11 ஆம் வகுப்பு - தமிழ் - புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் - 20 , திணை - வினா & விடை / 11th TAMIL - PUTHTHAAKKAP PAYIRCHIK KATTKAM - 20 , QUESTION & ANSWER

 

11 ஆம் வகுப்பு - தமிழ்

புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்

செயல்பாடு - 20 , திணை

கற்றல் விளைவுகள்

* திணைக்குப் பொருள் என்ன என்பதை அறிதல்.

*  அகத்திணை, புறத்திணை பற்றி தெரிந்து கொள்ளுதல்.

* இலக்கியங்களுக்கு இலக்கணங்கள் சான்றாக அமைந்துள்ளதைத் தெரிந்து கொள்ளுதல்.

ஆசிரியர் செயல்பாடு

ஆர்வமூட்டல் :

        தினை, திணை ஆகிய சொற்களுக்குப் பொருள் என்ன? என்பதை மாணவர்களிடம் கேள்வி கேட்டு, தினை -தானியம், திணை-ஒழுக்கம் என்று பதிலைப் பெற வேண்டும். மேலும், ஒழுக்கத்தைக் குறிக்கும் திணையைப்பற்றி நீங்கள் அறிந்த செய்தியைக் கூறுங்கள் என மாணவர்களை ஆர்வமூட்டல்.

கற்பித்தல் செயல்பாடுகள்

செயல்பாடு :1

            திணை என்பது குலம், நிலம், ஒழுக்கம் ஆகிய பல பொருள்களைக் குறிக்கும் ஒரு சொல். திணையைச் சொல் பாகுபாடு முறையில் இரண்டு வகையாகப் பிரிக்கலாம். இதனைக் கீழ் வகுப்பில் படித்து இருப்பீர்கள். அவை உயர்திணை, அஃறிணை.

திணையைப் பொருள் பாகுபாட்டு முறையில் இரண்டு வகையாகப் பிரிக்கலாம். அவை,

* அகத்திணை (வாழ்வியல்)

* புறத்திணை (உலகியல்)

   வாழ்க்கை நிகழ்வுகளைத் தமிழ் இலக்கண நூல்கள் அகம், புறம் என இரண்டு பொருள்களாகப் பகுத்துக் கொண்டுள்ளன.

அகம் என்பது திருமணத்திற்கு முந்தைய களவு நிலையிலும் திருமணத்திற்குப் பிந்தைய கற்பு நிலையிலும் நிகழும் வாழ்வியல் நிகழ்வு பற்றியது. இதனையே அகத்திணை என்பர்.

புறம் என்பது புறத்தார்க்குப் புலனாகும் வாழ்க்கை. இதனைப் புறத்திணை என்பர்.

அகத்திணை ( வாழ்வியல்) :

* குறிஞ்சி

* முல்லை

*  மருதம்

*  நெய்தல்

* பாலை

* கைக்கிளை

* பெருந்திணை.


புறத்திணை (உலகியல்):

*  வெட்சி

* கரந்தை

* வஞ்சி

* காஞ்சி

* நொச்சி

*  உழிஞை

* தும்பை 

*  வாகை 

* பாடாண்

* பொதுவியல் 

* கைக்கிளை 

* பெருந்திணை.

   இவை புறப்பொருள் வெண்பாமாலையில் குறிப்பிடப்படும் திணைகள் ஆகும். புறப்பொருளைத் தொல்காப்பியம் ஏழு திணைகளாகப் பகுத்துக் காட்டுகிறது.

அவை பின்வருமாறு

புறத்திணை             அகத்திணை
* வெட்சி
                                         குறிஞ்சி
• வஞ்சி
                                          முல்லை
• உழிஞை
                                        மருதம்
* தும்பை
                                        நெய்தல்
* வாகை
                                            பாலை
• காஞ்சி
                                      பெருந்திணை
• பாடாண்
                                             கைக்கிளை

செயல்பாடு : 2

குறிப்பிட்ட சில திணைகளை எடுத்துக்காட்டு மூலம் விளக்குதல்.

புறத்திணைக்குச் சான்றாக பாடாண்திணையைச் சான்றுடன் இங்கு பார்க்கலாம்.

திணை: பாடாண் திணை

திணை விளக்கம் :

           ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் போன்ற நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது பாடாண் திணை.

சான்று :

'பதிபிழைப்பு அறியாது துய்த்தல் எய்தி
நிரையம் ஒரீஇய வேட்கைப் புரையோர்'

                                            (பதிற்றுப்பத்து)

சான்று விளக்கம்:

     சேரலாதனே, உன் குடிமக்கள் எப்பொழுதும் நல்ல செயல்களையே செய்து வருபவர்கள் பசி, பிணி அறியாத அவர்கள் நாட்டை விட்டுப் புலம் பெயராமல் உன் நாட்டிலேயே சுற்றத்தாரோடு வாழ விரும்புவர். அவ்வாறான குடிமக்களால் நீ போற்றப் படுகிறாய்.

     இப்பெரிய நிலவுலகில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் இடையறாது கொடுக்கும்
பண்புடையவனே, நீ சான்றோர்களுக்கு அரிய பொருள்கள் நல்குவாய். எப்பொழுதும் விழாக்கள் நிகழும் நாட்டிற்கு நீ உரிமை உடையவன். நெடியோன் போன்ற புகழினை உடைய உன் நாட்டின் வளத்தையும் பகை நாட்டின் அழிவையும் கண்டு வியப்படைகிறேன்.

திணைப் பொருத்தம் :

               "சேரநாடு செல்வ வளம் மிக்கது. இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் தன் நாட்டையும் மக்களையும்
கண்ணெனக்காத்தான்" என்பது போன்ற இமயவர்மன் நெடுஞ்சேரலாதனின் உயர் பண்புகளைப் போற்றுவதாக இப் பதிற்றுப்பத்துப் பாடலைக் குமட்டூர் கண்ணனார் படைத்துள்ளமையால் பாடாண்
திணையாயிற்று.

செயல்பாடு : 3

        அகத்திணைக்குச் சான்றாக குறிஞ்சித் திணையைச் சான்றுடன் விளக்குதல்.

திணை : குறிஞ்சி திணை

முதற்பொருள் :

நிலம் : மலையும் மலை சார்ந்த இடமும்
பொழுது : பெரும்பொழுது - குளிர்காலம், முன்பனிக்காலம்
சிறுபொழுது - யாமம்.
கருப்பொருள் :
 தெய்வம் -  முருகன்
 மக்கள் - குறவர், குறத்தியர்
தொழில்  -  தேனெடுத்தல், கிழங்கு அகழ்தல்
உணவு  -     மலைநெல், தினை
பறவை   -   கிளி, மயில்
விலங்கு   -  புலி,கரடி,சிங்கம்
பூ                 -   குறிஞ்சி, காந்தள்

உரிப்பொருள்:

புணர்தலும் புணர்தல் நிமித்தமும்

சான்று:

" அம்ம வாழி தோழி நம்மூர்ப்
பிரிந்தோர்ப் புணர்ப்போர் இருந்தனர்"

                                         -  குறுந்தொகை

சான்று விளக்கம் :

       தலைவன் தலைவியை மணம் முடிப்பது பற்றிப் பேச சான்றோரை அனுப்புகிறான். தலைவி, அப்போது எங்கே தன் பெற்றோர் மணம் பேச மறுத்து விடுவார்களோ என்று கலங்குகிறாள். இந்நிலையில் தோழி அவளிடம் தலைவனின் தரப்பைத் தலைவியின் பெற்றோர் ஏற்றுக் கொண்டனர்
என்று தேற்றுகிறாள்.

திணைப்பொருத்தம் :

    இப்பாடலில் 'புணர்ப்போர்' என்றவார்த்தை, குறிஞ்சித்திணைக்குரிய உரிப்பொருள் புணர்தலைக் குறிக்கிறது. எனவே இப்பாடல் குறிஞ்சித்திணைக்குரிய சான்றாகும்.

மாணவர் செயல்பாடு

அகத்திணை, புறத்திணைச் சார்ந்த பாடல்களை மாணவர்களுக்குக் கொடுத்துத் திணையைச் சான்றுடன் விளக்கி எழுதச் சொல்லுதல்.

****************    *************    ***********

மதிப்பீடு

1, திணை என்ற சொல்லுக்குப் பொருள் என்ன?

       திணை என்ற சொல்லுக்கு குலம் , நிலம் , ஒழுக்கம் என்ற பல பொருள்கள் உண்டு.


2. திணை எத்தனை வகைப்படும்? அவை யாவை?

திணை இரண்டு வகைப்படும்.

* அகத்திணை - 7 வகைப்படும்

* புறத்திணை  - 12 வகைப்படும்


3. உனக்குத் தெரிந்த புறத்திணைப் பாடல் ஏதேனும் ஒன்றைச் சான்றுடன் விளக்குக.

காய்நெல் அறுத்துக் கவளம் கொளினே ; 

மாநிறைவு இல்லதும் , பல்நாட்கு ஆகும் ; 

நூறுசெறு ஆயினும் , தமித்துப்புக்கு உணினே 

வாய்புகுவதனினும் கால்பெரிது கெடுக்கும்.

திணை :   பாடாண் 

பாடாண் திணை : 

          ஒருவருடைய புகழ் , வலிமை , கொடை , அருள் போன்ற நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது பாடாண் திணையாகும்.

******************    **************   ********

Post a Comment

0 Comments