11 ஆம் வகுப்பு - தமிழ்
புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்
செயல்பாடு - 14
உவமையைப் பயன்படுத்தி
சொற்றொடர் அமைத்தல்
கற்றல் விளைவுகள்
* உவமையைப் பற்றி அறிந்து கொள்ளுதல்.
* உவமை எவற்றின் அடிப்படையில் தோன்றும் என்பதைப் புரிந்துகொள்ளச் செய்தல்.
* உவமைகளையும் பழமொழிகளையும் பயன்படுத்தி ஒரு தொடரை உருவாக்கும் முறையைத்தெரிந்து கொள்ளுதல்.
ஆசிரியர் செயல்பாடு
ஆர்வமூட்டல் :
மாணவர்களே! உவமை என்றால் என்ன என்பதை வினவி அதன் வழியாக உவமையின் சிறப்புகள், உவமை தோன்றும் விதம், பழமொழிகளின் வழியாக உவமைகளைப் பயன்படுத்தி சொற்றொடர் அமைக்கும் முறையைக் கூறி ஆர்வமூட்டுதல்.
கற்பித்தல் செயல்பாடுகள்
செயல்பாடு : 1
உவமை என்பதன் விளக்கம்:
ஒரு செய்தியைக் கூறும் பொழுது எளிதாக புரிந்து கொள்ளும் வகையிலும் கேட்பவர் மனதை ஈர்க்கும் வகையிலும் பயன்படுத்தப்படும் சொல்லே உவமையாகும்.
உவமை :
வினை, பயன், வடிவம், உரு என்ற நான்கின் அடிப்படையில் தோன்றும் என்கிறார் தொல்காப்பியர்.
"வினை பயன் மெய் உரு என்ற நான்கே
வகை பெற வந்த உவமத்தோற்றம்"
தொல்காப்பியம் (1222)
ஒன்றை விளக்கவும் தெளிவுபடுத்தவும் அழகுபடுத்தவும் உவமையே எளிமையானதும் தொன்மையானதும் ஆகும்.
உவமைகளைப் பயன்படுத்தி சொற்றொடர் அமைக்கும் பொழுது பெரும்பாலும் உவம உருபான போல என்ற சொல் வெளிப்படையாய் அமையும்.
சான்று:
நகமும் சதையும் போல
"அவர் இருவரும் நெருங்கி பழகி வந்தனர்" என்பதை "அவர் இருவரும் நகமும் சதையும் போல பழகி வந்தனர்" என்று கூறும்பொழுது தெளிவும் நலமும் கொண்டு பொருள் விளங்குகின்றது என்பதை அறியலாம்.
சில உவமைத் தொடர்களுக்கான பொருளைக் காணலாம்.
அடியற்ற மரம் போல - விழுதல்
அனலில் விழுந்த புழுப்போல - துன்பம்
ஆழம் தெரியாமல் காலை விட்டது போல - திட்டமிடாமை
இஞ்சி தின்ற குரங்கு போல - விழித்தல்
இருதலைக் கொள்ளி எறும்பு போல - தவிப்பு
இலவு காத்த கிளி போல - ஏமாற்றம்
உள்ளங்கை நெல்லிக்கனி போல -
தெள்ளத் தெளிவு
எலியும் பூனையும் போல - பகை
சீறிய நாகம் போல - கோபம்
உடுக்கை இழந்தவன் கைபோல - துன்பம்
செயல்பாடு :2
உவமைத் தொடர்களை வாக்கியத்தில் அமைத்தல் :
1. அடியற்ற மரம் போல - பாண்டிய நெடுஞ்செழியன் உயிர்நீத்த உடனே கோப்பெருந்தேவி "அடியற்ற மரம் போல" மண் மிசைசாய்ந்து உயிர் நீத்தாள்.
2. இலவு காத்த கிளி போல - பெரு வெள்ளத்தால் வயல் முழுவதும் மணல் மேடாகி பயிர்களை மூடி விட்டபடியால் நாளெல்லாம் பாடுபட்ட உழவன் "இலவு காத்த
கிளி போல ஏமாற்றம் அடைந்தான்.
3. உள்ளங்கை நெல்லிக்கனி போல - ஆசிரியர் கூறிய செய்தி "உள்ளங்கை நெல்லிக்கனி போல" தெளிவாக விளங்கியது.
4. அனலில் விழுந்த புழுப்போல - கோவலன் கொலையுண்ட செய்தியைக் கேட்ட கண்ணகி
"அனலில் விழுந்த புழுப்போல" துடித்தாள்.
மாணவர் செயல்பாடு
மாணவர்களிடம் சில உவமைத் தொடர்களைக் கூறி அவற்றின் பொருளைக் கேட்டறிந்து வாக்கியத்தில் அமைக்கும் முறையைக் கரும்பலகையில் எழுதச் செய்தல்.
************** *********** ****************
மதிப்பீடு
பின்வரும் உவமைத் தொடர்களுக்கு உரிய பொருளையும் அவற்றை வாக்கியத்தில் அமைத்தும் எழுதுக.
1. சிதறிய முத்து போல
குழந்தையின் சிரிப்பு சிதறிய முத்துப்போல இருந்தது.
2. கிணற்றுத் தவளை போல
கல்வியறிவற்றோர் கிணற்றுத்தவளை போல வாழ்வர்.
3. உள்ளங்கை நெல்லிக்கனி போல
அன்னைத் தெரசாவின் புகழ் உள்ளங்கை நெல்லிக்கனி போன்றது.
4. எலியும் பூனையும் போல
எலியும் பூனையும் போல நானும் என் தங்கையும் சண்டையிட்டோம்.
5. அச்சாணி இல்லாத தேர் போல
தலைவன் இல்லாத படை அச்சாணி இல்லாத தேர் போல இருக்கும்.
************* *********** ********* *******
0 Comments