11 ஆம் வகுப்பு - தமிழ்
புத்தாக்கிப் பயிற்சிக் கட்டகம்
செயல்பாடு - 6 , இலக்கணக் குறிப்பு
கற்றல் விளைவுகள்
* இலக்கண வகைச் சொற்களை அறியச் செய்தல்.
* வேற்றுமை உருபுகளைத் தெரிந்து கொள்ளுதல்.
* தொகைநிலைத் தொடர்களை அறியச் செய்தல்.
ஆசிரியர் செயல்பாடு
ஆர்வமூட்டல்
மாணவர்களே! நாம் ஒருவரின் முகக் குறிப்பினால் அவர் கூற நினைக்கும் கருத்தை அறிவது போல தமிழ்ச் சொற்களில் மறைந்து உள்ள உருபுகளையும் விகுதிகளையும் கண்டறிந்து இலக்கணக் குறிப்பை தெரிந்துகொள்ள ஆர்வமூட்டுதல்.
கற்பித்தல் செயல்பாடுகள்
செயல்பாடு:1
இரு சொற்களுக்கு இடையில் வேற்றுமை உருபுகளோ வினை, பண்பு முதலியவற்றின் உருபுகளே மறைந்து வருமானால் அதனைத் தொகைநிலைத் தொடர் என்பர். அவை ஆறு வகைப்படும்
1. வேற்றுமைத் தொகை
2. வினைத்தொகை,
3. பண்புத் தொகை
4. உவமைத் தொகை,
5. உம்மைத் தொகை,
6. அன்மொழித் தொகை.
வேற்றுமை மொத்தம் எட்டு வகைப்படும். அவற்றில் முதல் வேற்றுமைக்கும் எட்டாம் வேற்றுமைக்கும் உருபு இல்லை. எனவே முதல் வேற்றுமையை எழுவாய் வேற்றுமை என்றும், எட்டாம் வேற்றுமையை விளி வேற்றுமை என்றும் அழைப்பர். மீதமுள்ள ஆறு வேற்றுமை உருபுகள் தொடரில் மறைந்து வருவதைக் காணலாம்.
சான்று:
திருவாசகம் படித்தான் - திருவாசகத்தைப் படித்தான் - ஐ - இரண்டாம் வேற்றுமைத் தொகை
தலை வணங்கு - தலையால் வணங்கு - ஆல் மூன்றாம் வேற்றுமைத் தொகை
சிதம்பரம் சென்றான் - சிதம்பரத்திற்கு சென்றான் - கு - நான்காம் வேற்றுமைத் தொகை
மலை வீழ் அருவி - மழையின் வீழ் அருவி - இன் | ஐந்தாம் வேற்றுமைத் தொகை
கம்பர் பாடல் - கம்பரது பாடல் - அது- ஆறாம் வேற்றுமைத் தொகை
மலைக் குகை - மலையின் கண் குகை - கண் ஏழாம் வேற்றுமைத் தொகை
உருபும் பயனும் உடன் தொக்க தொகை:
ஒரு தொடரில் வேற்றுமை உருபும் அதன் பொருளை விளக்கும் சொல்லும் பயனும் மறைந்து வருவது உருபும் பயனும் உடன் தொக்க தொகை எனப்படும்.
சான்று :
பால்குடம் - பாலைக் கொண்ட குடம் - இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும்
உடன் தொக்க தொகை
பொற்சிலை - பொன்னாலாகிய சிலை - மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும்
உடன் தொக்க தொகை
பண்புத்தொகை :
ஒரு பொருளின் நிறம், குணம், வடிவம், அளவு ஆகியவற்றைக் குறிப்பது பண்புத்தொகை. மேலும் பண்பு பெயருக்கும் அது தழுவி நிற்கும் பெயர்ச்சொல்லுக்கும் இடையே ஆன, ஆகிய என்னும் பண்பு
உருபுகள் மறைந்து வருவது பண்புத்தொகை எனப்படும்.
சான்று :
1. வெண்ணிலவு
2. கருங்குவளை
செயல்பாடு : 2
வினைத்தொகை:
காலம் காட்டும் இடைநிலையும் பெயரெச்ச விகுதியும் மறைந்து வரும் பெயரெச்சத்தை வினைத்தொகை என்பர்.
"காலம் கரந்த பெயரெச்சம் வினைத்தொகை"
(நன்னூல்-364)
சான்று :
1. ஆடுகொடி
2. வளர் தமிழ்
இத்தொடர்களில் ஆடு, வளர் என்பவை வினைப்பகுதிகள் இவை முறையே கொடி, தமிழ் என்னும் பெயர்ச்சொற்களோடு சேர்த்து காலம் காட்டாத பெயர் எச்சங்களாக உள்ளன. அதாவது காலம் காட்டும் இடைநிலைகள் தொக்கி உள்ளன. மேலும் இவை முறையே ஆடிய கொடி, ஆடுகின்ற கொடி,
ஆடும் கொடி எனவும் வளர்ந்த தமிழ், வளர்கின்ற தமிழ், வளரும் தமிழ் எனவும் முக்காலத்திற்கும் பொருந்தும்படி பொருள் தருகின்றன.
உவமைத்தொகை:
ஒரு தொடரில் உவமைக்கும் உவமேயத்திற்கும் இடையில் போல, போன்ற, நிகர, அன்ன முதலிய உருபுகளில் ஏதேனும் ஒன்று மறைந்து வருவது உவமைத்தொகை ஆகும்.
சான்று :
மலர்ப்பாதம் - இத்தொடர் மலர் போன்ற பாதம் என்ற பொருள் தருகிறது.
மலர் - உவமை
பாதம் - உவமேயம்
இடையில் போன்ற என்னும் உவம உருபு மறைந்து வந்துள்ளது.
உம்மைத்தொகை:
சொற்களுக்கு இடையிலும் இறுதியிலும் உம் என்னும் இடைச்சொல் மறைந்து நின்று பொருள் தருவதை உம்மைத்தொகை என்பர்.
சான்று:
வையகம் வானகம்
இத்தொடர் வையகமும் வானகமும் என விரிந்து பொருள் தருகின்றது.
செயல்பாடு : 3
வியங்கோள் வினைமுற்று :
இருதிணைகளையும் (உயர்திணை அஃறிணை) ஐந்து பால்களையும் (ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால்) மூன்று இடங்களையும் (தன்மை, முன்னிலை, படர்க்கை)
காட்டும் வினைமுற்று வியங்கோள் வினைமுற்று ஆகும். வாழ்த்துதல், வைதல், விதித்தல், வேண்டல் ஆகிய பொருள்களில் வரும். இதன் விகுதிகள் க, இய, இயர்.
சான்று:
வாழ்க, ஒழிக, வாழியர்.
உரிச்சொல் தொடர்:
உரிச்சொற்கள் வெளிப்படையாக ஒரு தொடரில் வருவது உரிச்சொல் தொடர்
ஆகும்.
சான்று :
மாஞாலம், மாநகரம், உறுபசி, சாலவும் நன்று
இத்தொடரில் மா, உறு, சால போன்ற சொற்கள் உரிச்சொற்கள் ஆகும்.
மாணவர் செயல்பாடு
ஆசிரியர் கரும்பலகையில் பல்வேறு சொற்களை எழுதி ஒவ்வொரு மாணவராக அழைத்து அச்சொல்லுக்குரிய இலக்கணக் குறிப்பைக் கண்டறியச் சொல்லுதல்.
குழு செயல்பாடு:
மாணவர்களைப் பல்வேறு குழுக்களாகப் பிரித்தல் பாடநூலில் உள்ள செய்யுள் பகுதியைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு அதில் அமைந்துள்ள சொற்களுக்கு இலக்கணக் குறிப்புகளைக் காணச் செய்தல்.
************ ************ **************
மதிப்பீடு
1. ஆறாம் வேற்றுமை உருபு எது ?
ஆறாம் வேற்றுமை உருபு - அது
சான்று - கம்பர் பாடல் - கம்பரது பாடல்
2. பெருந்தேர் என்பதன் இலக்கணக்குறிப்பு யாது?
பெருந்தேர் - பண்புத்தொகை
3. மாஞாலம் என்பதன் இலக்கணக்குறிப்பு யாது ?
மாஞாலம் - உரிச்சொற்றொடர்
************** ************** ***********
0 Comments