9 ஆம் வகுப்பு தமிழ் - இயல் 1- கவிதைப்பேழை - தமிழ்விடு தூது - காட்சிப்பதிவு & எழுத்தில் பாடமே படமாக ! - 9 TAMIL - EYAL 1 - TAMILVIDU THOOTHU

 

                      வகுப்பு - 9 , தமிழ் 

              இயல் 1 - கவிதைப்பேழை

                          தமிழ்விடு தூது 


**************      ***************    ***********

      வணக்கம் நண்பர்களே ! நாம் கடந்த வகுப்பில் முதல் இயலில் தமிழோவியம் பார்த்தோம். இன்று நாம் தமிழ்விடு தூது பகுதியைப் பார்க்க இருக்கின்றோம். நம்முடைய ஐயா அவர்கள் அற்புதமாக விளக்கியிருக்கிறார். முதலில் நூல்வெளி பகுதியைக் காண்போம்.

நூல்வெளி 

                     தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் 'தூது' என்பதும் ஒன்று. இது, 'வாயில் இலக்கியம்', 'சந்து இலக்கியம்' என்னும் வேறு பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. இது தலைவன் தலைவியருள் காதல் கொண்ட ஒருவர் மற்றொருவர்பால் செலுத்தும் அன்பைப் புலப்படுத்தித் தம்முடைய கருத்திற்கு உடன்பட்டமைக்க அறிகுறியாக மாலையை வாங்கிவருமாறு' அன்னம் முதல் வண்டு ஈறாகப் பத்தையும் தூது விடுவதாகக் 'கலிவெண்பா'வால் இயற்றப்படுவதாகும். 

                              தமிழ்விடு தூது, மதுரையில் கோவில்கொண்டிருக்கும் சொக்கநாதர் மீது காதல்கொண்ட பெண் ஒருத்தி, தன் காதலைக் கூறிவருமாறு தமிழ்மொழியைத் தூதுவிடுவதாக அமைந்துள்ளது. இந்நூல் 268 கண்ணிகளைக் கொண்டுள்ளது. தமிழின் சிறப்புகளைக் குறிப்பிடும் சில கண்ணிகள் இப்பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ளன. இந்நூலை 1930இல் உ.வே.சா. முதன் முதலில் பதிப்பித்தார். இதன் ஆசிரியர் யார் என அறிந்துகொள்ள இயலவில்லை.

அடுத்ததாக நுழையும்முன் பகுதியில் உள்ள செய்தியைக் காண்போம்.

நுழையும்முன்

       தமிழின் பெருமையைப்பாடக் கவிஞர்கள் கையாளும் உத்திகள் பற்பல. கவிதை, அதற்கொரு கருவி. கிளி, அன்னம், விறலி, பணம், தந்தி என்று பல தூது வாயில்களைப்பற்றி அறிந்துள்ளோம். தமிழையே தூதுப் பொருளாக்கியள்ளது 'தமிழ்விடு தூது'. தமிழின் இனிமை, இலக்கிய வளம், பாச்சிறப்பு, சுவை, அழகு, திறம், தகுதி ஆகியன இச்சிற்றிலக்கியத்தில் விரவியுள்ளன.

பாடலைக்காணும் முன் நம்முடைய பெரும்புலவர். திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தைக் காண்போம்.



                சீர்பெற்ற செல்வம்

தித்திக்கும் தென் அமுதாய்த் தெள்அமுதின் மேலான

முத்திக் கனியே என் முத்தமிழே - புத்திக்குள்

உண்ணப் படும் தேனே உன்னோடு உவந்து உரைக்கும்

விண்ணப்பம் உண்டு விளம்பக்கேள் - மண்ணில்

குறம் என்றும் பள்ளுஎன்றும் கொள்வார் கொடுப்பாய்க்கு

உறவுஎன்று மூன்று இனத்தும் உண்டோ - திறம் எல்லாம்

வந்து என்றும் சிந்தா மணியாய் இருந்தஉனைச்

சிந்து என்று சொல்லிய நாச்சிந்துமே* - அந்தரமேல்

முற்றும் உணர்ந்த தேவர்களும் முக்குணமே பெற்றார்

குற்றம் இலாப் பத்துக் குணம்பெற்றாய் -  மற்றொருவர்

ஆக்கிய வண்ணங்கள் ஐந்தின் மேல் உண்டோநீ

நோக்கிய வண்ணங்கள் நூறு உடையாய் -  நாக்குலவும்

ஊனரசம் ஆறு அல்லால் உண்டோ செவிகள் உணவு

ஆன நவரசம் உண்டாயினாய் - ஏனோர்க்கு

அழியா வனப்பு ஒன்று அலது அதிகம் உண்டோ

ஒழியா வனப்பு எட்டு உடையாய்....

                                             (கண்ணிகள் 69-76)


பாடலின் பொருள் 


             இனிக்கும் தெளிந்த அமுதமாய் அந்த அமிழ்தினும் மேலான விடுதலைத்தரும் கனியே! இயல் இசை நாடகம் என, மூன்றாய்ச் சிறந்து விளங்கும் என் தமிழே!அறிவால் உண்ணப்படும் தேனே! உன்னிடம் நான் மகிழ்ந்து விடுக்கும் வேண்டுகோள் ஒன்றுள்ளது. அதைக் கேட்பாயாக.

                 தமிழே! உன்னிடமிருந்து குறவஞ்சி, பள்ளு என்ற நூல்களைப் பாடியவர்கள் சிறப்புக் கொள்கின்றனர். நீயும் அவற்றைப் படிக்க எடுத்துக் கொடுப்பாய். அதனால் உனக்குத் தாழிசை, துறை, விருத்தம் என்னும் மூவகைப் பாவினங்களிலும் உறவு ஏதேனும் உண்டோ ?

        பாவின் திறம் அனைத்தும் கைவரப்பெற்று என்றுமே சிந்தாமணியாய் இருக்கும் உன்னை சிந்து என்று கூறிய நா இற்று விழுமன்றோ ?

     வானத்தில் வசிக்கும் முற்றும்  உணர்ந்த தேவர்கள்கூட சத்துவம் , இராசசம், தாமசம் என்னும் மூன்று குணங்களையே பெற்றுள்ளார்கள். ஆனால், நீயோ பத்துக்குற்றங்கள் இல்லாமல் செறிவு, தெளிவு, சமநிலை, இன்பம், ஒழுகிசை, உதாரம், உய்த்தலில் பொருண்ணா, காந்தம் வலி, சமாதி என்னும் பத்துக்குணங்களையும் பெற்றுள்ளாய்.

                           மனிதரால் உண்டாக்கப்பட்ட வண்ணங்கள் வெண்மை, செம்மை, கருமை. பொன்மை, பசுமை என ஐந்திற்கு மேல் இல்லை. நீயோ புலவர்கள் கண்டடைந்த குறில் , அகவல், தூங்கிலச வண்ணம் முதலாக இடை , மெல்லிசை  ஈறாக நூறு வண்ணங்களைக் கொண்டுள்ளாய்.

                         நாவின் மீது பொருந்தும் குறைபாடுடைய உணவின் சுவைகள் ஆறுக்கு மேல் இல்லை. நீயோ செவிகளுக்கு விருந்தளிக்கும் ஒன்பது சுவைகளைப் பெற்றுள்ளாய். தமிழை அடையப் பெறாத மற்றையோர்க்கு அழியாத அழகு ஒன்று உண்டோ? நீயோ நீங்காத அம்மை முதலிய அழகுகள் எட்டினைப் பெற்றுள்ளாய்.

*************     ************    *************

இலக்கணக் குறிப்பு

முத்திக்கனி - உருவகம்

தெள்ளமுது - பண்புத்தொகை

குற்றமிலா - ஈறுகெட்ட எதிர்மறைப்                                               பெயரெச்சம்

நா - ஓரெழுத்து ஒருமொழி

செவிகள் உணவான - நான்காம்                                                                       வேற்றுமைத்தொகை.

சிந்தாமணி - ஈறுகெட்ட எதிர்மறைப்                                                பெயரெச்சம்

பகுபத உறுப்பிலக்கணம்

கொள்வார் - கொள் + வ் + ஆர்

கொள் - பகுதி
வ் - எதிர்கால இடைநிலை
ஆர் - பலர்பால் வினைமுற்று விகுதி

உணர்ந்த - உணர் + த் (ந்) + த் + அ

உணர் - பகுதி
த் - சந்தி, த் - ந் ஆனது விகாரம்
த் - இறந்தகால இடைநிலை
அ - பெயரெச்ச விகுதி

தெரிந்து தெளிவோம்

கண்ணி - இரண்டு கண்களைப் போல்
இரண்டிரண்டு பூக்களை வைத்துத்
தொடுக்கப்படும் மாலைக்குக் கண்ணி
என்று பெயர். அதேபோல் தமிழில்
இரண்டிரண்டு அடிகள் கொண்ட
எதுகையால் தொடுக்கப்படும் செய்யுள்
வகை கண்ணி ஆகும்.

************     ***********    *************


வாழ்த்துகள் மாணவ நண்பர்களே !

மு. மகேந்திர பாபு , தமிழாசிரியர் , இளமனூர் , மதுரை - 96861 41410




**************     *************   ************

GREEN TAMIL  - You Tube - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடங்கள் எளிய , இனிய        காட்சிப்பதிவுடன் பெரும்புலவர் திரு.மு.சன்னாசி ஐயா அவர்களின் விளக்கத்தில் கண்டு மகிழலாம்.


திங்கள் தோறும் பெரிய புராணம் பக்தித் தொடர் .

சனி  தோறும் நாலாயிர திவ்யப் பிரபந்தம்

ஞாயிறு தோறும் தமிழ் இலக்கணம்.

மற்றநாட்களில் தினமும்

 கம்பராமாயணம் உரைத்தொடர்.

சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களும் வரிக்கு வரி விளக்கத்துடன் காட்சிப்பதிவாகக் காணலாம்

**************     ***************    *********

Post a Comment

0 Comments