11 ஆம் வகுப்பு - தமிழ்
புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்
செயல்பாடு - 23
முதற்பொருள், கருப்பொருள்,
உரிப்பொருள்களைப் பற்றி அறிதல்
கற்றல் விளைவுகள்
* ஐவகை நிலங்களையும், அந்நிலங்களில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை நிலைகளையும் அறிதல்.
* முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் பற்றித் தெரிந்து கொள்ளுதல்.
ஆசிரியர் செயல்பாடு
ஆர்வமூட்டல் :
ஐவகை நிலம் என்பது யாது? என்று மாணவர்களிடம் கேள்வி கேட்டு குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என பதிலைப் பெற வேண்டும். அந்நிலங்களில் வாழ்ந்த அக்கால மக்களின் வாழ்க்கை நிலையை முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என மூன்று வகைகளாகப் பிரித்து காட்டியுள்ளனர் என மாணவர்களுடன் கலந்துரையாடி ஆர்வமூட்டல்.
கற்பித்தல் செயல்பாடுகள்
செயல்பாடு:1
அகவாழ்க்கையில் நிகழும் செயல்பாடுகளை (ஒழுக்கங்களை) ஐந்து பெரும் பிரிவுகளில் அடக்கி, அவற்றுக்கு நில அடிப்படையில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை போன்ற பெயர்களை அமைத்தனர். அவ்வாறுவகுக்கப்பட்ட ஐந்து திணைகளுக்கும் அடிப்படையாக அமையும் பொருள்களை முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என மூவகைப்படுத்துவர்
முதற்பொருள் :
முதன்மையும் அடிப்படையுமான பொருள் முதற்பொருள் எனப்பட்டது. மலைமுதலான நிலங்களும், மாலை முதலான பொழுதுகளும் முதற்பொருள் ஆகும். ஆகவே, முதற்பொருள் நிலம், பொழுது என இருவகைப்பட்டது
திணையும் நிலமும் :
நிலம் என்பது முதற்பொருளின் பகுதி. குறிஞ்சி முதலான ஐந்து திணைகளுக்கும் உரிய நிலங்கள் பின்வருமாறு.
* குறிஞ்சி - மலையும் மலை சார்ந்த இடமும்
* பாலை - மணலும் மணல் சார்ந்த இடமும்
* முல்லை - காடும் காடு சார்ந்த இடமும்
* மருதம் வயலும் வயல் சார்ந்த இடமும்
* நெய்தல் கடலும் கடல் சார்ந்த இடமும்
செயல்பாடு : 2
திணையும் பொழுதும் :
பொழுது என்பது காலத்தைக் குறிக்கும். அவைசிறுபொழுது, பெரும்பொழுது என இருவகைப்படும்.
சிறுபொழுது :
இது ஒரு நாளின் சிறு பிரிவு.
* வைகறை (அதிகாலை நேரம்) - இரவு 2 மணி முதல் காலை 6 மணி வரை
* காலை - காலை 6 மணி முதல் முற்பகல் 10 மணி வரை
* நண்பகல் - முற்பகல் 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை
* எற்பாடு (எல் + பாடு)
(சூரியன் மறையும் நேரம்)
பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரை
* மாலை - மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை
* யாமம் ( நள்ளிரவு ) - இரவு 10 மணி முதல் நள்ளிரவு 2 மணி வரை
பெரும்பொழுது :
இது ஓர் ஆண்டின் உட்பிரிவு ஆகும்.
* இளவேனில் - சித்திரை, வைகாசி
* முதுவேனில் - ஆனி, ஆடி
* கார்காலம் - ஆவணி, புரட்டாசி
* கூதிர் காலம் - ஐப்பசி, கார்த்திகை
* முன்பனிக்காலம் - மார்கழி, தை
* பின்பனிக்காலம் - மாசி, பங்குனி
ஐந்து திணைகளுக்கும் உரிய சிறுபொழுது, பெரும்பொழுதுகள் எவையெவை என்பதைக்
கீழ்வரும் அட்டவணை விளக்கும்.
நிலம் ( அ )
திணை சிறுபொழுது / பெரும்பொழுது
குறிஞ்சி யாமம் கூதிர், முன்பனி
முல்லை மாலை கார்காலம்
மருதம் வைகறை பெரும்பொழுதுகள் ஆறும்
நெய்தல் எற்பாடு பெரும்பொழுதுகள் ஆறும்
பாலை நண்பகல் இளவேனில், முதுவேனில்
செயல்பாடு : 3
கருப்பொருள்கள் :
ஐந்து திணைகளுக்கும் உரிய நிலங்களில் வாழும் உயிரினங்களும் வழங்கும் பொருள்களும் கருப்பொருள் என வழங்கப்படுகின்றன. கருப்பொருள் பதினான்கு வகைப்படும். அவை
* தெய்வம்
* உயர்ந்தோர்
* தாழ்ந்தோர்
* பறவை
* விலங்கு
* ஊர்
* நீர்
* பூ
* மரம்
* உணவு
* பறை
* யாழ்
* பண்
* தொழில்.
செயல்பாடு : 4
உரிப்பொருள் :
மக்களின் அகவாழ்க்கைக்கு உரிய உணர்ச்சிகள் அல்லதுமன உணர்வுகளே உரிப்பொருள்கள்.
மனித உள்ளங்களில் மட்டுமல்லாது ஐவகை நிலத்திற்கு உரியவை என்னும் பொருளில்
'உரிப்பொருள்' என்று பெயர் வைத்துக் கூறப்பட்டது. ஐந்து நிலத்திணைகளுக்கும் அவற்றின் இயல்புக்கு ஏற்ப உரிப்பொருள்கள் உள்ளன. அவை பின்வருமாறு.
* குறிஞ்சி புணர்தலும் புணர்தல் நிமித்தமும்
* பாலை பிரிதலும் பிரிதல் நிமித்தமும்
* முல்லை இருத்தலும் இருத்தல் நிமித்தமும்
*மருதம் ஊடலும் ஊடல் நிமித்தமும்
* நெய்தல் இரங்கலும் இரங்கல் நிமித்தமும்
மாணவர் செயல்பாடு
ஐவகை திணைகளையும் தனித்தனியே எழுதி, அதற்கு முதற்பொருள், கருப்பொருள்,
உரிப்பொருள் ஆகியவற்றை எழுதச் சொல்லுதல்.
****************** ******** **************
மதிப்பீடு
1. பொழுது எத்தனை வகைப்படும்? அவை யாவை?
பொழுது இரண்டு வகைப்படும்.
* பெரும்பொழுது
* சிறுபொழுது.
2. ஐவகை நிலங்களுக்குரிய உரிப் பொருள்கள் யாவை?
ஐந்து நிலத்திணைகளுக்கும் அவற்றின் இயல்புக்கு ஏற்ப உரிப்பொருள்கள் உள்ளன. அவை பின்வருமாறு.
* குறிஞ்சி புணர்தலும் புணர்தல் நிமித்தமும்
* பாலை பிரிதலும் பிரிதல் நிமித்தமும்
* முல்லை இருத்தலும் இருத்தல் நிமித்தமும்
*மருதம் ஊடலும் ஊடல் நிமித்தமும்
* நெய்தல் இரங்கலும் இரங்கல் நிமித்தமும்
3. குறிஞ்சி நிலத்திற்கு உரிய கருப்பொருள்களைக் கூறுக.
தெய்வம் - முருகன்
மக்கள் - குறவன் , குறத்தி
பறவை - கிளி
விலங்கு - புலி
நீர் - அருவிநீர்
மரம் - சந்தன மரம்
உணவு - தினை அரிசி
தொழில் - கிழங்கு அகழ்தல் , தேன் எடுத்தல்.
***************** ********* ***************
0 Comments