11 ஆம் வகுப்பு - தமிழ் - ஒப்படைப்பு 2 - வினாக்களும் விடைகளும் - இயல் 2 - இயற்கை , சுற்றுச்சூழல் / 11th TAMIL - ASSIGNMENT - 2 , EYAL 2 - QUESTION & ANSWER

 


ஒப்படைப்பு  - 2 , வினாக்களும் விடைகளும்

                            வகுப்பு : 11 

          பாடம் : பொதுத்தமிழ்

                           இயல் -2 

(இயற்கை, வேளாண்மை, சுற்றுச்சூழல்-
மாமழை போற்றுதும்)

                     பகுதி-அ

1.ஒருமதிப்பெண்வினா

1 . மண்ணுக்கு வளம் சேர்ப்பன

அ) மண்புழு

ஆ) ஊடுபயிர் 

இ) இயற்கை உரங்கள் 

ஈ ) இவை மூன்றும்

விடை : ஈ ) இவை மூன்றும்.


2 ) பொருத்தமான இலக்கிய வடிவம் எது?


அ) ஏதிலிக்குருவிகள் - மரபுக்கவிதை 

ஆ) திருமலை முருகன் பள்ளு-சிறுகதை

இ ) யானை டாக்டர் - குறும் புதினம்

 ஈ) ஐங்குறுநூறு - புதுக்கவிதை

விடை : இ ) யானை டாக்டர் - குறும் புதினம்


3 )கருப்பட்டி, பனங்கற்கண்டு போன்றவை

அ. மதிப்புக் கூட்டுப் பொருள்கள் 

ஆ.நேரடிப் பொருட்கள்


அ) அ மட்டும் சரி

ஆ)ஆ மட்டும் சரி

இ) இரண்டும் சரி

ஈ) அ தவறு, ஆ சரி

விடை : அ ) அ மட்டும் சரி


4 ) இலக்கணக் குறிப்பு தருக.

1.செங்கயல்

2. மஞ்ஞையும் கொண்டலும்

அ) 1. பண்புத்தொகை, 2. முற்றும்மை 

ஆ)1 பண்புத்தொகை, 2உம்மைத்தொகை

இ)1உம்மைத்தொகை,2. எண்ணும்மை

 ஈ) 1.பண்புத்தொகை, 2 எண்ணும்மை

விடை : ஈ ) 1  பண்புத்தொகை , 2 எண்ணும்மை


5 ) பொருத்துக


அ) அடி அகரம் ஐ ஆதல் 1) செங்கதிர்

ஆ)முன் நின்ற மெய் திரிதல் - 2)

 பெருங்கொடை

இ)ஆதிநீடல் - 3) பைங்கூழ்

ஈ) இனமிகல் - 4) காரிருள்

அ)  1, 3, 2 , 4         ஆ ) 4, 3 , 2, 1

இ ) 3, 1, 4, 2           ஈ ) 3, 2, 1 , 4

விடை : இ ) 3 , 1 , 4 , 2 


6 ) பிழையான தொடரைக் கண்டறிக.

அ) பதநீரிலிருந்து பனங்கற்கண்டு கருப்பட்டி போன்றவற்றைத் தயாரிக்கின்றனர்.

ஆ) ஏதிலிக் குருவிகள் என்பது வாழ்வதற்கான சூழல் கிடைக்காத குருவிகளாகும்.

இ) குறைந்த எட்டுத்தொகை அடிகளை ஐங்குறுநூறு நூல்களுள் உடையது.

ஈ) யானைகளால் வெகு தொலைவில் உள்ள நீரினை வாசனை மூலம் அறிய முடியும்.

விடை : இ ) குறைந்த எட்டுத்தொகை அடிகளை ஐங்குறுநூறு நூல்களுள் உடையது.

7 ) "வான் பொய்த்தது” என்ற சொற்றொடர் உணர்த்தும் மறைமுகப் பொருள்

அ) வானம் இடிந்தது 

ஆ) மழை பெய்யவில்லை

இ) மின்னல் வெட்டியது 

ஈ) வானம் என்பது பொய்யானது

விடை : ஆ ) மழை பெய்யவில்லை.

8 ) 'யானைடாக்டர்" என்னும் சிறுகதையின் ஆசிரியர்


அ) முத்துலிங்கம் 

ஆ) ஜெயமோகன்

இ) சி.சு செல்லப்பா 

ஈ) பிரபஞ்சன்

விடை : ஆ ) ஜெயமோகன்


9 )திருமலை முருகன் பள்ளு என்ற நூலின் ஆசிரியர்

அ) பெரியவன் கவிராயர் 

ஆ) அழகிய பெரியவன்

இ) பேயனார் 

ஈ) பிரமிள்

விடை : அ ) பெரியவன் கவிராயர்

10. ஐங்குறுநூற்றில் குறிஞ்சித் திணையைப் பாடிய புலவர்


அ) ஓரம்போகியார்         ஆ) அம்மூவனார்

இ) ஓதலாந்தையார்         ஈ) கபிலர்

விடை :  ஈ ) கபிலர்


                                 பகுதி-ஆ

II குறுவினா

11. தமிழ்நாட்டின் மாநில மரம் - சிறுகுறிப்பு வரைக.

* தமிழ் நாட்டின் மாநில மரம் பனைமரம்

* இது ஏழைகளின் ' கற்பக விருட்சம் ' 

* சிறந்த காற்றுத் தடுப்பான்

* ஆழத்திர் நீர்மட்டம் குறையாமல் , நீரைச் சேமித்து வைக்கும் தன்மையுடையது.


12 காற்றின் தீராத பக்கங்களில் எது எதனை எழுதிச் சென்றது?

                    சிறகிலிருந்து பிரிந்த இறகு ஒன்று நிலத்துக்கும் , வானுக்கும் இடைப்பட்ட பகுதியில் நிகழும் காற்றின் தீராத தழுவல்களால் மண்ணில் வீழாது ஒரு பறவையின் வாழ்வை எழுதிச் செல்கிறது.


13. அலர்ந்து - பகுபத உறுப்பிலக்கணம் தருக.


அலர்ந்து - அலர் + த் ( ந்  ) + த் + உ 

அலர் - பகுதி 

த்  - சந்தி 

த்  ( ந் ) ஆனது விகாரம்

த் - இறந்த கால இடைநிலை

உ - வினையெச்ச விகுதி

14. ஏதிலியாய்க் குருவிகள் எங்கோ போயின .தொடரின் பொருள் யாது?

* மரங்கள் வெட்டப்பட்டு விட்டதால் காடுகள் அழிந்து போயின.

* மழை பெய்யவில்லை .

* மண்வளம் குன்றியது.

* இயற்கைச் சூழலில் பல மாற்றங்கள் ஏற்பட்டு விட்டதால் வாழ்வதற்கான சூழல் இல்லாததால் குருவிகள் எங்கெங்கோ தம் இருப்பிடம் தேடி அலைந்தன.


15. வளருங்காவில் முகில்தொகை ஏறும் பொன் மாடம் எங்கும் அகிற்புகை நாறும் வண்ணமிட்ட தொடர் குறிப்பிடுவது என்ன?

* தென்கரை நாட்டின் நீண்டு வளர்ந்த சோலையில் மேகக் கூட்டங்கள் தங்கிச் செல்லும்.

*  அந்த அளவிற்குத் தென்கரை நாட்டின் சோலை வளமுடன் செழித்து வானாள நீண்டு வளர்ந்து காணப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது.


                         பகுதி - இ

III.சிறுவினா


16. தமிழ் நெடுங்கணக்கு வரிசையில் இனவெழுத்துகளின் பங்கைக் குறிப்பிடுக.

           உயிர் - 12 ம் , மெய் - 18 ம் சேர்ந்து 216 உயிர்மெய் எழுத்துகளாக உருவாவதை வரிசையாய்க் கொண்டுள்ளன.

இனவெழுத்துகள் : 

                    தமிழ் நெடுங்கணக்கு வரிசையில் வல்லின மெய்கள் ஒவ்வொன்றிற்கும் அவற்றிற்கு இனமான மெல்லின மெய்கள் அடுத்தடுத்து வந்து இனவெழுத்துகளாய் பங்கு பெறுகின்றன.

எ.கா : வல்லினம்  - க் - க , கா , கி , கீ ...

மெல்லினம் - ங் - ங , ஙா , ஙி , ஙீ ...


17, வேதிக்கலப்பில்லாத பூச்சிக்கொல்லி நடைமுறைக்குச் சாத்தியமா?- நும் கருத்தை எழுதுக.

வேதிக்கலப்பில்லாத பூச்சிக்கொல்லி சாத்தியமே !

* விளைச்சல் கூட வேண்டும் என நினைத்து , ஏராளமான உரங்களைப் போட்டால் நாளாக நாளாக மண் நஞ்சாகிப் போய் விளைச்சலும் குறைந்துவிடும்.

* நம் முன்னோர்கள் எந்த இரசாயனப் பொருட்களையும் பயன்படுத்தவில்லை.

* வேப்பங்கொட்டை , நொச்சி இலை , புங்கன் , பிரண்டை , கற்றாழை எல்லாவற்றையும் நன்றாக இடித்துக் கோமியத்தில் ஊற வைத்து அதைத் தெளித்தால் போதும்.

* பூச்சிகள் நீங்கிவிடும். பயிர்களும் பாதுகாப்புப் பெறும்.

* நிலத்திலுள்ள மண்புழு போன்ற சிறிய உயிர்கள் அழிவது தடுக்கப்படும்.

* மண்ணிலுள்ள நுண்ணுயிர்ப் பெருக்கத்தினால் , மண்ணும் தன் வளத்தை இழக்காமல் வலுப்பெறுகிறது. எனவே , வேதிக் கலப்பில்லாத பூச்சிக்கொல்லி நடைமுறைக்குச் சாத்தியமே என்று நான் கருதுகிறேன்.


18 ) "சலச வாவியில் செங்கயல் பாயும் - இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக.

     இடம் : பெரியவன் கவிராயர் இயற்றிய ' திருமலை முருகன் பள்ளு ' என்ற சிற்றிலக்கிய நூலில் வடகரை நாட்டின் வளத்தைக் குறிக்க ' சலச வாவியில் செங்கயல் பாயும் ' என்று பாடியுள்ளார்.

பொருள் : வடகரை நாட்டிலுள்ள தாமரைத் தடாகத்தில் மீன்கள் துள்ளிப் பாய்ந்து விளையாடும்.

விளக்கம் : 

                   வடகரை நாட்டிலுள்ள தாமரைத் தடாகத்தில் மீன்கள் துள்ளிப் பாய்ந்து விளையாடும். முத்துகளை ஈன்ற வெண்மையான சங்குகள் பரவிக் காணப்படும்.மின்னலையொத்த பெண்கள்  ' பெய் ' என்றால் மழை பெய்யும் . முனிவர்கள் கூறும் வார்த்தைகள் ' மெய் ' ஆகும்.

          இத்தன்மை கொண்ட திருமலையில் புலவர்கள் போற்றுகின்ற திருமலைச்சேவகன் வீற்றிருக்கின்றார் என்று ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்.


19. காற்றில் ஆடும் புல் வீடுகளுக்கு அழகிய பெரியவன் தரும் ஒப்பீடு யாது? ஏன்?

தூக்கணாங்குருவிக்கூடு : 

* தூக்கணாங்குருவிக் கூடுகள் காண்பதற்குக் காற்றில் ஆடும் புல் வீடுகள் போன்று இருப்பதாக  ஒப்பீடு கூறியுள்ளார் அழகிய பெரியவன்.

* முன்பெல்லாம் அடைமழைக்காலம் என்றாலே நீர் கரைபுரண்டு ஓடும்.

* இரு கரையெங்கிலும் நீண்ட , அடர்ந்த மரங்கள் காணப்படும்.

* அவற்றினூடே செல்லும் வழியெங்கிலும் பறவைகளின் களிகுரல்கள் ஒலித்துக்கொண்டே இருக்கும்.

* வழியெங்கும் தூக்கணாங்குருவி  புற்களால் கட்டிய கூடுகள் காற்றில் அசையும் போது புல் வீடுகள் போன்று இருப்பதாக ஆசிரியர் கூறுகிறார்.


20. ஐங்குறுநூற்றுப் பாடல் சுட்டும் திணை,
முதற்பொருள், கருப்பொருள்களை
அட்டவணைப்படுத்துக.

திணை : முல்லைத்திணை 

* முதற்பொருள் : நிலமும் பொழுதும் 

   நிலம்  - காடும் காடு சார்ந்த பகுதியும்

   பொழுது - சிறுபொழுது - மாலை 

   பெரும்பொழுது - கார்காலம் 

* கருப்பொருள் 

தெய்வம் - திருமால்

மக்கள்  - ஆயர் , ஆய்ச்சியர் 

பண் - முல்லைப்பண்

தொழில் - ஏறுதழுவுதல்

* உரிப்பொருள் - இருத்தலும் இருத்தல் நிமித்தமும்.


                                பகுதி-ஈ
IV.நெடு வினா

21 திருமலை முருகன் பள்ளு கூறும் வடகரை, தென்கரை நாட்டுப் பாடல்கள் வழி இயற்கை
வளங்களை விவரிக்க.

பள்ளு : 96 வகையான சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று.  இது ' உழத்திப் பாட்டு ' எனவும் அழைக்கப்படும். தொல்காப்பியம் குறிப்பிடும் ' புலன் ' என்னும் இலக்கிய வகையைச் சார்ந்தது.

வடகரை நாட்டின் இயற்கை வளம் : 

    i ) வடகரை நாட்டில் மலரில் மொய்க்கும் வண்டுகள் இந்தளம் என்ற பண்ணை ரீங்காரமிட்டுப் பாடும். வண்டின் இசைகேட்டு வாய்க்காலின் மதகுகளிடையே கட்டப்பட்ட சங்கிலியில் மீனைப் பிடித்து உண்பதற்காக வந்த உள்ளான் பறவை  வாலை ஆட்டிக்கொண்டு அமர்ந்திருக்கும்.

(ii) தாமரைத் தடாகத்தில் மீன்கள் துள்ளிப் பாய்ந்து விளையாடும். முத்துகளை ஈன்ற வெண்மையான சங்குகள் பரவிக் காணப்படும்.

(iii )  மின்னலையொத்த பெண்கள், பெய் என்றால் மழை பெய்யும். உள்ளங்கை ஏந்தி இரந்து உண்ணும் இயல்புடைய முனிவர்கள் கூறும் வார்த்தைகள் மெய்யாகும்.

(iv) இத்தன்மை கொண்ட திருமலையில் புலவர்கள் போற்றுகின்ற திருமலைச் சேவகன் வீற்றிருக்கின்றார்.

தென்கரை நாட்டின் இயற்கை வளம்:

 i )   தென்கரை நாட்டின் நீண்டு வளர்ந்த சோலையில் மேகக்கூட்டங்கள் தங்கிச் செல்லும். இந்நாட்டில் உள்ள பொன்னாலான மாட மாளிகைகளில் அகில் புகையின் நறுமணம் பரவிக் கொண்டே இருக்கும்.
இம்மாளிகைகளை மயில்களும் கார்கால மேகங்களும் சூழ்ந்து காக்கும்.

ii ) செங்கோலைக் கொண்ட மன்னர் தென்கரை நாட்டை நீதி தவறாத காவல் காப்பர். இளைய பெண்கள் பொன்னாலான அரங்கில் நடித்து விளையாடி மகிழ்ந்திருப்பர்.

(iii ) இங்குள்ள குளங்களின் அலைகள் முத்துகளை ஏந்தி வரும். அவ்வலைகள் கரைகளில் மோதும்பொழுது முத்துகள் சிதறி வெடிக்கும்.

iv ) இத்தன்மை கொண்ட குற்றாலத்தில் வண்டுகள் மொய்க்கும் கொன்றை மலரைச் சூடியதென்னாடுடைய சிவபெருமானாகிய குற்றால நாதர் வீற்றிருக்கின்றார்.

*************     **************     ************

22 யானை டாக்டர்கதை வாயிலாக இயற்கை உயிரினப் பாதுகாப்பு ஆகியவை குறித்து நீவிர் அறிந்தவற்றைத் தொகுத்து எழுதுக.


முன்னுரை:

              காட்டின் வளத்திற்கு அடிப்படையாக விளங்கும் யானைகளைக் காட்டின் மூலவர்' என்பர். மனிதர்கள் அல்லாத உயிரினங்களில் தன்னை அறியும் ஆற்றலைப் பெற்றதும் மனிதர்களின் குணங்களில் பலவற்றைக் கொண்டதுமான யானைகள் நமது பண்பாடு, கலைகளில் பிரிக்க முடியாத அங்கமாக
விளங்குகின்றன. அவற்றுக்குத் தெரிந்தோ தெரியாமலோ நாம் பல்வேறு இன்னல்களை இழைக்கிறோம் என்பதையறிய ‘வானத்து நிலவும் மண்ணுலகத்துக் கடலும் போல்' என்றும் அலுக்காத யானைகளின்
பேருருக் காட்சியைக் காண அவற்றின் தடத்தைப் பின் தொடர்வோம்.

இயற்கைப் பாதுகாப்பு:

           இயற்கைக்கு மாறாக அதிகரித்து வரும் நகரமயமாதல், தொழில்மயமாதல், மக்கள் தொகைப் பெருக்கம் போன்ற காரணங்களால் மாசுபட்ட நீர் நிலைகள், வறண்ட நீர் நிலைகள் என இயற்கை வளங்கள் அழிந்து வருகின்றன. நில ஆக்கிரமிப்பு மற்றும் கழிவுகளால் நதி நீர் மாசுபட்டு வருகிறது. தட்பவெப்ப நிலையில்
உருவான மாற்றத்தால், போதிய நீர்வளம் இன்றி நீர்வரத்து குறைந்து மிகவும் பாதிப்பைத் தருகிறது. மழை வளம் குறைந்து விட்டது. நதிகள் இன்றைய சூழலில் கழிவுகளைத் தாங்கும் பள்ளமாக மாறி
வருவதுதான் வேதனையானது.

                   பெருநகரங்களில் இயங்கும் பெரும்பாலான தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர், நகர விரிவாக்கம், சாலை விரிவாக்கம் செய்யப்படுவதற்காக பெருமளவில்
மரங்கள் வெட்டப்படுகின்றன. இதனால், மரங்களில் கூடுகட்டி வாழும் பறவையினங்கள், நிழலில் ஒதுங்கும்
விலங்கினங்கள் தங்க இடமின்றி அழிந்துபோகின்றன. மரங்கள் குறைந்ததால் வெப்பம் அதிகரித்து உயிரினங்கள் அழிவைச் சந்தித்து வருகின்றன. இயற்கை வளங்கள் சுரண்டப்பட்டதால் இன்று அளவுக்கு அதிகமான வெப்பத்தை உணருகிறோம். இயற்கை வளங்கள், மனிதன் உயிர் வாழ பல அற்புதங்களை நமக்கு அளித்து வருகின்றன. நாம்
சுவாசிக்கும் காற்றிலிருந்து நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான மூலப்பொருள்களையும் இயற்கை
தருகிறது. 

          இயற்கை வளமிக்க பசுமையான சோலைகள், காடுகள், மரங்கள், உயிரினங்கள், புல்வெளிகள்,
விளைநிலங்கள், ஆறுகள், ஏரிகள், கடலோர நீர் வளம் போன்றவை மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத ஒன்று. எனவே, இயற்கை வளங்களைப் பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமை மட்டுமல்ல, பொறுப்பும் கூட. இயற்கை வளங்களின் அவசியம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை நாம் ஏற்படுத்தி இயற்கையைப் பாதுகாக்க வேண்டும்.

உயிரினப் பாதுகாப்பு :

           இயற்கைச்  சமநிலை மாறுபடாதிருக்க வனவிலங்குகளைப் பாதுகாப்பது அவசியம். மரங்கள் , தாவரங்கள் பெருக்கத்துக்கும், தட்ப வெப்பநிலை சமன்பாட்டுக்கும் காடுகள் பராமரிக்கப்பட வேண்டியது அவசியம்.
ஒரு நாட்டின் இயற்கை வளங்கள் அந்நியச் செலாவணியை ஈட்டித் தருபவை. விலங்குகள், மரங்கள், தாவரங்கள் இருக்கும் இடங்கள் ஒரு நாட்டின் செழிப்பை உணர்த்துகின்றன. சுற்றுலாப் பயணிகளையும் கவர்கின்றன.

           உலகிலேயே வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தை முதன்முதலில் ஏற்படுத்திய நாடு இந்தியாதான். 1972-ல் இந்தியாவில் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது. விலங்குகள் வாழ ஒவ்வொரு நாட்டிலும் உள்ள மொத்த காட்டுப் பகுதியில் 25% ஒதுக்கப்பட வேண்டும் என சர்வதேச ஆராய்ச்சியாளர்கள்
கூறியுள்ளனர். நமது மாநிலத்தில் மொத்த வனப்பரப்பில் 29.32 பரப்பளவில் வன உயிரின காப்பகங்கள் உள்ளன.

****************    **************   ************

 விடைத்தயாரிப்பு

திருமதி.இரா.மனோன்மணி , 

முதுகலைத்தமிழாசிரியை , 

அ.மே.நி.பள்ளி , செக்காபட்டி ,

 திண்டுக்கல்.

*************    **************    **************


GREEN TAMIL  - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய        காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.


திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .

சனி  தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்

ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.

மற்றநாட்களில் தினமும்

 கம்பராமாயணம் உரைத்தொடர்.

சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம்

**************     ***************    ************





Post a Comment

0 Comments