பத்தாம் வகுப்பு - தமிழ்
புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்
செயல்பாடு : 11
11. உரையாடல் எழுதுதல்
கற்றல் விளைவு:
தனது சொந்த அனுபவங்களைத் தனது சொற்களில் பயன்படுத்தி வெவ்வேறு முறைகளில் எழுதுதல்,
கற்பித்தல் செயல்பாடு :
அறிமுகம்:
உரையாடல் என்பது ஒருவகை தகவல் பரிமாற்றம் ஆகும். இருவர் பங்கேற்றுச் செய்திகளைப் பரிமாறுவது உரையாடல் எனப்படும். இரண்டிற்கு மேற்பட்டோர் பங்கேற்பது கலந்துரையாடல் எனப்படும்.
உரையாடல்
நேரடியாகவோ அல்லது தொலைபேசி போன்ற தகவல் தொடர்பு சாதனங்கள் மூலமாகவோ உரையாடல் நிகழலாம். உரையாடல் எல்லா இடங்களிலும் நிகழும். வீட்டில், பள்ளியில், அலுவலகத்தில், அங்காடிகளில், பொழுதுபோக்கு இடங்களில் என மக்கள் புழங்கும் இடங்களில் எல்லாம் ஏதோ ஒரு வகையில் உரையாடல் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.
விளக்கம்
(எ.கா.) வீட்டில் நிகழும் உரையாடல் ஒன்றைப் பார்ப்போமா?
இனியா : இன்று நானும் உன்னுடன் கடைவீதிக்கு வருகிறேன் அண்ணா!
அருண்மொழி : இன்று முடியாது இனியா. என்னுடன் என் நண்பனும் வருகிறான். இருசக்கர வாகனத்தில் இருவர் மட்டுமே செல்ல முடியும்.
இனியா : சரி அண்ணா. நாளை என்னை அழைத்துச் செல்வாயா?
அருண்மொழி : நிச்சயமாக அழைத்துச் செல்வேன்.
இவ்வாறு ஏதேனும் ஒரு பொருளைப் பற்றியோ, ஒரு நிகழ்வைப் பற்றியோ இருவர் உரையாடலாம். விவாதம், சொற்போர், வெட்டியும் ஒட்டியும் பேசுதல் போன்றவையும் உரையாடல் வடிவில் அமையலாம்.
கலந்துரையாடல்
இரண்டிற்கு மேற்பட்டோர் பங்கேற்று உரையாடுவது கலந்துரையாடல் ஆகும். இது
முத்தமிழில் ஒன்றான நாடகத்தில் மிகுதியும் பயன்படுத்தப்படும். கூட்டங்கள், கருத்துக்
கேட்பு நிகழ்வுகள் போன்றவற்றில் பலரின் கருத்துகளை ஒரே நேரத்தில் அறிய
கலந்துரையாடல் உதவும்.
ஆண்டுவிழா, விளையாட்டு விழா, இலக்கியமன்ற விழா போன்ற பள்ளி விழாக்களில் இடம்பெறும் நாடகங்கள், பட்டிமன்றங்கள் கலந்துரையாடல் வகையைச்
சேர்ந்தவை என்பதை அறிவீர்களா?
(எ.கா.) கலந்துரையாடல்
மாலா : இந்த ஊரடங்கு நேரத்தில் பள்ளிக்குச் செல்லாமல் இருப்பது எனக்குப் பிடிக்கவே இல்லை.
சிவா : எங்களுக்கு மட்டும் பிடித்திருக்கிறதா என்ன?
குமுதா : ஆமாம். அது காலத்தின் கட்டாயம் என்று என் அம்மா கூறுகிறார்.
மதுரா : என்ன செய்வது? பள்ளிக்கு நாம் செல்லாவிட்டாலும் நமக்குக் கிடைத்துள்ள
பயிற்சிப் புத்தகங்களைப் பயன்படுத்தி நம்முடைய பாடங்களைப் படிக்கலாம்.
மாலா : எனக்கும் அதுதான் சரி என்று தோன்றுகிறது.
ஒரு கருத்தைக் குறித்து ஒன்றிற்கு மேற்பட்டோர் இவ்வாறு தங்கள்
கருத்துகளைப் பேச்சின்மூலம் வெளிப்படுத்துவது கலந்துரையாடல் ஆகும்.
தற்போது வெவ்வேறு இடங்களில் இருப்பவர்களும் தகவல்தொடர்புச்
சாதனங்கள் மூலமாக ஒரேநேரத்தில் கலந்துரையாடல் நடத்துவதுவழக்கத்தில்
உள்ளது.
**************** ************* ************
மதிப்பீட்டுச் செயல்பாடுகள்
உரையாடலை நீட்டித்து எழுதுக.
விரலும் நகமும் பேசுவது போன்ற ஒரு கற்பனை உரையாடல்.
நகம் : ஏன் அண்ணா, சோகமாக இருக்கிறாய்? என்ன காரணம்?
விரல் : ம்ம்ம்....! பழி ஓரிடம்; பாவம் ஓரிடம் என்பார்கள். என்னுடைய சோகத்திற்குக்
காரணம் நீதான் தெரியுமா?
நகம் : நானா? எப்படி என்று விளக்கமாகக் கூறுங்கள் அண்ணா!
விரல் : நீ தான் என்னைத் தாண்டி நீளமாக வளர்ந்து கொண்டே இருக்கிறாயே!
நகம் : அதுதான் அடிக்கடி என்னை வெட்டி விடுகிறார்களே!
விரல் : இருந்தாலும்... நேற்று ஒரு தாய் தன் மகனிடம், "உன்னுடைய நகத்தை
ஒழுங்காக வெட்டாமல் விட்டுவிட்டால் விரலையே வெட்டி விடுவேன்"
என்று கூறிக் கண்டித்தார். வளர்வது நீ; வெட்டுவது என்னையா? என்ன
கொடுமை இது!
நகம் : கண்டிப்புக்காக அப்படிச் சொல்வார்கள். என்னைத்தான் வெட்டுவார்கள். உன்னை அல்ல.
விரல் : நீ ஏன் இப்படி வளர்ந்து கொண்டே இருக்கிறாய் ?
நகம் : அது எனது இயல்பு ; வளர்வதே என் வாழ்வு.
விரல் :வெட்டுகிறார்களே என்று வேதனைப்படாதே ! என் அழகுக்கு நீயும் காரணமல்லவா ?
நகம் : வண்ணமிடுவதில் எனக்கும் மகிழ்ச்சிதான். ஆனால் ...
விரல் : ஆனால் என்று இழுக்கிறாயே !
நகம் : கண்ட கண்ட சாயங்களைப் பூசி நலத்தைக் கெடுத்துக் கொள்கிறார்களே !
விரல் : ஆமாம் ! நாகரிகம் என்ற பெயரில் நஞ்சை விரும்புகிறார்கள்.
நகம் : மருதாணி இலையின் மணமும் வண்ணமும் எனக்கு விருப்பம்.
விரல் : நீ சொல்வது சரி. எனக்கும்தான்.
நகம் : வளர்வது என் இயல்பென்றாலும் என்னை எப்போதும் கவனிப்பது மனிதர்களின் இயல்பாக இருக்க வேண்டும் .
விரல் : ஆமாம் ! நீதானே நலம் காட்டும் கண்ணாடி.
நகம் : சரியாகச் சொன்னாய்.
விரல் : உன்னைக் கவனித்தால் உடல் நரம் தெரியும். உன்னைத் தூய்மையாக வைத்தால் உடல் நலம் பெறும்.
நகம் : நன்றி விரலே ! இதை மனிதருக்குக் கூறு.
விரல் : நிச்சயம் கூறுவேன். நன்றி.
************* ************* ************
நன்றி -
விடைத்தயாரிப்பு :
திரு.மணி மீனாட்சி சுந்தரம் ,
தமிழாசிரியர் , அ.மே.நி.பள்ளி ,
சருகுவலையபட்டி , மேலூர் , மதுரை.
************ ************** ************
0 Comments