11 ஆம் வகுப்பு - தமிழ்
புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்
செயல்பாடு - 24
பழமொழி வாழ்க்கை நிகழ்வு
கற்றல் விளைவுகள்
* தமிழரின் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் பழமொழி பிரதிபலிக்கும் என்பதை அறிதல்.
* தமிழரின் வாழ்க்கை முறை பழமொழியோடு தொடர்புடையது என்பதைத் தெரிந்து கொள்ளுதல்.
* பழமொழி மூலம் மனிதர்களிடம் நற்பண்புகளை வளர்க்க முடியும் என்பதைப் புரிந்து கொள்ளுதல்.
ஆசிரியர் செயல்பாடு
ஆர்வமூட்டல் :
மாணவர்களிடம் ஒரு பழமொழியைக் கூறி அதற்கான விளக்கத்தைக் கேட்டு அவர்களை ஆர்வமூட்டுவது. 'ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?' என்ற பழமொழியைக் கூறி மாணவர்களை இந்த பழமொழி எதை கூறுகிறது என்றால் சிறு வயதில் நாம் எதையும் செய்ய முடியும் நம்முடைய உடல், மனம், மெய் அனைத்தும் நம் சொல்படி கேட்கும். ஆனால் வயதானால் நம்மால் எதையும் செய்ய முடியாது, அதனால்தான் நாம் இளம் வயதில் கல்வியைக் கற்று உயர முடியும் எனக்கூறி ஆர்வமூட்டல்.
கற்பித்தல் செயல்பாடுகள்
செயல்பாடு :1
பழமொழியைத் தொல்காப்பியம் முதுசொல் என்று கூறுகிறது. பழமொழி பண்டைய தமிழர்களின் வாழ்வியலோடு பின்னிப் பிணைந்து இருக்கிறது. பண்டையத் தமிழர்களின் பண்பாட்டோடும் கலாச்சாரத்தோடும் நெருங்கிய தொடர்புடையது. பழமொழிகள் மூலம் தமிழர்கள் நற்பண்புகளையும் நல்ல வாழ்வியல் முறைகளையும் வளர்த்துக்கொண்டனர்.
பழமொழிகள் நம் தமிழர்களின் அறத்தையும் பண்பையும் வளர்க்க காரணமாக இருந்துள்ளது. தமிழர்களின் வாழ்வியலே பழமொழியாகும். பழமொழிகள் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற முறையையும் சுருக்கமாக இருந்தாலும் உண்மையான வாழ்வியலை எடுத்துக்கூறி மனிதனை நல்வழிப்படுத்தும்.
வாழ்வியல் பழமொழிகள் :
# ஆசைக்கு அளவில்லை
# பேராசைக்கு இல்லை இரக்ககுணம்
# நல்ல அறிவுரை விலைமதிப்பற்றது
# உழைக்க கற்றபின் பொறுக்கக் கற்க
இவ்வாறு பழமொழி மனித வாழ்க்கையைச் செம்மைப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
செயல்பாடு : 2
பழமொழி வாழ்க்கை நிகழ்வு :
"ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?"
உணர்த்தும் பொருள்,
இளமையில் கல்வி கற்காதவன் முதுமையில் கல்வி கற்பது என்பது முடியாத காரியம் ஆகும் அதுபோல இளமையில் முயற்சி செய்யாதவன் முதுமையில் முயற்சி செய்ய முடியாது என்பதை இப்பழமொழி உணர்த்தும் பொருளாகும்.
வாழ்வியல் நிகழ்வு:
நானும் என் தோழன் மாறனும் இணைபிரியாதவர்கள் ஆனால் என் தோழன் முதல் வகுப்பிலிருந்தே நன்றாக படிப்பான். ஆனால் நான் சிறுபிள்ளைத்தனமாக விளையாட்டிற்கு முக்கியத்துவம் கொடுத்தேன். அவன் நன்றாகப் படித்து வாழ்வில் உயர்ந்த நிலையை அடைந்தான்.
ஆனால் என்னால் அவனைப் போல் வாழ்வில் உயர்நிலையை அடைய முடியவில்லை பின்பு
முதியோர் கல்விக்கு சென்று படிக்க ஆசைப்பட்டு படித்து வந்தேன். ஆனால் என் முதுமை காரணமாக என்னால் கல்வி கற்க முடியவில்லை. இதிலிருந்து நான் அறிந்து கொண்டது என்னவென்றால் கற்க
வேண்டிய கல்வியை முறையாக இளமையிலேயே கற்க வேண்டும் என்பதாகும்.
அறியும் நீதி :
சிறுவயதில் கல்வி கற்பது இறுதிவரை நன்மை பயக்கும் என்ற கருத்தைத் தான் இப்பழமொழி எடுத்துரைக்கின்றது.
மாணவர் செயல்பாடு
மாணவர்களிடம் ஒரு பழமொழியைக் கூறி அந்த பழமொழியை உங்கள் வாழ்க்கையோடு தொடர்புடைய ஒரு கதையை எழுதி வருமாறு கூறுதல்.
***************** ******** ***************
மதிப்பீடு
1. பழமொழியை தொல்காப்பியம் எச்சொல்லால் குறிக்கின்றது ?
பழமொழியை தொல்காப்பியம் ' முதுசொல் ' என்று கூறுகிறது.
2. பழமொழி நம் வாழ்க்கை முறையில் பெறும் முக்கியத்துவம் யாது?
* தமிழர்களின் பண்பாட்டோடும் , கலாச்சாரத்தோடும் நெருங்கிய தொடர்புடையது பழமொழி .
* பழமொழிகள் மூலம் தமிழர்கள் நற்பண்புகளையும் , நல்ல வாழ்வியல் முறைகளையும் கற்றுக் கொண்டனர்.
* பழமொழிகள் சுருக்கமாக இருந்தாலும் அரிய வாழ்வியலை எடுத்துக்கூறி நல்வழிப்படுத்தும்.
3. பழமொழி என்றால் என்ன ?
பழமொழி என்பது சுருங்கச்சொல்லி விளங்க வைத்தல் ஆகும்.
4. 'இளங்கன்று பயமறியாது வாழ்க்கையோடு தொடர்புப்படுத்தி கதை எழுதுக.
இளங்கன்று பயம் அறியாது"
பொருள்:
இளமைப் பருவத்தினர், தனக்குப் பின்னால் நேரக்கூடிய துன்பத்தினைப் பற்றிய பயம் அறியாமல் தற்போது உடனே ஒரு முடிவினை எடுத்து விடுவர். அது பேராபத்தாய் கூட முடிந்து விடும்.
வாழ்வியல் நிகழ்வு:
வேலவன் என்பவன் பதினோராம் வகுப்பில் பயிலும் மாணவன். மிகவும் துடிப்புடன் செயலாற்றக் கூடியவன். ஊரிலும் சரி, பள்ளியிலும் சரி, தன்னை ஒரு வீரன் என்று காட்டிக் கொள்வதில் பெருமைப்படக் கூடியவன். யாரும் செய்யத் துணியாத காரியத்தையும் உடலை வருத்தித் கடினமானாலும் அதைச் செய்து முடித்து விடுவான். ஒருமுறை அவனது நண்பர்கள்
அவன் தெருவின் புற்றிலுள்ள பாம்பினைப் பிடிப்பதற்கு வேலவனிடம் பந்தயம் வைத்தனர். பந்தயத்தில் வெற்றி பெற வேண்டும் என நினைத்த வேலவன் பாம்பினைப் படிக்க புற்றினுள்
கை விட்டதும் பாம்பு கடித்து விட்டது. அவன் மயக்கமடைந்த செய்தியையறிந்து பெற்றோர்கள் ஓடிவந்து அவனைத் தூக்கிக் கொண்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தான்.
- இந்நிகழ்வினைக் கண்டு "இளங்கன்று பயமறியாது" என்ற விடுகதையை உணர்ந்து
கொண்டோம்.
பொருத்தம்:
இளங்கன்று - இளமைப் பருவமுடைய வேலவன் பயம் அறியாது - தனக்கு உயிருக்கு நேரக்கூடிய ஆபத்தை எண்ணாமல் பாம்பின் புற்றினுள் கை விட்டது.
***************** *********** *************
0 Comments