11 ஆம் வகுப்பு - தமிழ்
புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்
செயல்பாடு - 19
பா மற்றும் பா வகை அறிதல்
கற்றல் விளைவுகள்
* பாக்களைப் பற்றி அறிந்து கொள்ளுதல்.
* பாவின் வகைகளைத் தெரிந்து கொள்ளுதல்.
* பாவின் மூலம் பாடல்கள் எப்படி எழுதுவது என்பதைப் புரிந்து கொள்ளுதல்.
* பாவினைப் பற்றி தெரிந்து கொண்டு பாடல் எழுதும் திறனை வளர்த்துக் கொள்ளுதல்.
ஆசிரியர் செயல்பாடு
ஆர்வமூட்டல் :
மாணவர்களிடம் ஒரு பாடலைப் பாடி இப்பாடல் எப்படி இயற்றுகிறார்கள் தெரியுமா ? எனக் கேட்டு பாடலை இயற்றும் முறையையும் பாடல் இயற்றுவதற்கு பாக்கள் எப்படி பயன்படுகிறது என்பதை எடுத்துக்கூறி முக்கியத்துவத்தை தெரியப்படுத்தி ஆர்வமூட்டல்.
கற்பித்தல் செயல்பாடுகள்
செயல்பாடு :1
பா என்பது பாடல் அல்லது பண் என்ற பொருளில் அமையும். பாட்டு, பாடல், செய்யுள் என்ற பொருளிலும் அமையும். செய்யுள் அல்லது பாடல் எழுதுவதற்கு பா மிகவும் முக்கியமாகும்.
பா, செய்யுள், தூக்கு, கவிதை, பாட்டு ஆகியவை ஒரே பொருளில் வருவன. எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை, பாவின் உறுப்புகளாகும். பாக்களின் வகைகள் அப்பாக்களின் ஓசைகள் பாக்கள் இயற்றுவதற்குரிய விதிமுறைகள் முதலியவற்றை வெளிப்படுத்துவது யாப்பருங்கலக்காரிகை என்னும் நூலாகும். இது யாப்பு என்னும் கடலைக் கடக்க உதவும் நூலாக உள்ளது.
செயல்பாடு : 2
பாவின் வகைகள் :
பாடல் இயற்றுவதற்குப் பயன்படக்கூடிய பா, பல வகைகளைக் கொண்டுள்ளது. தமிழ்ச் செய்யுள் வடிவங்கள் பெரும்பாலும் இசையை அடிப்படையாகக் கொண்டவை. ஓசையே தமிழ் செய்யுள்களை மெருகேற்றும். இவ்வோசை செய்யுளுக்கு மேலும் அழகு சேர்க்கிறது. இத்தகைய சிறப்புமிக்க பா நான்கு வகைப்படும். இந்த நான்கு வகை பாக்கள் மூலமே பாடல்கள் இயற்றப்படுகிறது.
பா வகைகள் :
* வெண்பா
* ஆசிரியப்பா
*வஞ்சிப்பா
* கலிப்பா
பா ஓசைகள் :
* செப்பலோசை
* அகவலோசை
* தூங்கலோசை
* துள்ளலோசை
வெண்பா :
ஈற்றடி மூச்சீரும் ஏனைய அடி நாற்சீரும் பெற்றுவரும். மா முன் நிரை, விளம் முன் நேர், காய்முன் நேர் என்பனவாகிய வெண்பா தளைகளைப் பெற்று வரவேண்டும். வெண்பா புலவர்க்கு வன்பா. வெண்பா பாடுவது கடினம் ஆகும்.
வெண்பா வகைகள் :
* குறள்வெண்பா 2 அடியில் அமைவது
* சிந்தியல் வெண்பா 3 அடியில் அமைவது
* நேரிசை வெண்பா 5 அடியில் வருவது
* பஃறொடைவெண்பா 5 அடி முதல் 12 அடி வரை வரும் 12
கலிவெண்பா 12 அடிகளுக்கு மேல் வரும்.
இவற்றுள் குறள் வெண்பாவும், நேரிசை வெண்பாவும் பயில்வதற்கு எளிமையானது.
செயல்பாடு : 3
ஆசிரியப்பா :
பா இயற்றுவதற்கு உரிய எளிய வடிவமாக ஆசிரியப்பாவைக் கூறலாம் அகவலோசை பெற்றதால் ஆசிரியப்பாவை அகவற்பா என்றும் கூறுவர். ஆசிரியப்பா இரண்டு அசைகளால் அமையும்
ஆசிரியப்பாக்களால் ஆன பாடல்களே சங்ககாலத் தமிழில் மிகுதியாக உள்ளன உரைநடை போன்று அமைவதே ஆசிரியப்பா. அகவலோசை கொண்டது. எல்லா அடிகளும் நான்கு சீர்களைக் பெற்று வரும். இயற்சீர் மிகுந்தும் பிறசீர் கலந்தும் வரும், ஆசிரியத் தளை மிகுந்தும் பிற தளைகள் கலந்தும் வரும். இறுதி அடியின் இறுதி எழுத்து ஏ என்னும் எழுத்தால் முடிவது சிறப்பு.
ஆசிரியப்பாவின் வகைகள் :
* நிலைமண்டில ஆசிரியப்பா எல்லா அடிகளும் நாற்சீராய் வரும்.
* அடிமறி மண்டில ஆசிரியப்பா அடிகளை மாற்றினாலும் ஓசையும் பொருளும் மாறாது.
*நேரிசை ஆசிரியப்பா - ஈற்றடி முச்சீரும் ஏனைய அடிகள் நாற்சீராய் வரும்.
* இணைக்குறள் ஆசிரியப்பா முதல் அடியும் இறுதியடியும் நாற்சீரும் இடையடிகள்
இருசீர், முச்சீரும் பெற்று வரும்.
மாணவர் செயல்பாடு
ஒரு மாணவனை வெண்பாவின் இலக்கணத்தைப் பயன்படுத்தி ஒரு பாடல் எழுதுமாறு கூறி அவன் படைப்பாற்றல் திறனை வளர்த்தல்.
************** *************** *************
மதிப்பீடு :
1. பா என்றால் என்ன?
பா என்பது பாடல் அல்லது பண் என்ற பொருளில் அமையும்.
பாட்டு, பாடல், செய்யுள் என்ற பொருளிலும் அமையும். செய்யுள் அல்லது பாடல் எழுதுவதற்கு பா மிகவும் முக்கியமாகும்.
2. பா எத்தனை வகைப்படும் ?
பா நான்கு வகைப்டும்.அவை ,
* வெண்பா
* ஆசிரியப்பா
* கலிப்பா
* வஞ்சிப்பா
3. வெண்பா எத்தனை வகைப்படும் ?
வெண்பா ஐந்து வகைப்படும்.
*************** ************* ***********
0 Comments