வணக்கம் நண்பர்களே !
பாடப்பகுதியாகவே பதிவுகள் சென்று கொண்டிருக்கின்றனவே. வேறு ஏதேனும் ஒரு பதிவும் தரலாமே என நண்பர் ஒருவர் இன்று தேநீர்க் கடையில் சந்திக்கும் போது சொன்னார். புறப்படும்போது ஒரு பார்சல் ஒன்றும் வாங்கினார்.
என்னவே , காலையில வீட்ல சமைக்கலயா ? என்றேன்.
இல்லவே ! சமைச்சாச்சு. இது மதியத்திற்கு சாப்பிட தொட்டுக்கொள்ள . என்றார்.
வடையா ? என்றேன்.
இல்ல இல்ல . இது கீரைப் பொரியல் என்றார்.
ஆகா ! பிரமாதம். கீரையெல்லாம் இங்கு கிடைக்குதா ? என்றேன்.
ஆமாம். 15 ரூபாய் ஒரு பார்சல். முருங்கைக்கீரை பொரியல் , தேங்காய்ப்பூ போட்டு அவ்வளவு சுவையாக இருக்கும் என்றார். நானும் புறப்படும்போது ஒரு பார்சல் வாங்கிக் கொண்டேன்.
அதுமட்டுமல்ல , அந்தக் கடையில் கேப்பை ரொட்டி, கேப்பைப் புட்டு , அவித்த பாசி்ப்பயறு , தட்டைப்பயறு போன்ற சத்து நிறைந்த தானிய வகைகளும் வைத்திருந்தார்கள் .
உடல் ஆரோக்கியத்திற்கு இவையெல்லாம் நம்முடைய தினசரி உணவில் இருந்த தானிய வகைகள். என்னுடைய பள்ளிப்பருவத்தில் இப்படி ருசித்த நினைவுகள் பல உண்டு. இன்று , பாலித்தீன் பைகளில் அடைக்கப்பட்ட மசால் பொருட்களை வாங்கித்தின்று , சத்தில்லாமல் இன்றைய சந்ததி சக்கையாக வளர்ந்து கொண்டிருக்கிறது.
அன்று கம்பரிசியை நன்கு ஊறவைத்து , மறுநாள் அல்லது மறுநாளைக்கு மறுநாள் துணிப்பொட்டலத்திலிருந்து பிரித்தால் , சின்னக் குழந்தைகளுக்கு வாயில் பல் முளைக்க எட்டிப்பார்ப்பது போல முளைக்கூரிக் கொண்டு இருக்கும். அதை கருப்பட்டியுடன் கலந்து ருசிக்க அடேயப்பா என்ன சுவை ? என்ன சுவை ?
அதை மற்றுமோர் பதிவில் விரிவாகக் காண்போம். இன்று சொல்ல வந்தது கீரைகள்தான்.
அப்போது நான் இரண்டாம் வகுப்பு படித்த ஞாபகம். நாங்க நாலஞ்சுபேர் சேர்ந்து ஒரு சேக்காளியா எப்போதும் அலைவோம். ஒரு சனிக்கிழமையன்று ஒரு திட்டம் தீட்டினோம்.
இந்தா பாருலேய் , நீ எண்ணெ கொண்டு வந்திரு. நீ வெங்காயம் , உப்பு , நீ வடச்சட்டி , நான் கடுகு , தீப்பெட்டி என ஒவ்வொருவரும் ஒரு பொருள் கொண்டுவரணுமென திட்டம் போட்டோம்.
பிஞ்சைக்குச் சென்று கீரைகளைப்புடுங்கி , வரும் வழியில் கண்மாயில் நன்கு அலசி , வேலிக்காட்டிற்குள் சென்று பூமுள்ளாகப் பொறுக்கி , மூன்று கல்லால் அடுப்பு வைத்து தீமூட்டத் தொடங்கினோம்.
அந்த வயதில் என்ன தெரியுமோ அது படி கீரையைப் போட்டு வதக்கி , ஆளுக்கொரு வாயாகப் பிரித்துத் தின்றோம்.
எனக்குத் தெரிய எனது முதல் சமையல் அதுதான் என நினைக்கிறேன். அப்போதெல்லாம் கீரையில் இன்னென்ன சத்து இருக்கு அப்படியெல்லாம் தெரியாது. கீரை நமக்கு ஓசியில் கிடைக்கும் உணவுப் பொருள் . வதக்கித்தின்னா நல்லாருக்கும். அவ்வளவுதான் தெரியும்.
மழைக்காலத்தில் பிஞ்சையில் பயிரிடப்பட்ட பாசி , தட்டை , உளுந்து இவற்றின் ஊடாக களையாக முளைத்து வளரும் கீரை. கோழிக்கொண்டைக்கீரை , பருப்புக்கீரை என அங்கங்கே முளைத்து வளரும்.
வயல் வேலை முடிந்து வீட்டுக்குத் திரும்புகையில் ஒவ்வொருவர் ஓலைப்பெட்டியினுள்ளும் ஏதேனும் ஒரு கீரை இருக்கும். வயலில் பருத்தியின் ஊடாக பாத்தியின் இருபுறத்திலும் அகத்திச்செடி போடுவார்கள். ஆட்களுக்கும் , ஆடுகளுக்கும் நல்ல உணவு அது. அப்போதெல்லாம் அகத்திக்கீரை குடற்புண்ணுக்கு நல்ல மருந்து என தெரியாது. விவசாய காலமான அந்த நான்கைந்து மாதங்கள் வயிறு ரொம்ப செழிப்பாக இருக்கும்.
காலச்சக்கரம் உருண்டோடியது. கடைக்குப் போய் காய்கறி அவ்வப்போது வாங்குவோம். தலைச்சுமையாகவே வீதி வீதியாக கூவி அழைத்து வரும் பாட்டிகளைப் பார்க்க முடிகிறது. எங்கள் வீதியில் கீரை விற்று வந்த பாட்டியை இரண்டு பெண்கள் சுற்றிக் கொண்டார்கள்.
என்னா கீர இருக்கு பாட்டி ?
முருங்கெ , அகத்தி , பாலாக்கு . அரக்கீர , பொன்னாங்கன்னி இருக்குமா . உனக்கு என்ன வேணும் ?
பாலாக்கீர ஒரு கட்டு எவ்வளவு ?
பத்து ரூவா மா
அஞ்சு ரூவானு ரெண்டு கட்டு தாரது ?
மின்னாடிலாம் அஞ்சு ரூவாதாமா. கெரனாவுக்குப் பிறகு எங்களுக்கே ஏழு ரூவா சொல்றாய்ங்க.
எட்ரூவானு வாங்கிக்கோ !
ரெட்டு கட்டு வாங்குறோம் பாட்டி . பதினஞ்சு ரூவானு கொடுங்க.
பாட்டியும் தலைச்சுமையை இறக்கி 15 ரூவாய் என கொடுத்து விட்டுச்சென்றார்.
தலைச்சுமையாய் வரும் பெண்களிடம் பெரும்பாலும் பேரம் பேசுவதில்லை. அது வெண்டைக்காயாக இருந்தாலும் சரி. வெள்ளரிக்காயாக இருந்தாலும் சரி.
மூன்று நாட்கள் கழித்து , கீரைக்கட்டு வாங்கிய ஒரு பெண்மணி அந்தக் கீரையை குப்பையில் போட்டார்.
ஏம்மா ! கீர வைக்கலயா ?
இல்லக்கா . மறுநா வப்பம்னு ப்ரிட்சுக்குள்ள திணுச்சு வச்சேன். மறந்துட்டேன். அழுகுப் போச்சு என்றார்.
கீரை ப்ரிட்சுக்குள்ள வைக்கும் உணவுப் பொருள் அல்ல. வாங்கினால் அதை அன்றே சமைத்து விட வேண்டும். அப்போதுதான் அதன் முழு சத்தும் நமக்குக் கிடைக்கும்.
உடம்புக்கு முடியலனு டாக்டர்கிட்ட.போனா பழங்கள் சாப்புடுங்க. தினமும் ஒரு கீர சாப்பாட்டுல சேத்துக்கோங்க எனச் சொல்வார். காரணம் கீரையில் அவ்வளவு சத்துக்கள் இருக்கின்றன. ஒவ்வொரு கீரையிலும் ஒவ்வொரு சத்து. பொன்போன்ற மேனிக்கு பொன்னாங்கன்னிக் கீரை என்றான் நம் தமிழன். மூட்டு வலியைச் சரிசெய்ய முடக்கறுத்தான் என்றொரு கீரை.
நம் வீட்டச்சுத்தி இருக்குற செடிகள் ஒவ்வொன்றிலும் அவ்வளவு மருத்துவப் பயன்கள் கொட்டிக் கிடக்கின்றன. அதன் மகத்துவம் நமக்குத் தெரியவில்லை.
அருந்தமிழ் மருத்துவம் 500 அப்படினு ஒரு புத்தகத்திலுள்ள ஒரு பாடல்னு ஒன்று படித்தேன். அவ்ளோ அற்புதமான பாடல் அது. நீங்களும் படிச்சுப் பாருங்க. நம் முன்னோர்கள் எவ்வளவு பெரிய மூளக்காரங்கனு நமக்குத் தெரியும்.
மூளைக்கு வல்லாரை
முடிவளர நீலிநெல்லி
ஈளைக்கு முசுமுசுக்கை
எலும்பிற்கு இளம்பிரண்டை
பல்லுக்கு வேலாலன்
பசிக்குசீ ரகமிஞ்சி
கல்லீரலுக்கு கரிசாலை
காமாலைக்கு கீழாநெல்லி
கண்ணுக்கு நந்தியாவட்டை
காதுக்கு சுக்குமருள்
தொண்டைக்கு அக்கரகாரம்
தோலுக்கு அருகுவேம்பு
நரம்பிற்கு அமுக்குரான்
நாசிக்கு நொச்சிதும்பை
உரத்திற்கு முருங்கைப்பூ
ஊதலுக்கு நீர்முள்ளி
முகத்திற்கு சந்தனநெய்
மூட்டுக்கு முடக்கறுத்தான்
அகத்திற்கு மருதம்பட்டை
அம்மைக்கு வேம்புமஞ்சள்
உடலுக்கு எள்ளெண்ணை
உணர்ச்சிக்கு நிலப்பனை
குடலுக்கு ஆமணக்கு
கொழுப்பெதிர்க்க வெண்பூண்டே
கருப்பைக்கு அசோகுபட்டை
களைப்பிற்கு சீந்திலுப்பு
குருதிக்கு அத்திப்பழம்
குரலுக்கு தேன்மிளகே!
விந்திற்கு ஓரிதழ்தாமரை
வெள்ளைக்கு கற்றாழை
சிந்தைக்கு தாமரைப்பூ
சிறுநீர்க்கல்லுக்கு சிறுகண்பீளை
கக்குவானுக்கு வசம்புத்தூள்
காய்ச்சலுக்கு நிலவேம்பு
விக்கலுக்கு மயிலிறகு
வாய்ப்புண்ணிற்குமணத்தக்காளி
நீர்க்கோவைக்கு சுக்குமிளகுநீர்
நீரிழிவிற்கு ஆவாரைக்குடிநீ்ர்
வேர்க்குருவிற்கு பனைநுங்குநீர்
வெட்டைக்கு சிறுசெருப்படையே
தீப்புண்ணா குங்கிலியவெண்ணை
சீழ்காதுக்கு நிலவேம்பு
நாப்புண்ணிற்கு திரிபலாவேலன்
நஞ்செதிர்க்க அவரிஎட்டி
குருதிகழிச்சலுக்கு துத்திதேற்றான்
குருதிகக்கலுக்கு இம்பூரல்வேர்
பெரும்பாட்டிற்கு அத்திநாவல்
பெருவயிறுக்கு மூக்கிரட்டை
கக்கலுக்கு எலுமிச்சைஏலம்
கழிச்சலுக்கு தயிர்சுண்டை
அக்கிக்கு வெண்பூசனை
ஆண்மைக்கு பூனைக்காலி
வெண்படைக்கு பூவரசு கார்போகி
விதைநோயா கழற்சிவிதை
புண்படைக்கு புங்கன்சீமையகத்தி
புழுகுடற்கு வாய்விளங்காமணக்கு
கால்வெடிப்பா மருதாணிகிளிஞ்சல்
கரும்படை வெட்பாலைசிரட்டை
கால்சொறிக்குவெங்காரபனிநீர்
கானாகடிக்கு குப்பைமேனிஉப்பே
உடல்பெருக்க உளுந்துஎள்ளு
உளம்மயக்க கஞ்சாகள்ளு
உடல்இளைக்க தேன்கொள்ளு
உடல் மறக்க இலங்கநெய்யே
அருந்தமிழர் வாழ்வியலில்
அன்றாடம்சிறுபிணிக்கு
அருமருந்தாய் வழங்கியதை
அறிந்தவரை உரைத்தேனே!
அடேயப்பா ! நம் மருத்துவத்தின் மகத்துவத்தை எடுத்துரைக்கும் அற்புதமான பாடல். இதுல மொத்தம் 68 வரிகள் இருக்கு. இதை வாசிக்கிற நீங்க இந்த 68 வரிகளையும் மனப்பாடம் பண்ணிட்டிங்க அப்படினா உங்களுக்கு ஒரு புத்தகம் பரிசாக் கொடுத்துருவோம். சரியா ?
வாழ்த்துகள்.
மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , இளமனூர் , மதுரை - 97861 41410
*************** ************* ************
GREEN TAMIL - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.
திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .
சனி தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்
ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.
மற்றநாட்களில் தினமும்
கம்பராமாயணம் உரைத்தொடர்.
சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம்
************** *************** ********
0 Comments