11 ஆம் வகுப்பு - தமிழ்
புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்
செயல்பாடு - 25
கவிதை இயற்றப் பழகுதல்
கற்றல் விளைவுகள்
* மரபுக்கவிதை, புதுக்கவிதைப் பற்றித் தெரிந்து கொள்ளல்.
* கவிதைப் படைக்கும் திறன் வளர்த்தல்.
ஆசிரியர் செயல்பாடு
ஆர்வமூட்டல் :
கவிதைகளை மரபுக்கவிதை, புதுக்கவிதை என இரண்டாகப் பகுப்பர். இவற்றுள் இலக்கண எல்லைக்குட்பட்டு எழுதப்படும் கவிதை எது? இலக்கண வரம்பின்றி எழுதப்படும் கவிதை எது? என்று
வினா கேட்டு ஆர்வமூட்டல்.
கற்பித்தல் செயல்பாடுகள்
செயல்பாடு:1
இலக்கண மரபை மீறாமல் இயற்றப்படுவது மரபுக்கவிதையாகும். மரபுக் கவிதைகள் பெரும்பாலும் காதல், வீரம், பக்தி போன்றவற்றையே கருவாகக் கொண்டு பாடப்பட்டுள்ளன. இம்மரபை மாற்றி, இலக்கண வரம்பை மீறி, நாட்டுப்பற்று, மொழிப்பற்று, பெண்விடுதலை, சமூகவிடுதலை, இயற்கைவருணனை என மனதில் தோன்றும் யாவற்றையும் கருவாகக் கொண்டு பாடப்படுவனவற்றைவசன கவிதை என்றே முதலில் அழைத்தனர். இவ்வசனகவிதையே பின்னாளில் புதுக்கவிதையானது.
எளிய நடையில், சாமானிய மனிதர்களின் வாழ்க்கையையும் பாடுபொருளாகக் கொண்டு இப்புதுக்கவிதைகள் படைக்கப்படுகின்றன. மேலும் புதுக்கவிதைகள் காலமாற்றத்திற்கு ஏற்ப ஹைக்கூ, குக்கூ, சென்றீயூ, கஸல், நஜ்ம் என பல வடிவங்களில் மலர்ந்துவிட்டன.
செயல்பாடு:2
மரபுக் கவிதை:
மரபு என்பது தொன்று தொட்டு வழங்கி வருவதாகும். மரபுக்கவிதை என்றால் அவற்றில் அசை, சீர், தளை, அடி, தொடை போன்ற செய்யுள் உறுப்புகள் அமைய பாடப்படுவதாகும்.
ஆசிரியப்பா:
பா இயற்றுவதற்குரிய எளிய வடிவமாக ஆசிரியப்பாவைக் கூறுவர். அகவலோசை பெற்றதால் ஆசிரியப்பாவை 'அகவற்பா' என்றும் கூறுவர். ஆசிரியப்பாக்களால் ஆன பாடல்களே சங்ககாலத் தமிழில் மிகுதியாக உள்ளன.
ஆசிரியப்பாவின் பொது இலக்கணம்:
*அகவலோசை கொண்டது.
* அளவடி பெற்றுவரும்.
* இயற்சீர் மிகுந்தும் பிறசீர் கலந்தும் வரும்.
* மூன்றடிச் சிற்றெல்லையாக அமையும். பேரெல்லை பாடுவோரின் கற்பனைக்கேற்ப அமையும்.
செயல்பாடு : 3
வெண்பா :
சங்கம் மருவிய காலத்தில் வெண்பா இலக்கியம் பெருகத் தொடங்கின. அறக்கருத்துகள் மனிதனுக்குத் தேவையாக இருந்ததால் வெண்பா யாப்பு செல்வாக்குப் பெற்றது. சொல்லுதலை ( செப்பல்) அடிப்படையாகக் கொண்டதால் வெண்பா செப்பலோசை உடையதாயிற்று. மற்ற ஏனைய பாக்களைவிட வரையறுத்த இலக்கணக் கட்டுப்பாடுகளைக் கொண்டது வெண்பா. இதனாலேயே வெண்பாவை வன்பா என்பார்கள்.
பொது இலக்கணம் :
* இயற்சீர் வெண்டளை வெண்சீர் வெண்டளை பிறழாது பா அமையவேண்டும்.
* ஈற்றடி முச்சீராகவும் ஏனையவை நாற்சீராகவும் இருக்கும்.
* ஈரசைச்சீரில் மாச்சீரும் விளச்சீரும் வரும். மூவசைச்சீரில் காய்ச்சீர் வரும்.
* ஈற்றுச்சீர் நாள், மலர், காசு, பிறப்பு ஆகிய வாய்பாடுகளுள் ஒன்றைக் கொண்டு முடியும்.
செயல்பாடு : 4
புதுக்கவிதை :
எளிய நடை, எளிய சொற்கள், எளிதில் அறிந்துகொள்ளும் வண்ணம் பாடப்படுவது புதுக்கவிதை ஆகும்.
"சுவை புதிது பொருள் புதிது வளம் புதிது
சொற்புதிது சோதிமிக்க நவகவிதை"
என்று பாரதியார் தனது கவிதை மூலமாக புதுக்கவிதையின் இலக்கணத்தை வரையறுக்கிறார்.
தொடக்க காலத்தில் 'வசனக் கவிதை' எனச் சாதாரணமாக அழைக்கப்பட்ட நிலையில் பின்பு புதுக்கவிதை எனப் போற்றிக்கொள்ளப்பட்டது. யாப்பில்லாக் கவிதையாக இயற்றப்பட்டாலும்
எதுகை, மோனை, இயைபு எனபலவகையான உத்திகள் புதுக்கவிதையில் பயின்று வருவதைக் காணமுடிகிறது.
கவிதை இயற்றுவதற்கான சில உத்திகள்:
* கவிதை எழுத வேண்டும் என ஏற்படும் மனத்தூண்டல்.
* எழுத எண்ணும் கவிதைக் கரு பற்றிய சிந்தனை.
* மனத்திற்குள்ளாகக் கவிதைக்கான சொற்கோர்வைகள், ஒப்பீடுகள், உவமைகள், படிமங்கள், குறியீடுகள் முதலானவற்றைப் பற்றிய சிந்தனை.
* அடுக்குதல், செம்மைப் படுத்துதல், செழுமையூட்டுதல், யாப்பொழுங்கு செப்பனிடல் என்னும் வழிமுறைகளில் எழுதிய கவிதைகளைச் சீர் செய்தல்.
* கவிதைக்குரிய வடிவத்தில் அமைத்தல்.
மாணவர் செயல்பாடு
* பாடநூலில் இடம்பெற்றுள்ள சங்ககாலக் கவிதைகளையும் புதுக்கவிதைகளையும் வாசித்தல்.
* மரபுக்கவிதைக்கும் புதுக்கவிதைக்கும் உள்ள வேறுபாடுகளைத் தெரிந்து கொள்ளல்.
* ஏதேனும் ஒரு தலைப்பில் புதுக்கவிதை எழுதிப் பழகுதல்.
****************** ******** ****************
மதிப்பீடு
1. மரபுக்கவிதை, புதுக்கவிதை வேறுபடுத்துக.
* மரபுக்கவிதை என்றால் அசை , சீர் , அடி , தொடை , தளை போன்றவை அமையப் பாடப்படுவது ஆகும்.
2. மழை' என்னும் தலைப்பில் புதுக்கவிதை எழுதுக.
மாணாக்கர்களே ! உங்களின் சுயசிந்தனையின் அடிப்படையில் நீங்களே கவிதை புனைவது இங்கு ஊக்குவிக்கப்படுகிறது.
**************** ************** ***********
0 Comments