மகாகவி பாரதியார் நினைவு தினம்
11 • 9 • 2022
" அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே... என வீரமுழக்கம் இட்டவர் , அச்சமின்றி, கலக்கமின்றி, தைரிய வீரனாக , காலனை எதிர் கொண்டு அமைதிப் பயணமாக, தன் இறுதிப் பயணத்தால் இந்திய இதயங்களை இடியென தகர்த்த நாள் இதுதானோ..!
பாரதி... மகாகவி , தேசியக்கவி, விடுதலைக் கவி , புதுமைக் கவி, பாட்டுக் கொரு புலவன் , சக்திதாசன், ஷெல்லி தாசன் , மீசைக் கவிஞன் , முண்டாசுக் கவிஞன்... , கவிஞர் , எழுத்தாளர், ஆசிரியர் , பத்திரிக்கை ஆசிரியர் விடுதலைப் போராட்ட வீரர் , சமூக சீர்திருத்த வாதி... என எத்தனை எத்தனை பரிமாணங்கள் இவர் கண்டது..!
சுப்பையா என்ற சுப்பிரமணியன் 11 • 12 • 1882 -ஆம் ஆண்டு சின்னசாமி ஐயர் - லக்குமி அம்மாள் அவர்களின் மகனாக , எட்டையபுர ஏந்தலாக அவதரித்தார்.
இளவயதிலேயே கவிபாடும் திறன் பெற்றதால் தமது பதினோராம் வயதில் " பாரதி " எனும் பட்டத்தை எட்டையபர மன்னரால் பெற்றார்.
தாய் மொழி தன்னில் தனிப்பெரும் பற்றுக் கொண்டு தமிழின் உயர்விற்கு வளஞ்சேர்க்கும் இலக்கியங்கள் பல படைத்தார். இவற்றில் கண்ணன் பாட்டு , குயில் பாட்டு , பாஞ்சாலி சபதம் போன்றவை சிறப்புப் பெற்றவை.
மேலும் ஞானரதம், சந்திரிகையின் கதை , தராசு போன்றவையும் சிறந்த பயனுள்ள படைப்புகள் .
ஆங்கிலேய ஆட்சியில் அடிமைப் பட்டுக் கிடந்த மக்களை , தன் பாட்டுத் திறந்தால் கட்டியிழுத்தும், தட்டியெழுப்பியும் விடுதலை உணர்வை ஊட்டி, காட்டுத் தீயென களம் காணச் செய்தார். தானும் சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றார் . மூடப்பழக்க வழக்கங்களை ஒழித்து சாதி பேதங்களற்ற சமுதாயம் காண விழைந்தார். பெண் விடுதலைக்கு ஊக்கம் தந்து மேன்மைக்கு பாடுபட்டார் .
படிப்பும் , பதவியும்
1898 - ஆம் ஆண்டிலிருந்து 1902 - வரையிலான காலகட்டத்தில் காசியில் அத்தை வீட்டில் வசித்து , அங்குள்ள " காசி இந்துக் கல்லூரியில் மெட்ரிகுலேசன் தேர்வில் தேர்ச்சி பெற்றார். பின்னர் அலகாபாத் சர்வகலாசாலையில் வடமொழி , இந்தியிலும் தேர்ச்சி பெற்றார்.
மீண்டும் எட்டையபுரத்து மன்னர் அழைப்பின் காரணமாக எட்டையபுரம் வந்து அரசவைக் கவிஞராக அவையை அலங்கரித்தார்.
ஆசிரியராக...
மதுரையில் 1904 - ஆண்டு சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரிந்தார் . அப்போது இவருடைய பாடல் " விவேகபானு " இதழில் வெளியானது.பின்னர் சுதேசி மித்திரன் நாளிதழில் துணையாசிரிராகப் பொறுப்பேற்றார். "இந்தியா " என்னும் வாரப் பத்திரிக்கையில் 1907 - ஆம் ஆண்டு ஆசிரியராகப் பொறுப்பேற்றார். இவைமட்டுமின்றி The Young India என்ற ஆங்கில இதழையும் பொறுப்பேற்று நடத்தினார். மேலும் 1908 - ஆம் ஆண்டு தமது முதல் நுலான" ஸ்வேத கீதங்கள் " என்ற நூலை வெளியிட்டார்.
" இந்தியா" பத்திரிக்கையின் மூலம் வீர உணர்ச்சி மிகுந்த பாடல்களை எழுதி விடுதலைப் போராட்டத்திற்கு வித்திட்டார். இதன் காரணமாக ஆங்கிலேய அரசு தேடியதன் விளைவாகப் புதுச்சேரி சென்றார்.
தலைவர்கள் நட்பும் , தொடர்பும்
1905 - ஆம் ஆண்டு வ.உ.சி. அவர்களின் நட்பு கிடைக்கப் பெற்றார். பின்பு கொல்கத்தாவில் " தாதாபாய் நெளரோஜி " தலைமையிலான காங்கிரஸ் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
விவேகானந்தரின் சீடரான நிவேதா என்பவரை சந்தித்து அவரையே தமது குருவாக ஏற்றார். பாலகங்காதர திலகர் அவர்களை தனது அரசியல் குருவாக ஏற்றார்.
1918 - ஆம் ஆண்டு விடுதலைப் போராட்டத் தில் ஈடுபட்டதால் கைதுசெய்யப் பட்டு பின் விடுதலையடைநதார். அதன் பிறகு யாவரிடத்தும் உதவி கிடைக்காமல் வறுமையான நிலைகண்டு துன்பம் பல அடைந்தார். அதன் காரணமாக சுதேசிமித்திரனில் துணையாசிரியராகப் பணியாற்றினார்.
1921 - ஆம் ஆண்டு திருவல்லிக்கேணி யில் நோய்வாய்ப் பட்டு பின் செப்டம்பர் 11 - 9 - 1921 அன்று தமது 39 - ஆம் வயதில் விண்ணுலகப் பதவியடைந்தார்.
நினைவாகச் சில சின்னங்கள்
1948 - ஆம் ஆண்டு எட்டயபுரத்தில் " மணிமண்டபம் " எழுப்பப்பட்டது.
1960 - ஆம் ஆண்டு பாரதி யின் உருவம் கொண்ட அஞ்சல் தலை இந்திய அரசால் வெளியிடப்பட்ட து.
1982 - ஆம் ஆண்டு பாரதியாரின் நூற்றாண்டு விழா கொண்டாடப் பட்டது.
சிலை அமைப்பு
11 • 9 • 1999 - அன்று எட்டயபுரத்தில் மணிமண்டப மும் , பாரதியாரின் திருவுருவச் சிலையும் அமைக்கப்பட்டு சிறப்பிக்கப் பட்டது . அன்றைய பஞ்சாப் மாநில முதல்வரான " தர்பாரா சிங் " அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
" பகைவனுக் கருள்வாய் -- நன்நெஞ்சே
பகைவனுக் கருள்வாய் . _____ என பகைவர்க்கும்
நன்மையையே தர விழைந்த மகாகவி , சுற்றத்தின் பகையால் பாதிக்கப்பட்டு, நோயால் தாக்கப்பட்டு , மண்ணுலக வாழ்வு தனை விடுத்து , ஆற்றவொண்ணா துயரம் கண்டாலும் , என்றும் அழியாத புகழாக , கவிதையாக , கதையாக ,காவியமாக, சமூக முன்னேற்றத்திற்கு உறுதுணையாக உலக சுழற்சியுடனே எக்காலத்துக்கும் நம்முடனே பயணிக்கிறார்.
அந்த வீரத்தமிழன் விரும்பிய பாதையை ஏற்றம்பெறச் செய்வது நாம் அவருக்கு ஆற்றும் நன்றிகள் ஆகும். தாய் மொழியையும் , தாய்நாட்டையும் போற்றியவரை நினைவுகளால் என்றும் வணங்குவோம் !
நினைவுகளுடன் ,
பைந்தமிழ் குழு / Greentamil.in
0 Comments