11 ஆம் வகுப்பு - தமிழ் - புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் - 16 , பேச்சு வழக்கை எழுத்து வழக்காக மாற்றுதல் - வினா & விடை /11th TAMIL - PUTHTHAAKKAP PAYIRCHIK.KATTAKAM 16 - QUESTION & ANSWER

 


11 ஆம்  வகுப்பு - தமிழ் 

புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்

செயல்பாடு - 16

பேச்சு வழக்கை எழுத்து

வழக்காக மாற்றுதல்

கற்றல் விளைவுகள்

* பேச்சு மொழி என்பதை அறிதல்

* எழுத்து மொழி என்பதை அறிதல்.

*பேச்சு மொழியில் இருந்து எழுத்து மொழி எவ்வாறு வளர்ச்சி அடைந்தது என்பதை அறிந்து உணர்தல்.

* பேச்சுமொழி எழுத்துமொழி வேறுபாடு அறிதல்.

ஆசிரியர் செயல்பாடு

ஆர்வமூட்டல் :

   மாணவர்களே! வணக்கம். இன்பா , நேற்று ஏன் பள்ளிக்கு வரவில்லை ( நேத்து எனக்கு ஒடம்பு சரியில்லை ஐயா). நீ கூறுவது பேச்சுவழக்கு அதை அப்படியே எழுத்து வழக்காக கூறு எனக் கேட்டு மாணவர்களை ஆர்வமூட்டல். (நேற்று எனக்கு உடம்பு சரியில்லை) - எழுத்து வழக்கு.

கற்பித்தல் செயல்பாடுகள்

செயல்பாடு :1

                     தனது எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் பிறருக்கு வெளிப்படுத்துவதற்காக மனிதனால் உருவாக்கப்பட்டது மொழி. உலக மொழிகள் அனைத்தும் தோன்றிய நாள் முதல் இன்று வரை பல்வேறு மாற்றங்களைப் பெற்று வருகின்றன.

                   மொழி

பேச்சு மொழி - ஒலிவடிவம்

எழுத்து மொழி - வரிவடிவம்

செயல்பாடு :2

பேச்சுமொழி :

       ஒருவருக்கு ஒருவர் நேர்நின்று கருத்தை வெளிப்படுத்தப் பயன்படுத்தும் ஒலி வடிவிலான குறியீட்டைப் பேச்சு மொழி என்று அழைக்கிறோம். பேச்சு மொழி உள்ளத்து உணர்ச்சியின் தூண்டுதல்களை இயல்பாக வெளிப்படுத்தும் ஆற்றல் வாய்ந்தது. இது எழுத்து மொழியில் இருந்து வேறுபட்டது. பேச்சு மொழியே முதலில் தோன்றியது. இதனால் மொழி என்பது அடிப்படையில் பேச்சையே குறிக்கும்.


எழுத்து மொழி :

            எழுத்து மொழிக்குப் பேச்சு மொழியே அடிப்படையாக அமைகின்றது. மக்கள் பேசும் மொழிக்கு ஏற்ற வரிவடிவத்தை உருவாக்கிக் கொண்டு எழுதப்பெறும் மொழி வழக்கை எழுத்து மொழி என்பர். பேச்சு மொழியை ஓடும் ஆறு என்றும் எழுத்து மொழியை ஆற்றில் மிதக்கும் பனிக்கட்டி போன்றது
என்றும் குறிப்பிடுவர் அறிஞர்.

காலம் கடந்து வாழும் தன்மை :

      பேச்சு மொழியை விட எழுத்து மொழியின் ஆயுட்காலம் மிகுதியாகும். குறிப்பிட்ட மொழியைப் பேசும் மக்கள் கூட்டம் அழிவுறும் போது அம்மொழியும் அழிந்து விடுகின்றது. சில நேரங்களில் பேச்சு மொழியில் நிகழும் மாற்றங்களால் அம்மொழி முற்றிலுமாக மற்றொரு மொழியாகத் திரிந்து விடுவதும்
உண்டு. இந்த நிலையிலும் அந்த மொழியின் இயல்பைக் காலம் கடந்தும் காப்பாற்றுவது அம்மொழியின் எழுத்து மொழியே ஆகும்.

சான்று :

இலக்கியங்கள், இலக்கணங்கள், கல்வெட்டுகள்.

செயல்பாடு : 3

               சிலர் பேச்சு வழக்கில் உள்ளவாறே எழுதும்பொழுதும் எழுதுகிறார்கள். இதனால் மொழிவளம் கெடுகின்றது. கீழே சில பேச்சு வழக்கு சொற்களுக்கான (வழூஉச் சொற்கள்) எழுத்து வழக்குச் சொற்களைக் காணலாம்.

பேச்சு வழக்கு    -       எழுத்து வழக்கு

அட மழை         -      அடை மழை

 உசிர்                 -     உயிர்

கடசி                   -    கடைசி

நேத்து                 -   நேற்று

 சமயல்                -    சமையல்

சேதி                     -    செய்தி

வெக்கம்              -    வெட்கம்

செயல்பாடு: 4

எழுத்து வழக்கை கற்பதற்கான வழிகள் :

* சொற்களின் சரியான எழுத்து வடிவங்களை எழுதிப் பழகுதல்.

* தமிழ் அகராதி ஒன்றைப் புரட்டி ஐயத்தைப் போக்கிக் கொள்ளுங்கள். அகராதியைத் தவிரச் சிறந்த துணைவன் வேறு இல்லை .

* சொற்களைச் சேர்த்து எழுதும்போது ஒற்று சந்திப்பிழைகள் ஏற்படாத வண்ணம் எழுதிப் பழக வேண்டும்.

* இலக்கணப் பிழை, வாக்கியப் பிழை முதலியன இன்றி எழுதப் பழகிக் கொள்ளவேண்டும்.

* கலப்பு நடையைத் தவிர்த்தல் வேண்டும்.


பேச்சு வழக்கு சொற்றொடரை எழுத்து வழக்கு சொற்றொடராக எவ்வாறு மாற்றுவது என்பதை சில சான்றுகள் மூலம் காணலாம்.

பேச்சு வழக்கு                       எழுத்து வழக்கு

நீ நல்லா படிச்சு நல்ல மார்க் வாங்கணும் - 

நீ நன்றாக படித்து நிறைய மதிப்பெண்
வாங்க வேண்டும்

நிலத்தக் கௌறணும்டா அப்பதான் 
வகுறு நிறையும்

நிலத்தை கிளற வேண்டும் - 
அப்பொழுதுதான் வயிறு நிறையும்

அன்றைக்கு அவனுக்குப் பணம் கொடுத்து
உதவியிருக்க வேண்டியதுதானே?

அண்ணைக்கு அவனுக்குப் பணம் குடுத்து
ஒதவியிருக்க வேண்டியதுதான

வூட்டாண்ட வெளையாண்ட கொயந்தையை
அப்பா எங்க இஸ்துகினு போனாரு

வீட்டிற்கு அருகில் விளையாடிய குழந்தையை
அப்பா எங்கே கூட்டிக்கொண்டு போனார் ?

மாணவர் செயல்பாடு

             பேச்சு வழக்கு சொற்றொடரை மாற்றி எழுத்து வழக்கு சொற்றொடராகக் கரும்பலகையில் எழுதச் சொல்லுதல்.

***************    ************  ***************

                          மதிப்பீடு

1. பேச்சு வழக்கு என்றால் என்ன ?

               ஒருவருக்கு ஒருவர் நேர்நின்று கருத்தை வெளிப்படுத்தப் பயன்படுத்தும் ஒலி வடிவிலான குறியீட்டைப் பேச்சு மொழி என்று அழைக்கிறோம்.


2. எழுத்து வழக்கு என்றால் என்ன ?

                மக்கள் பேசும் மொழிக்கு ஏற்ற வரிவடிவத்தை உருவாக்கிக் கொண்டு எழுதப்பெறும் மொழி வழக்கை எழுத்து மொழி என்பர்

3. பேச்சு வழக்கிற்கும் எழுத்து வழக்கிற்கும் உள்ள வேறுபாடு யாது ?

பேச்சு வழக்கு      -     எழுத்து வழக்கு 

* ஒலி வடிவம்         -   வரி வடிவம்

* ஓடும் ஆறு போன்றது   - ஆற்றில்        
                                                     மிதக்கும்                                                    பனிக்கட்டி  போன்றது.

************    **************   **************
Post a Comment

0 Comments