வகுப்பு 8 - தமிழ் - இயல் 1 - கற்கண்டு - எழுத்துகளின் பிறப்பு - முயற்சிப் பிறப்பு / 8th TAMIL - EYAL 1 - KARKANDU - EZHUTHUKALIN PIRAPPU - PART - 2

 

                   வகுப்பு - 8 , தமிழ் 

                இயல் 1 - கற்கண்டு 

      எழுத்துகளின் பிறப்பு - பகுதி - 2

                          முயற்சிப் பிறப்பு 



**************   **************   ************

                  வணக்கம் அன்பு நண்பர்களே !  எட்டாம் வகுப்பு தமிழ் இயல் ஒன்றில் கற்கண்டு பகுதியாய் அமைந்துள்ள எழுத்துகளின் பிறப்பு பற்றி இன்றைய வகுப்பில் காண்போம். இது இரண்டாம் பகுதி. முதல் பகுதியில் எழுத்துகளின் இடப்பிறப்பு பற்றிக் கண்டோம்.

         இதில் எழுத்துகளின் முயற்சிப் பிறப்பு பற்றிக் காண்போம். பாடப்பகுதிக்குள் செல்லும் முன்பாக நம்முடைய பெரும்புலவர். திரு.மு.சன்னாசி ஐயா அவர்கள் தரும் விளக்கத்தைக் காண்போமா ?




  காட்சிப் பதிவினைக் கண்டீர்களா நண்பர்களே ! 


எழுத்துகளின் முயற்சிப் பிறப்பு

உயிர் எழுத்துகள்

* அ, ஆ ஆகிய இரண்டும் வாய் திறத்தலாகிய முயற்சியால் பிறக்கின்றன.

* இ, ஈ, எ, ஏ, ஐ ஆகிய ஐந்தும் வாய்திறக்கும் முயற்சியுடன் நாக்கின் அடி ஓரமானது மேல்வாய்ப் பல்லைப் பொருந்தும் முயற்சியால் பிறக்கின்றன.

* உ, ஊ, ஒ, ஓ, ஔ ஆகிய ஐந்தும் வாய்திறக்கும் முயற்சியுடன் இதழ்களைக் குவிப்பதால் பிறக்கின்றன.

மெய் எழுத்துகள்

* க், ங் - ஆகிய இருமெய்களும்நாவின் முதற்பகுதி அண்ணத்தின் அடிப்பகுதியைப் பொருந்துவதால் பிறக்கின்றன.

* ச், ஞ் - ஆகிய இருமெய்களும் நாவின் இடைப்பகுதி, நடு அ ண்ணத்தின் இடைப்பகுதியைப் பொருந்துவதால் பிறக்கின்றன.

* ட், ண் - ஆகிய இருமெய்களும் நாவின் நுனி, அண்ணத்தின் நுனியைப் பொருந்துவதால் பிறக்கின்றன.

* த், ந் - ஆகிய இருமெய்களும் மேல்வாய்ப்பல்லின் அடியைநாக்கின் நுனி பொருந்துவதால் பிறக்கின்றன.

* ப், ம் - ஆகிய இருமெய்களும் மேல் இதழும் கீழ் இதழும் பொருந்துவதால் பிறக்கின்றன.

*ய் - இது நாக்கின் அடிப்பகுதி, மேல் வாய் அடிப்பகுதியைப் பொருந்துவதால் பிறக்கிறது.

*ர், ழ் - ஆகிய இருமெய்களும் மேல்வாயை நாக்கின் நுனி வருடுவதால் பிறக்கின்றன.

* ல் - இது மேல்வாய்ப் பல்லின் அடியை நாக்கின் ஓரங்கள் தடித்து நெருங்குவதால் பிறக்கிறது.

* ள் - இது மேல்வாயை நாக்கின் ஓரங்கள் தடித்துத் தடவுதலால் பிறக்கிறது.

*வ் - இது மேல்வாய்ப்பல்லைக் கீழ் உதடு பொருந்துவதால் பிறக்கிறது.

* ற்,ன் - ஆகிய இருமெய்களும் மேல்வாயை நாக்கின் நுனி மிகவும் பொருந்துவதால் பிறக்கின்றன.

சார்பெழுத்துகள்

ஆய்த எழுத்து வாயைத்திறந்து ஒலிக்கும் முயற்சியால் பிறக்கிறது. பிற சார்பெழுத்துகள் யாவும் தத்தம் முதலெழுத்துகள் தோன்றும் இடங்களிலேயே அவை பிறப்பதற்கு உரிய முயற்சிகளைக் கொண்டு தாமும் பிறக்கின்றன.


Post a Comment

0 Comments