11 ஆம் வகுப்பு - தமிழ்
புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்
செயல்பாடு - 22 , அணிகள்
கற்றல் விளைவுகள்
* 'அணி' பொருள் பற்றி அறிதல்.
* அணியின் விளக்கம் மற்றும் வகைகளைப் புரிந்துகொள்ளுதல்.
* உவமை அணியின் தன்மையை உணரச் செய்தல்.
* வேற்றுமை அணியின் விளக்கம் அறிந்து பயன்படுத்தும் திறன் பெறுதல்.
ஆசிரியர் செயல்பாடு
ஆர்வமூட்டல்:
பொதுவாகவே நகைகளை அதிகமாக அணிந்திருப்பவர்கள் ஆண்களா ? பெண்களா ?
* நகைகளை வேறு எவ்வாறு அழைக்கலாம் ?
* திருமண விழாக்களில் குறிப்பாக மணப்பெண்ணுக்கு அலங்காரம் செய்பவர்கள் பணியமர்த்தப்படுகிறார்களே ஏன்?
இது போன்ற வினாக்களை எழுப்பி பல்வேறு விடைகள் கிடைப்பதன் மூலம் பாடப்பகுதியைத் தொடர்புபடுத்தி ஆர்வமுடன் கற்கச் செய்யலாம்.
கற்பித்தல் செயல்பாடுகள்
செயல்பாடு :1
'அணி' பொருள்:
அணி என்றாலும் அலங்காரம் என்றாலும் ஒன்றே. அணி என்பது தமிழ்ச்சொல். அலங்காரம் என்பது வடமொழிச்சொல். அணி என்பதற்குவனப்பு என்று பொருள் (பல அழகு ஒன்று கூடியது வனப்பு). வனப்பு என்றாலும் அழகு என்றாலும் ஒன்றே என்று கூறுவாரும் உளர். அதாவது அகப்பொருள், புறப்பொருள் என்ற இரண்டிற்கும் இடம் செய்யுள் ஆகும். ஆகவே, செய்யுளை அழகுபடுத்தி அதன் பொருளைத் தெளிவாக எடுத்துரைக்கவே அணிகள் தோன்றின. எனவே செய்யுளின் கருத்தை அழகுற விளக்குவது அணியாகும்.
செயல்பாடு : 2
அணி விளக்கம் மற்றும் வகைகள்:
அணி இலக்கண நூல்கள் பல தமிழில் இருந்தாலும் 'தண்டி' எழுதிய 'தண்டியலங்காரம்' என்ற அணி இலக்கண நூலே சிறப்பாகத் திகழ்கிறது. அணிகள் குண அணி, பொருள் அணி, சொல் அணி என மூன்று வகைப்படும். குண அணி பொருத்தவரை பொது அணி என்றும் கூறுவர். குண அணியும், சொல் அணியும் பெரும்பாலும் வழக்கொழிந்து போய்விட்டன. பொருளணியே இன்றும் மிகுதியாக புழக்கத்தில் உள்ளது. பொருள் அணியாகத் தண்டியலங்காரம் 35 அணிகளைக் கூறுகிறது. நம் பாடப்பகுதியில் உள்ள சில அணிகளைக் காண்போம்.
செயல்பாடு : 3
உவமையணி விளக்கம் :
' இது அது போல் உள்ளது' என்று கூறுவது உவமை ஆகும். இதில் உவமை, உவம உருபு,
பொதுத்தன்மை, பொருள் என்ற நான்கு உறுப்புகள் அமைந்திருக்கும். உவமையை '
உவமானம்' என்றும், பொருளை 'உவமேயம்' என்றும் கூறுவர்.
அணியிலக்கணம் :
உவமானம் ஒரு தொடராகவும் உவமேயம் மற்றொரு தொடராகவும் அமைந்து 'போல' என்ற உவம உருபு வெளிப்படையாக வருவது உவமை அணியாகும்.
சான்று:
"அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை.
சான்று பொருத்தம் :
* உவமானம் : அகழ்வாரைத் தாங்கும் நிலம்
* உவமேயம் : தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை
* உவம உருபு : போல
சான்று விளக்கம் :
தன்னைத் தோண்டுபவரையும் தாங்கும் நிலம் போலத் தனக்கு தீங்கு செய்பவர்களையும் பொறுத்துக்கொள்வதே தலை சிறந்த பண்பாகும்.
செயல்பாடு : 4
வேற்றுமை அணி விளக்கம்:
வெளிப்படையாகவும் குறிப்பாகவும் ஒற்றுமை உடைய இரு பொருள்களுக்கு இடையே வேற்றுமை இருப்பதாக கூறுவது வேற்றுமையணி ஆகும். அதனை இரண்டுவகையாகப் பிரிக்கலாம்.
* கூற்று வேற்றுமையணி
* குறிப்பு வேற்றுமையணி
பிறிது மொழிதல் அணி:
அணி இலக்கணம்:
கவிஞர் தான் கூறக் கருதும் பொருளை வெளிப்படையாகக் கூறாமல் பிறிதொன்றின் மீது ஏற்றிக் கூறுவது பிறிது மொழிதல் அணியாகும்.
சான்று:
"பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின்.
சான்று விளக்கம்:
மயிலிறகு சிறிதாக இருந்தாலும் அதிகமாகவண்டியில் ஏற்றினால் வண்டியானது பாரம் தாங்காமல் அச்சாணி முறிந்து விடும் என வெளிப்படையாகக் கூறிவிட்டு, பிறிதொரு பொருளாக பகைவர்கள் சிறியவர்களாக இருந்தாலும், பகைவர்களின் எண்ணிக்கை அதிகமானால் நம்மை எளிதில் வென்று விடுவார்கள்.
மாணவர் செயல்பாடு
மாணவர்களுக்கு அணிகள் இடம்பெறும் சில திருக்குறளைக் கொடுத்து இவற்றில் எந்த அணிகள் இடம் பெற்றுள்ளன என்பதைக் கண்டறியச் செய்தல். சில அணிகளுக்கு சான்று, சான்று விளக்கம், அணி இலக்கணம் எழுதவும் செய்தல்.
*************** ********* ****************
மதிப்பீடு
1. 'அணி' பொருள் வரையறு.
செய்யுளை அழகுபடுத்தி , அதன் பொருளைத் தெளிவாக எடுத்துரைக்கப் பயன்படுவது அணி ஆகும்.
2. 'அலங்காரம்' என்பது எம்மொழிச்சொல் ?
' அலங்காரம் ' என்பது வடமொழிச்சொல்.
3. அணி இலக்கணம் கூறும் சிறப்பான நூல் ஒன்றினை கூறுக?
தண்டியலங்காரம்
4 . உவமை அணியின் இலக்கணம் கூறுக ?
உவமானம் ஒரு தொடராகவும் , உவமேயம் மற்றொரு தொடராகவும் அமைந்து ' போல ' என்னும் உவம உருபு வெளிப்படையாக வருவது உவமை அணியாகும்.
5. பிறிதுமொழிதல் அணி சான்று தருக?
பிறிது மொழிதல் அணி:
அணி இலக்கணம்:
கவிஞர் தான் கூறக் கருதும் பொருளை வெளிப்படையாகக் கூறாமல் பிறிதொன்றின் மீது ஏற்றிக் கூறுவது பிறிது மொழிதல் அணியாகும்.
சான்று:
"பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின்.
சான்று விளக்கம்:
மயிலிறகு சிறிதாக இருந்தாலும் அதிகமாகவண்டியில் ஏற்றினால் வண்டியானது பாரம் தாங்காமல் அச்சாணி முறிந்து விடும் என வெளிப்படையாகக் கூறிவிட்டு, பிறிதொரு பொருளாக பகைவர்கள் சிறியவர்களாக இருந்தாலும், பகைவர்களின் எண்ணிக்கை அதிகமானால் நம்மை எளிதில் வென்று விடுவார்கள்.
***************** ************ ************
0 Comments