை ஒலிக்கும்போது நாக்கு மேலண்ணத்தின் மையப்பகுதியை உரசுமாறு ஒலிக்க வேண்டும்.
செயல்பாடு: 3
மயங்கொலிச் சொற்களில் எழுத்துகளை மாற்றி எழுதினால் பொருள் மாறுபடும் என்பதனை, கரும்பலகையில் பல்வேறு சொற்களை எழுதி பொருள் கூறி வேறுபடுத்திக் காட்டுதல்.
தமிழில் உள்ள மயங்கொலிச் சொற்களில் ஒரு சில சொற்கள் கீழே கொடுக்கப் பட்டுள்ளன.
ண, ன - பொருள் வேறுபாடு
அணல் - தாடி, கழுத்து
அனல் - நெருப்பு,
ஊண் - உணவு
ஊன் - மாமிசம்
காண் - பார்
கான் - காடு, வனம்
திணை - ஒழுக்கம், குலம்
தினை - தானியம், ஒருவகை புன்செய் பயிர்
ல, ழ, ள - பொருள் வேறுபாடு
அலகு - பறவையின் மூக்கு, அளவு, ஆண் பனை
அழகு - வனப்பு
அளகு - சேவல்
ர,ற - பொருள் வேறுபாடு
அரம் - ஒரு கருவி
இரத்தல் - யாசித்தல்
ஏரி - நீர்நிலை, குளம்
அறம் - தருமம், நீதி, கற்பு,கடமை, புண்ணியம்
இறத்தல் - இறந்து போதல், சாதல்
ஏறி - உயர்ந்த, மேலே ஏறி
செயல்பாடு: 4
மயங்கொலிச் சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுவதைப் பற்றி சில எடுத்துக்காட்டுகள் மூலம் காணலாம்.
சான்று:
அளகின் அலகு அழகாக உள்ளது.
ஏரியில் நீர்மட்டம் ஏறி உள்ளது.
பனியில் பணி செய்வது கடினமாக உள்ளது.
இவ்வாறு மயங்கொலிச் சொற்கள், உச்சரிப்பு முறை, பொருள் வேறுபாடு, மயங்கொலிச் சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுதல் ஆகியவற்றைக் கரும்பலகையின் உதவியுடன்
மாணவர்களுக்குத் தெளிவுப்படுத்த வேண்டும்.
மாணவர் செயல்பாடு
* கரும்பலகையில் மயங்கொலிச் சொற்களை எழுதி, ஒவ்வொரு மாணவனையும் எழுப்பி,
பிழையின்றி படிக்கச் சொல்லுதல்.
* மயங்கொலிச் சொற்களைத் தொடராக அமைத்து கரும்பலகையில் எழுதச் சொல்லுதல்.
***************** ********** **************
மதிப்பீடு
1. அரம், அறம் - பொருள் வேறுபாடு தருக.
அரம் - ஒரு கருவி - இரும்பைத் தேய்த்துக் கூராக்க அரம் உதவுகிறது.
அறம் - தருமம் - கருணை நிறைந்தவர் அறம் செய்கின்றார்.
2. மயங்கொலி எழுத்துகள் எத்தனை? அவை யாவை?
மயங்கொலி எழுத்துகள் எட்டு.
அவை ,
ண , ன , ந , ல , ள , ழ , ர , ற
3. தலை, தளை,தழை - மயங்கொலிச் சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக.
தலை - முதன்மை , சிரசு
எண்சாண் உடம்பிற்குத் தலையே பிரதானம்.
தளை - கட்டு
சுதந்திரப் போராட்டம் , அடிமைத்தளையைச் சிதைத்தது.
தழை - புல் , இலை
தழையை , விவசாயத்தில் இயற்கை உரமாகப் பயன்படுத்துவர்.
4. ண, ன - கர மயங்கொலி எழுத்துக்களில் ஏதேனும் இரண்டு சொற்களை எழுதி பொருள் தருக.
ஊண் - உணவு
மிகு ஊண் , உடலுக்கு நோய் செய்யும்.
ஊன் - இறைச்சி
ஊன் உண்டு , ஊன் வளர்த்தல் பாவம் என்கிறார் மகாவீரர்.
*************** ************* *************
0 Comments