11 ஆம் வகுப்பு - தமிழ் - புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் - செயல்பாடு 7 - புணர்ச்சி விதிகள் - வினா & விடை / 11th TAMIL - REFRESHER COURSE MODULE - ACTIVITY 7 - QUESTION & ANSWER

 

11 ஆம் வகுப்பு - தமிழ்

புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்

செயல்பாடு - 7

புணர்ச்சி விதிகள்

கற்றல் விளைவுகள்

*  புணர்ச்சியைப் பற்றி அறிதல்.

*  புணர்ச்சி விதிகளைத் தெரிந்து கொள்ளுதல்.

* புணர்ச்சி விதிகளைப் பயன்படுத்தும் திறன் பெறுதல்.

ஆசிரியர் செயல்பாடு

ஆர்வமூட்டல் :

    ஒரே பொருளைக் குறிக்கும் ஒரு சொல்லை ஒரு சீராகவும் இரண்டு சீர்களாகவும் கூறுவேன். அவற்றுள் எது சரி? எது தவறு? எனக் கூறவும்.

1. நானென்று

2. நான் என்று

இரண்டுமே சரியென்றால் எப்படி? என்று வினவி ஆர்வமூட்டல்.

கற்பித்தல் செயல்பாடுகள்

செயல்பாடு :1

புணர்ச்சி- பொருள்:

நிலைமொழி ஈறும் வருமொழி முதலும் ஒன்று சேருவது புணர்ச்சி எனப்படும்.

சான்று:

தமிழகம் = தமிழ் + அகம்

நிலைமொழி வருமொழி

'தமிழ்' என்பது நிலைமொழி, நிலைமொழியின் ஈறு 'ழ்'

'அகம்' என்பது வருமொழி, வருமொழியின் முதல் எழுத்து 'அ'

இரண்டும் புணர்ந்து தமிழ் + அகம் = தமிழகம் என்றானது.

புணர்ச்சி விதிகள் :

       சொற்புணர்ச்சியின்போது நிலைமொழி இறுதியிலும் வருமொழி முதலிலும் ஏற்படும் மாற்றங்களைச் சுருங்கச் சொல்லும் வரையறைகளைப் புணர்ச்சி விதிகள் என்பர். மொழியைப் பிழையின்றிக் கையாளவும் பாடல் அடிகளைப் பொருள் உணர்வுக்கு ஏற்ற வகையில் படித்து அறியவும், மொழி ஆளுமையைப் புரிந்து கொள்ளவும் இது பயன்படுகின்றன.

சான்றாக ஒரு புணர்ச்சி விதி

"ஈறுபோதல் இடை உகரம் இய்யாதல்
ஆதிநீடல் அடிஅகரம் ஐ ஆதல்
தன்னொற்று இரட்டல் முன்நின்ற மெய்திரிதல்
இனம் மிகல் இனையவும் பண்பிற்கு இயல்பே".

                                               நன்னூல் (136)
செயல்பாடு : 2

புணர்ச்சி விதிகளின் விளக்கங்கள் :

மெய்யீற்றுப் புணர்ச்சி :

        புணர்ச்சியில் நிலைமொழியின் இறுதி எழுத்து மெய் எழுத்தாக நிற்க, வருமொழியின் முதலில்உயிர் எழுத்தும் மெய் எழுத்தும் சேரும் புணர்ச்சியை மெய்யீற்றுப் புணர்ச்சி என்பர்.

        நிலைமொழி ஈற்றில் மெய் எழுத்து நிற்க, வருமொழி முதலில் உயிர் எழுத்து வந்தால் அந்த மெய் மீது உயிர் ஏறும்.

'உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே'
                                              நன்னூல் (24)
சான்று :

அரசனில்லை = அரசன் + இல்லை

விதி :

உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே

அரசன் + இல்லை
(ன் + இ = னி ) 
அரசனில்லை என்று புணரும்.

குற்றியலுகரப் புணர்ச்சி:

               நிலைமொழி ஈற்றில் குற்றியலுகரம் நிற்க, வருமொழி முதலில் எந்த உயிரெழுத்து வந்தாலும்  நிலைமொழி ஈற்றுக் குற்றியலுகரத்தில் உள்ள உகரம் தான் ஏறிய மெய்யை விட்டு விட்டு ஓடிவிடும்.
உகரம் ஓடிவிட, நின்ற மெய்யின் மேல் வருமொழி முதலில் வந்த உயிரெழுத்து புணரும்.

'உயிர்வரின் உக்குறள் மெய்விட்டு ஓடும்'

                                                       நன்னூல் (164)
சான்று:

இயல்பில்லை = இயல்பு + இல்லை

விதி :
இயல்பு + இல்லை
இயல் (ப் + உ ) + இல்லை
உயிர்வரின் உக்குறள் மெய்விட்டு ஓடும்
இயல் (ப்) + இல்லை

விதி :

உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே
இயல் (ப் + இ)ல்லை
இயல்பில்லை என்றாயிற்று.

செயல்பாடு : 3

புணர்ச்சி விதிகள் பயன்படுத்துதல் :

பூப்பெயர் புணர்ச்சி :

          ' பூ' என்னும் சொல் நிலைமொழியாய் நிற்க, வருமொழியின் முதலில் வல்லின மெய் எழுத்துகள் வரும்போது வல்லினமெய் மிகுந்து புணர்வது மட்டுமன்றி, அவற்றிற்கு இனமான மெல்லின மெய் மிகுதலும் உண்டு. எனினும் மெல்லின மெய் மிகுதலே பெருவழக்காக உள்ளது.

'பூப்பெயர் முன் இனமென்மையுந் தோன்றும்'

                                                  நன்னூல் (200)
சான்று:

பூ + கொடி =  பூக்கொடி, பூங்கொடி
பூ + சோலை = பூச்சோலை, பூஞ்சோலை
பூ + தொட்டி = பூத்தொட்டி, பூந்தொட்டி
பூ + பந்து = பூப்பந்து, பூம்பந்து
என்றவாறு புணரும்.

மாணவர் செயல்பாடு

        மாணவர்களுக்குப் பல்வேறு விதிகளின் கீழ் வரும் சொல்லைக் கொடுத்து அதனைப் புணர்ச்சி விதியின்படி எழுதச் செய்தல். மேலும் அன்றாடம் பயன்படுத்தும் சொல்லையும் எழுதி இது என்ன
புணர்ச்சி விதியின்படி புணர்ந்துள்ளது என்பதை குறிப்பேட்டில் எழுதி வரச் சொல்லுதல்.

****************    ************    ***********

                          மதிப்பீடு

1. புணர்ச்சி - பொருள் வரையறு.

     புணர்ச்சி என்பது நிலைமொழி ஈறும் வருமொழி முதலும் ஒன்று சேர்வது ஆகும்.

சான்று - தமிழ் + அகம்  - ( ழ் + அ - ழ )
தமிழகம்


2. புணர்ச்சி விதிகள் என்றால் என்ன?

        சொற்புணர்ச்சியின்போது நிலைமொழி இறுதியிலும் வருமொழி முதலிலும் ஏற்படும் மாற்றங்களைச் சுருங்கச் சொல்லும் வரையறைகளைப் புணர்ச்சி விதிகள் என்பர்


3. வாயொலி - புணர்ச்சி விதி காண்க.

        வாய் + ஒலி  = வாயொலி 
"உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே" என்னும் விதிப்படி ( ய் + ஒ = யொ) வாயொலி எனப் பணர்ந்தது.


4. திருந்துமொழி - புணர்ச்சி விதி காண்க.

திருந்து + மொழி = திருந்து மொழி இயல்பாகப் புணர்ந்தது. ( இயல்புப் புணர்ச்சி )

5. 'பூங்கொடி' எவ்விதியின்படி புணரும் ?

" பூப்பெயர் முன் இனமென்மையுந் தோன்றும் எனும் விதிப்படி புணரும்.

பூ + கொடி - பூங்கொடி 

**************    *************   ***************

Post a Comment

0 Comments