ஒன்பதாம் வகுப்பு - தமிழ்
புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்
செயல்பாடு - 11
தலைப்புக்கு ஏற்றவாறு பேசுதல்
கற்றல் விளைவு :
பல்வேறு வகையான தலைப்புகளில் கருத்துகளைத் திரட்டிப் பேசும் முறையறிந்து பேசுதல்
கற்பித்தல் செயல்பாடு:
மாணவர்களே! நாம் இன்றைய வகுப்பில் பேச்சின்கூறுகள் பற்றிப் பார்க்க இருக்கிறோம்.
பேச்சின்கூறுகள்
பேச்சின் முக்கூறுகள் எடுத்தல், தொடுத்தல், முடித்தல். எடுத்தல் என்பது தொடக்கம். தொடுத்தல் என்பது இடைப்பகுதி. முடித்தல் என்பது பேச்சின் முடிவு என்பனவாகும்.
பேச்சின் தொடக்கம்
பேச்சின் தொடக்கம் எப்போதும் எடுப்பாக இருக்கவேண்டும். முதலில் அவையில் உள்ள அனைவருக்கும் வணக்கம் கூறிப் பேச்சினைத் தொடங்குதல் வேண்டும். பேச்சின் தொடக்கம், நன்றாக இல்லாவிட்டால் கேட்பவர்களுக்குப் பேச்சு குறித்த நல்லெண்ணம் தோன்றாது. கேட்போரை வயப்படுத்தும் முறையில் பேச்சின் தொடக்கம் அமையவேண்டும்.
பேச்சின் இடைப்பகுதி
பேச்சின் இடைப்பகுதி, கொடுக்கப்பட்ட தலைப்பை ஒட்டி அமையவேண்டும். பேச்சின் இடையிடையே சுவைமிக்க சொற்களையும் குணமிக்க கருத்துகளையும் மேற்கோள்களையும் கொண்டு அமைதல் வேண்டும்.தலைப்பிற்கு ஏற்றவாறு கருத்துகளை வரிசைப்படுத்திப் பேசுதல் வேண்டும்.
பேச்சின் முடிவு
பேச்சின் முடிவே தனிச்சிறப்பையும் பெருமையையும் தேடிக்கொடுக்கும். பொருளின் சுருக்கத்தைக் கூறி முடித்தல், உணர்ச்சியைத்தூண்டும் முறையில் முடித்தல், பொருத்தமான கதை அல்லது கவிதையைக் கூறி முடித்தல் என முடித்தலில் பல முறைகள் உண்டு. இக்கூறுகள் அனைத்தையும் மனத்தில் வைத்துக் கொண்டு பேசினால் பேச்சானது சிறப்பாக அமையும்.
மேற்கண்ட கூறுகளை அடிப்படையாகக் கொண்டு ' உணவே மருந்து' என்னும் தலைப்பில் உங்களிடம் நான் பேசுகிறேன். அதனைப் புரிந்துகொண்டு நீங்களும் ஏதாவது ஒரு தலைப்பில் பேசவேண்டும்
உணவே மருந்து
அனைவருக்கும் வணக்கம். நான் உங்கள் முன்பு பேச எடுத்துக்கொண்ட தலைப்பு
உணவே மருந்து. மருந்து என்னும் சொல்லுக்குப் 'பரிகாரம்' என்பது பொருள். பரிகாரம் என்பது காத்தல், நீக்குதல் இரண்டையும்குறிக்கும். 'உணவே மருந்து' என்பதும் அப்படியே. நோய் வராமல் காப்பதும் உணவே. நோய் வந்தால் நீக்குவதும் உணவே. ஒவ்வொருவரும் தம் உடம்புக்குத் தகுந்த உணவை உட்கொள்ளவேண்டும். ஒருவன், முதலில் உண்ட உணவு செரித்ததை அறிந்துகொண்டு பிறகு உண்ணவேண்டும். பசி இல்லாமல் உணவை உட்கொண்டால் உடலில் பல்வேறு தீங்குகள் உண்டாகும். இதனையே திருவள்ளுவர்,
"மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்"
என்ற குறள் மூலம் அழகாக விளக்கியுள்ளார். காலையில் அரைவயிற்று உணவு, பகலில் வயிறு நிரம்பும் அளவு உணவு, இரவில் முக்கால் வயிற்று உணவு என அமைத்துக்கொள்ள வேண்டும். உணவின் அளவு எப்படி முதன்மையானதோ அதுபோல உணவு உட்கொள்ளும் நேரமும் முதன்மையானதாகும். காலை 7.30–8.00 மணி, மதியம் 12-1.00 மணி, இரவு 7.30-8.00 மணிக்குள் உண்ணுதல் நல்லது என்பது பொன்போல் போற்றத்தக்க அறிவுரை. நாம் வாழும் பகுதியின் தட்ப வெப்பநிலைக்கு ஏற்றவாறு உணவு உட்கொள்வதும் இன்றியமையாததே.
தூய காற்றும் நன்னீரும்
சுண்டப் பசித்தபின் உணவும்
நோயை ஓட்டி விடுமப்பா
நூறுவயதும் தருமப்பா
என்று கவிமணி அவர்கள் கூறுவதை மனத்தில் கொள்ளவேண்டும். எவ்வளவு
விழிப்பாக இருந்தாலும் உடல் மூப்புக் காரணமாகவும் சில பழக்கங்கள் காரணமாகவும் நோய் உண்டாவது இயல்பே. அந்த வகையில் நோய் ஏற்படும் போது உணவே நோய் நீக்கும் மருந்தாகவும் பயன்படும்.
காலை இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலை கடுக்காய் என்பது பழமொழி. பித்தத்துக்கு
ராஜா இஞ்சி என்பார்கள். பித்தம் மிகும்போது உணவில் இஞ்சி சேர்த்துக்கொண்டால்
பித்தம் குறையும். நாம் உண்ணும் உணவில் அதிக அளவு காரஉணவும் குறைந்த அளவு
அமில உணவும் எடுத்துக் கொள்ளவேண்டும். நோயாளிகள் நோய் நீங்கி நலம்பெற
உணவே மருந்து. நோயற்றவர் நலத்தோடு வாழவும் உணவே மருந்து என்று கூறலாம்.
"நோயற்ற வாழ்வு குறைவற்ற செல்வம்" என்பதை உணர்ந்து ' மருந்தே உணவு' என்ற
நிலை மாறி ' உணவே மருந்து' என்ற நிலைக்கு நாம் மாறினால் நோயின்றி நூறாண்டு வாழலாம். நன்றி!'
*************** ********** *************
மதிப்பீட்டுச் செயல்பாடு
1. அம்மா என்னும் தலைப்பில் இரண்டு நிமிடம் பேசுக; பேசுவதை எழுத்தாக அளிக்க.
அம்மா
அனைவருக்கும் அன்பு வணக்கம். அகரம் கற்றுத் தந்து என்னைச் சிகரத்தில் ஏற்றிய என் அம்மாவைப் பற்றித்தான் இன்று உங்களிடையே உரை நிகழ்த்த உள்ளேன்.
இந்தப் பூமிப்பந்தின் அச்சாக இருந்து செயல்படுபவள் அம்மா. தினமும் நான் கண் விழிக்கும் கடவுள் என் அம்மா. உலகில் தெய்வம் இருக்கிறதா ? இல்லையா ? என்று ஒருசாரார் ஓய்வின்றிப் பிதற்றிக் கொண்டிருக்கிறார்கள். உங்களைப் பெற்ற அன்னையே முழுமுதற் தெய்வம். அதனால்தான் திரைப்பாட்டாய் ,
அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை என்று ஒரு கவிஞன் படைத்தான்.
தாயிற்சிறந்த கோவிலுமில்லை
தந்தை சொல் மிக்க மந்திர மில்லை
ஆயிரம் உறவில் பெருமைகள் இல்லை
அன்னை தந்தையே அன்பின் எல்லை
என்ற பாடல் வரிகள் காதின் வழி இதயத்திற்குள் சென்று சில்லிடுகின்ற உணர்ச்சியினை நீங்கள் பெற்றவர்கள் என்றால் அம்மாவின் அருமை நமக்குப் புரியும்.
பத்து மாதம் சுமந்து பெற்று , நம்மை வளர்த்து ஆளாக்கி , கல்வி தந்து , தம் கடமை எல்லாம் செய்த அன்னையை , நண்பர்களே நாம் நெஞ்சில் சுமக்க வேண்டும்.
ஆசைப்பட்ட எல்லாத்தையும் வாங்கித்தரும் அம்மாவை முதுமையில் நாம் தாங்க வேண்டும். ஆலம் விழுதுகளாக நாம் மாற வேண்டும். இளமையில் எல்லாம் பெற்றுவிட்டு , முதுமையில் தாய் , தந்தையரை ஒரு மகன் ஒதுக்குகிறான் என்றால் அவன் இந்த உலகில் வாழத் தகுதியற்றவன். அம்மாவின் மனம் எப்போதும் ஒன்றுதான். பிள்ளைகளின் மனமே குரங்காக தாவிக் கொண்டிருக்கிறது. நீங்கள் மணம் முடித்துச் சென்றாலும் நம் மனம் அம்மாவின் அடிச்சுவட்டை நோக்கியே இருக்கட்டும் என்று சொல்லி
தந்தையையும் தாயையும் பேணிக்காப்போம்என்று கூறி மன நிறைவோடு என் உரையை நிறைவு செய்கின்றேன் . நன்றி. வணக்கம்.
***************** ********* *************
2. கொரோனா காலத்தில் நாம் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றி இரண்டு நிமிடம் பேசுக; பேசுவதை எழுத்தாக அளிக்க.
அனைவருக்கும் அன்பு வணக்கம். இது அறிவுயல் யுகம். தினம் தினம் எவ்வளவோ நிகழ்வுகள் நடக்கின்றன. அவற்றையெல்லாம் கடக்கின்றோம் சின்னச் சின்னச் சலனங்களுடன். ஆனால், இன்றைய உலகத்தின் ஓட்டமே இரண்டாண்டுகளாக இருட்டறைக்குள் இருக்கிறதே ! காரணம் என்ன நண்பர்களே !
ஆம் ! நீங்கள் சொல்வது சரிதான் ! கொரனா என்னும் கூற்றுவன் எருமை மீதல்ல ! இப்போது எல்லார் மேலயும் ஏறி வருகிறான். எண்ணிலாத் தொல்லைகளை நமக்குத் தருகிறான்.
உலகில் அவ்வப்போது பல்வேறான நோய்கள் தோன்றினாலும் அவை உலகம் முழுமையும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதில்லை. ஆனால் , இன்று உலகமே உறக்கமின்றி இருக்கிறதே ! காரணம் கொரனா என்னும் பெருந்தொற்று நோயால் . வருமுன் காப்பதுதான் சாலச்சிறந்தது என்பதை நாம் உணர வேண்டும்.
நம்மை நாம் காத்துக் கொள்வது எப்படி ? இதோ எனக்குத் தெரிந்த சில செய்திகளை உங்களிடம் பகிர்கிறேன்.
* அவசியமின்றி வீட்டை விட்டு வெளியில் உலவ வேண்டாம்.
* வெளியே செல்ல வேண்டிய நிலை என்றால் அவசியம் முகக்கவசம் அணிந்து செல்வேன் என உறுதி எடுங்கள்.
* சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும்.
* காய்ச்சல் , இருமல் , சுவையை உணரமுடியாமை போன்ற அறிகுறிகள் ஏற்படுமானால் உடனடியாக மருத்துவரிடம் சோதனை செய்தல்.
* தடுப்பூசி தற்போது 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு வழங்கப்படுகிறது. எனவே மறக்காமல் தடுப்பூசி போட்டுக் கொள்வது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வது என நாம் செய்து கொண்டால் கொரனா பெருந்தொற்றின் கோரப்பசிக்கு இரையாகாமல் நம் குடும்பத்தினருடன் குதுகலமாக நாம் வாழலாம் எனச்சொல்லி என் உரையை நிறைவு செய்கிறேன். நன்றி வணக்கம் .
**************** ********** *************
3. கொரோனா கால கதாநாயகர்கள் :
கொரோனா காலத்தில் துப்புரவுத் தொழிலாளர்கள், மருத்துவர்கள், காவலர்கள், செவிலியர்கள், தன்னார்வலர்கள் போன்றோரே நமக்குக் கதாநாயகர்களாகத் தெரிகிறார்கள். இவர்களில் ஒருவரைப் பற்றி இரண்டு நிமிடம் பேசுக.
மாணவர்கள் தம் மனங்கவர்ந்த ஒருவரைத் தேர்வு செய்து தம் சிந்தையில் உதித்த எண்ணங்களை எழுத்தாகப் படைக்கவும்.
*************** ************** ************
0 Comments